புதிய தமிழ் நாடு என்ற தேசத்தை உருவாக்கிய பெரியாரின் பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 16, 2023

புதிய தமிழ் நாடு என்ற தேசத்தை உருவாக்கிய பெரியாரின் பிறந்த நாள்

சபா நாவலன்

பிரித்தானிய காலனியாதிக்க அரசு ஆசிய நாடுகளில் ஏற்றுமதி செய்து ஒட்டவைத்த முதலாளித்துவ ஜனநாயகம் முன்னைய நிலப்பிரபுத்துவ அடிமை சமூக அமைப்பை முற்றாக அழித்துவிடவில்லை. அதிகாரவர்க்கத்தின் ஆதிக்க அமைப்புகளில் பின் தங்கிய பண்பாட்டுமுறை மீண்டும் இறுக்கமாகக் குடிகொண்டது. ஜாதிய அமைப்பு முறை ஒட்டு ஜனநாயகத்திற்கு இசைவாக்கப்பட்டு அதிகாரத்தின் பிற்போக்குக் கூறுகளுக்குத் துணை சென்றது. பிரித்தானிய அரசின் காலனிய அதிகாரம் இந்திய பார்ப்பனீய அதிகாரத்திற்கு மாற்றப்பட்டது.

இந்திய ஜனநாயகம்

ஜாதி என்ற சமூகப் பண்பாட்டு சட்டகத்தைப் பயன்படுத்தியே இந்தியாவிலும், ஏனைய தெற்காசிய நாடுகளிலும் முதலாளித்துவம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. உள்ளூர் முதலாளித்துவ உற்பத்தி முறை திணிக்கப்பட்டது. முதலாளித்துவ உற்பத்தி முறை வழங்கும் பொதுவான ஜனநாயக அமைப்பு முறை தலித்துக்கள் என்று அழைக்கப்படும் சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள ஒடுக்கப்பட்ட ஜாதி களுக்கு முற்றாக நிராகரிக்கப்பட்டது. முழுமையான ஜனநாயகத்தை சிறப்புச் சலுகைகளுடன் பார்ப்பனீய ஆதிக்க வர்க்கம் அனுபவித்துக்கொள்ள, ஏனைய ஜாதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அது வழங்கப்பட்டது. சமூகம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சூத்திரர்களும், பார்ப்பனர்களும் எனப் பெயரிடப்பட்டது. முன்னைய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையுடன் ஒப்பிடும் போது முதலா ளித்துவம் முற்போக்கானதாக அமைந்திருந் தாலும், காலனி ஆதிக்க நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த ஒரு சமூகப் பிரிவினருக்கு மட்டுமே வழங்கப் பட்டது. இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையிலிருந்த ஜாதீய சமூகம் மூன்றாம் உலக நாடுகளின் முதலாளித்துவ உற்பத்தி முறையை இலகுவாக நிறுவ வசதி யேற்படுத்திக் கொடுத்தது.

இந்திய முதலாளித்துவம்

ஏற்கெனவே காணப்பட்ட சமூக சமயச் சட்டத்தை எதிர்க்காத, பின் தங்கிய மரபின் அடிப்படையை பாதிக்காத நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கான மாற்றத்தை மட்டுமே இந்திய அதிகாரவர்க்கமும் உள்வாங்கிக்கொண்டது. நவீன தொழில் புரட்சியை இந்த நுண்ணிய குறிப்பான நிலையில் ஏற்றுக்கொண்ட இந்துத்துவ முதலாளித்துவமே இந்தியா முழுவதும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இந்துத்துவ சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள்ளேயே பொருளாதாரமும், அதன் நவீன கூறுகளும் வளர்ச்சியடைந்தன. தேசங்களாக உருமாறக்கூடிய நிலையிலிருந்த ஒவ்வொரு பகுதிகளும் ஹிந்துத்துவ கோட்பாட்டினுள் இணைக்கப்பட்டாலும், பார்ப்பனீய அதிகார வர்க்கம் முழுவதுமாக இன்னொரு ஏகாதிபத்திய சார்பு தேசம் போன்றே செயற்பட்டது.

