பெரியார் இடித்து இடித்துச் சொன்ன கருத்து பாட்டாளி கடைத்தேற ஒரே வழி கல்வி, கல்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 23, 2023

பெரியார் இடித்து இடித்துச் சொன்ன கருத்து பாட்டாளி கடைத்தேற ஒரே வழி கல்வி, கல்வி!

வை.திருநாவுக்கரசு

மலேசியாவில் அலோர்ஸ்டார் ரெஸ்ட் ஹவுஸில் பெரியாருக்கு இந்தியர் சங்கம் சார்பில் ஒரு தேநீர் விருந்து நடைபெற்றது. வரவேற்புக் குழு தலைவர்கருணாகர நாயர் ஜே.பி. விருந்துக்கு வந்திருந்த பிரமுகர்களை பெரியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

கூட்டத்திற்கு கருணாகர நாயர் ஜே.பி. தலைமை வகித்தார். தலைவர் முன்னுரையில் - பெரியார் அவர்கள் 25 ஆண்டுகட்கு முன்பு இந்த மலாயா நாட்டிற்கு வந்திருந்தும் அலோர்ஸ்டாருக்கு வராதிருந்துவிட்டார்கள். ஆனால், இந்த முறை இங்கு வந்து நகரை மகிழ்வித்ததற்கு நன்றி தெரிவித்து வரவேற்றுப் பேசினார். காசிநாதன் பெரியார் அவர்கட்கு ஒரு வரவேற்பு பத்திரம் வாசித்தளித்தார். பின்னர் பெரியார் பெருத்த வாழ்த்தொலிகளுக்கிடையே சொற்பெருக்காற்ற ஆரம்பித்தார்.

பெரியார் பேசியதாவது: தமிழ் நாடு இப்போது நல்ல அளவுக்கு வளர்ச்சி யடைந்துள்ளது. அதேபோல இந்த மலாயா நாடும் நல்ல வளர்ச்சியடைந்திருப்பதைக் காண்கிறேன். இந்த நாடு யுத்தத்தின் காரணமாக சற்று பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது மக்கள் நல்ல திருப்தியுடனேயே இருந்து வருவதையும் காண்கிறேன். 1929இல் வந்த போது என்னை இறங்கவிடக் கூடாது என்று சிலர் முயன்றார்கள். ஆனால், இங்குள்ள பல தமிழ்ப் பிரமுகர்களும், முஸ்லிம் சமுதாயத்தினரும் நல்ல ஆதரவளித்து என்னை வரவேற்றார்கள். அந்தப் பயணம் முழுவதும் வெற்றிகர மாகவே நடைபெற்றது. இன்று அப்படிப்பட்ட எதிர்ப்பு எதுவுமே இல்லை. ஏதோ இங்கு சுமார் 10 நாட்கள் வரை தங்குவதாக வந்தேன். மேலும் சில நாட்கள் இருந்தாக வேண்டும் என்கிற நிலையில், மக்களால் விரும்புகிற தன்மையில் இப்போது இருக்கின்றேன். நீங்களென்னை மிக்க அன்போடு வரவேற்று இருக்கிறீர்கள்.

இந்த நாட்டில் நான் முக்கியமாக எதுவும் எடுத்துச் சொன்னதற்கில்லை என்றே எண்ணுகிறேன். ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமை மிகுந்து கட்டுப்பாடாக இருந்து வாழவேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

நம்முடைய திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கத் தொண்டைப் பற்றி இங்கு விவரித்துப் பேச வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் உள்ள தமிழர்கள் யாவரும் அப்படி ஜாதிப் பாகுபாடுகளுடன் வாழ்வதாகத் தெரியவில்லை.

இங்கு ஒருவரையொருவர் நீங்கள் என்ன ஜாதி என்று கேட்கின்ற அவசியம் இல்லை. இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் ஜாதிப் பிரச்சினையில் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இங்கே இருக்கிற "தீண்டாதானும்" உங்களைக் கண்டால் எட்டி உட்காரவும் செல்லுகிறார்கள். இதுவும் மாறுதல் தானே!

தீட்டுப்பட்ட குழாய் நீர்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ரோமத்தைக் கத்தரித்து கிராப்பு வைத்திருந்தால் பள்ளிக்கூடத்தில் படிக்க இடந்தர மாட்டார்கள். ஆனால், இப்பொழுது அவர்களே கிராப்பு வைத்துக் கொள்ளுகிறார்கள். நெற்றியில் எதுவுமில்லை என்றால் பள்ளியில் மாணவர்களை நுழையவிட மாட்டார்கள். ஆனால், இன்று 100க்கு 90 விகிதம் தமிழர்கள் நெற்றியில் எதுவும் வைத்துக்கொள்வதில்லை. 150 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் ரவிக்கை போட்டுக் கொண்டதில்லை. மலையாளத்தில் மார்பில் துணிகூடப் போடக்கூடாது. இன்று பாட்டியம்மா கூட ரவிக்கை போட ஆசைப்படுகிறார்கள். நான் ஈரோடு சேர்மனாக இருந்த பொழுது குழாய்த் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். மக்களெல்லாம் போற்றினார்கள். ஆனால், என் தாயார் மட்டிலும் குழாய்த் தண்ணீர் கூடாது என்றார்கள். காரணம் என்ன? குழாய்த் தண்ணீரை யார் பிடித்து விடுகிறார்களோ, அதில் தீட்டு ஒட்டியிருக்குமே என்பதற்காக! பிறகு திருந்தினார்கள். மாறுதல் வேண்டும்போது பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். அக்கம் பக்கத்தைப் பார்த்து மாறுதல் ஏற்பட்டு விடும். உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மனித சமுதாய வளர்ச்சி எந்த அளவில் கொண்டுபோய் விடுமோ என்ன ஆகுமோ யார் கண்டது?