இதனால் முதலாளித்துவ ஜனநாயகம் கூட அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டது. 90களில் அய்ரோப்பாவில் ஏற்பட்ட தகவல் தொழில் நுட்பத்தின் பாய்ச்சல் நிலை வளர்ச்சியின் போதும், 90களின் இறுதிகளில் தீவிரமடைந்த உலகமயமாதல் சுரண்டலின் போதும், இந்தியாவும், சீனாவும் உலகின் புதிய வல்லரசுகளாக வளர்ச்சியடையும் என்ற கருத்து மேற்கு பொருளாதார அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தியா மேலும் வறுமையும், அடிமைத்தனமும் நிறைந்த நாடாகவே தேய்ந்துகொண்டிருந்தது. உலகமயமாதலின் போது கூட முதலாளித்துவ உற்பத்தி முறை புதிய வகையில் பரவலாக்கப்பட்டாலும், முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறைகளும், உற்பத்தி உறவுகளும் ஜாதீய சட்டகத்தைப் பேணுவதன் ஊடாகப் பாதுகாக்கப்பட்டன. இதுவே பார்ப்பனீய அதிகாரவர்க்கம் சந்தையையும், உற்பத்திக் கருவிகளையும் தமது ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள துணை சென்றன.

பெரியாரின் வெற்றி

முதலாளித்துவ ஜனநாயக அமைப்பை அனைத்து மக்களுக்குமானதாக மாற்ற வேண்டுமானால் ஜாதிய சமய பாண்பாட்டு அடுக்கை உடைத்தெறிய வேண்டிய தேவை ஏற்பட்டது. மாவோயிச கட்சிகள் உட்பட்ட புரட்சிகர அமைப்புகள் இந்த செயற்பாட்டைக் கருத்தில் கொள்ளாத ஒரு காலத்தில் பெரியார் தனது கோட்பாட்டை முன்வைக்க ஆரம்பித்தார். பெண் விடுதலை, சமூக நீதி, கல்வி, பண்பாட்டு வளர்ச்சி என்ற அனைத்துத் தளத்திலும் ஏகாதிபத்தியம் பார்பனீய அதிகாரவர்க்கத்தோடு இணைந்து உருவாக்க முற்பட்ட இந்திய முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்தார். கோட்பாட்டுரீதியாக வரையறுத்துக் கொள்ளாத மிகபெரும் கோட்பாட்டு அரசியலை திராவிடம் என்ற பெயரில் முன்வைத்து வெற்றிகரமாகச் செயற்படுத்தினார்.

பெண் விடுதலை

முன்னேறிய முதலாளித்துவ ஜனநாயகத்தில் பெண்களின் உரிமைக்கான குரல் அய்ரோப்பாவில் இயக்கமாக எழவில்லை. பெரியார், பெண்கள் விரும்பிய உடையை அணிய வேண்டும் என்றும், பெண்களுக்குக் கல்வியில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பெண்ணுரிமையை இயக்கமாக முன்னெடுத்தார்.

பெண்கள் தமது பாதம் வரைக்கும் மூடிக்கொள்ளும் சட்டையே அணிய வேண்டும் என்பது சமூகச் சட்டமாக அய்ரோப்பிய நாடு களில் காணப்பட்டது. ஆண்கள் போன்று உடையணிந்துகொள்வது, முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த அய்ரோப்பிய நாடுகளிலேயே தடைசெய்யப்பட்டிருந்தது. 1930களில் பிரான்சில் பெண்கள் தாம் விரும்பிய உடையை அணிந்துகொள்வதற்காக பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. பலர், குறிப்பாகப் பெண்கள் ஆண்கள் போன்ற ஆடை அணிந்ததற்காகவும், உள்ளாடை அணிந்ததற்காகவும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். 1930இல் இங்கிலாந்து விம்பிள்டனில் நடைபெற்ற டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் லில்லி டு அல்வாரேஸ் என்ற வீராங்கனை ஆண்கள் போன்ற ஆடை அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது படத்தை வெளியிட்ட "டெயிலி மெயில்" என்ற வலதுசாரி நாளிதழ் அவரை அடித்துத் துன்புறுத்த வேண்டும் எனச் செய்தி வெளியிட்டது.

அய்ரோப்பியப் பெண்கள் தமக்கு வசதியான ஆடை அணிவதற்காக 1945ஆம் ஆண்டுவரை தீவிரப் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. கைது, சிறைத்தண்டனை, ஊடகங்களின் அவமதிப்பு, சமூகப் புறக்கணிப்பு போன்ற அனைத்திற்கும் எதிராக பெண்களின் போராட்டம் வெற்றிபெற இரண்டு தசாப்தங்கள் கடந்தன. ஆனால், அதே போராட்டத்தை சமூகப் புரட்சியாக நடத்தியவர் பெரியார்.