குறை கூறுவோர் மாறுவர்

நம் நாட்டு ராஜாக்களெல்லாம் கடவுளாக மதிக்கப்பட்டார்கள். கடவுள் அவதாரமென எண்ணப்பட்டார்கள். கடவுளுக்குச் செய்வதெல்லாம் ராஜாவுக்கும் செய்தார்கள். ஆனால், அந்த ராஜாக்களெல்லாம் இன்று என்ன ஆனார்கள்? அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் ராஜாவாக ஆக்கப் பட்டார்கள். ஜமீன்தாரர்களும் இப்படியே ஒழிக்கப்பட்டார்கள். கடவுள் ஒருவனை உயர்ந்தவனாகவும், ஒருவனை தாழ்ந்த வனாகவும் படைத்தார் என்ற வர்ணாஸ்ரம வேதாந்தம் எங்கே போயிற்று? இப்படியே சுதந்திர ஜனநாயக எண்ணத்துடன் ஆராய்ந்தால் மாறுதல் கண்டிப்பாய் கிடைக்கும். நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? 2000 ஆண்டுகளாக சூத்திரர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஒரு பாவமும் அறியாத குழந்தை பிறந்ததும், நடமாட ஆரம்பித்ததும், ஏன் சூத்திரனாக வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டிலும் ஏன் புராணத்திலும், சாஸ்திரச் சம்பிரதாயத்திலும் சூத்திரப்பட்டம் இருக்க வேண்டும் என்று கேட்பது தப்பா? உள்ளதைச் சொல்லி மாறுதல் விரும்பும் எங்களைக் குறை கூறுபவர்கள். தொந்தரவு கொடுப்பவர்கள் ஒரு காலத்தில் அதே மாறுதலுக்காக உழைப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அடிமை முத்திரை குத்தப்பட்டவர்களாக விலை கொடுத்து வாங்கும் அடிமைகளாக நீக்ரோக்கள் நடத்தப்பட்டார்கள். லிங்கன் தோன்றினார். மாறுதலைச் செய்தார். இன்று அந்தச் சமூகம், பிற இனத்தவர்களுடன் சரிசமமாக வாழும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது.

தமிழர் கோவிலில் 

வடமொழி மந்திரம்

சீனாவில் சன் யாட் சன் தோன்றினார். மாறுதலை உண்டு பண்ணினார். அய்ரோப் பாவின் நோயாளி எனக் கூறப்பட்ட துருக்கி நாட்டிலே கமால் பாட்சா தோன்றி மாறுதலை உண்டு பண்ணினார். ஆனால், நம் தமிழ்நாட்டில் சித்தர்களும், வள்ளுவரும், புத்தரும் தோன்றி ஜாதி ஒழிய வேண்டும். மாறுதல் வேண்டும் என்று கூறியும் மாறுதல் காண முடியவில்லையே! உழைப்ப தெல்லாம் நம்மவர்களாக இருந்தும், கீழ் ஜாதியாகத் தானே வாழ்கிறோம்! மலையாள நாட்டில் ஈழவர்கள் வீதியில் நடக்கக் கூடாது என்ற சம்பிரதாயமெல்லாம் மாறி மாறுதல் ஏற்பட்டு, இன்று வீதியில் நடக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் தீண்டப்படாதவன் இருக்கத்தானே செய்கிறான்! அது போகட்டும். நம் தாய் நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர். ஆனால், தமிழுக்கு இடமில்லை. கோவிலில் வடமொழியில் மந்திரம் ஓதப்படுகிறது. ஹிந்தி படித்தால்தான் பதவி கிடைக்கும். தமிழில் சங்கீதம் வராது. தெலுங்கில்தான் சங்கீதம் வரும்! சாஸ்திரம் புராணம் எல்லாம் வடமொழியில்!

காந்தியார் என்ன ஆனார்? மகாத்மாவாகி, மகானான அவரே மூன்று குண்டுகளுக்கு இரையானாரே! சூத்திரன் படிக்கக் கூடாது என்கிறது மனுதர்மம். எல்லோரும் படிக்க வேண்டுமென்றார் காந்தியார். உடனே பாய்ந்தன மூன்று குண்டுகள். முஸ்லிம் மதமா, இந்து மதமா? எல்லாம் ஒன்றுதான் என்றார் காந்தியார். பாய்ந்தன மூன்று குண்டுகள். எனவே மாறுதலுக்கு எதிர்ப்பு இருந்துதான் தீரும். அதைப் பற்றிக் கவலை இல்லை.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் குடியேறிய மலாயா நாட்டிலும் தமிழர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தொழிலாளியாக, குறைந்த ஊதியம் பெறும் உழைப்பாளியாக உழல்கிறார்கள். இதற்குக் காரணம் கல்வியறிவின்மையே. அவர்கள் கல்வி பெறாமல் அழுத்தி வைத்திருந்த சமுதாய அமைப்பும் மற்றொரு காரணம்.

இவ்வாறு பெரியார் ஈ.வெ.இராமசாமி அலோர்ஸ்டார் இந்தியர் சங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

(வை.திருநாவுக்கரசு அவர்கள் (1955) வெளியிட்ட "மலாயாவில் பெரியார்" என்ற நூலிலிருந்து...)


No comments:

Post a Comment