ஜாதியத்திற்கு எதிரான முதலாளித்துவப் புரட்சி

பெரியாரின் ஜாதிய அவமானத்திற்கு எதிரான புரட்சி மத மறுப்பாகவும், குறிப்பாக ஜாதிய அடிமைத்தனத்தை தனது கோட்பாடாகக் கொண்ட இந்து மத மறுப்பாகவும் விரிவடைந்திருந்தது. ஜாதிய அமைப்புகளுக்குள்ளிருந்த பொருளாதாரக் கட்டுமானத்தை உடைத்து ஜனநாயக மயப்படுத்திய பெரியாரின் போராட்டம் இந்தியாவிற்கு மட்டுமன்றி தெற்காசியாவிற்கே முன்னுதாரணமாக அமைந்தது.

தமிழ்நாட்டில் தேசியப் பொருளாதாரமும், தேசியமும் முளைவிட ஆரம்பித்தது; பார்பனீய ஆதிக்கம் சிறிது சிறிதாக அழிய ஆரம்பித்தது; வட இந்தியாவைப் போலன்றி, தமிழ் நாட்டில் நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்தி முறை சிதைவடைய ஆரம்பித்தது. பெரியாரின் வழியில் வந்த வாக்குக் கட்சிகள், அவரின் கோட்பாடுகளுக்கு மக்கள் மத்தியிலிருந்த ஆளுமையைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதால், திராவிடக் கட்சிகளாகவே தம்மை முன் நிறுத்திக்கொண்டன. பெரியாரின் வழியிலான பல்வேறு சீர்திருத்தங்கள் தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த அய்ரோப்பிய முதலாளித்துவத்தின் நிலைக்கு இட்டுச் சென்றன. குறிப்பாக கலைஞர் ஆட்சியிலிருந்த காலத்தில் சட்டமாக்கப்பட்ட பல திருத்தங்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தை அனைவருக்குமானதாக்கியது. பெரும் நிலப்பிரபுக்கள் செயலிழந்து போயினர்; கல்வியில் பெண்களின் பங்கு இந்தியாவின் ஏனைய மாநிலங்களைத் திரும்பிப்பார்க்க வைத்தது.

தேசியம்

தேசியம் என்பது மொழி வெறியல்ல, மத வெறியல்ல, ஜாதீய வெறியல்ல; தேசியப் பொருளாதாரமும் அதனை இணைக்கும் பொதுவான மொழியும், பழைய பண்பாட்டுக் கூறுகளின் முன்னேறிய பகுதிகளிலிருந்து வளர்ச்சியடைந்த கலாச்சாரமும், மக்களை இணைக்கும் தொடர்ச்சியான நிலப் பரப்பிற்குள்ளிருந்தே தேசங்கள் தோற்றமடையும். இவ்வாறான தமிழ்நாடு என்ற முன்னேறிய தேசத்தின் வளர்ச்சிக்கு பெரியாரின் பங்களிப்பு ஆதாரமாக அமைந்தது. உலகமயமாக்கல் உலகத்தின் அனைத்து நாடுகளையும் அழிவை நோக்கியே இட்டுச்சென்றது. வளர்ச்சியடைந்து கொண்டிருந்த மெக்சிக்கோ போன்ற தேசங்கள் சிதைந்து சின்னாபின்னமாகின. சீனா உலகமயமாதலைப் பயன்படுத்திக்கொண்டு புதிய ஆதிக்க நாடாக முளைவிட்டது. தமிழ்நாடு கூட உலகில் உலகமயமாக்கலைப் பயன்படுத்திக்கொண்ட மிகச் சில தேசங்களில் ஒன்றாகும். அதற்கு அடிப்படையான காரணமாக அமைந்தது, பெரியாரின் கோட்பாடுகளும், அதனை அடிப்படையாகக் கொண்ட திராவிடக் கட்சிகளின் இருப்பும் தான்.

மத வெறியும் மொழி வெறியும்

இன்றும் பின் தங்கிய நிலப்பிரபுத்துவ சிந்தனையைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகளும், மொழியை மட்டுமே தேசியக் குறியீடாக முன்வைக்கும் விதேசிகளான நாம் தமிழர் கட்சியும் தமிழ் நாட்டில் தலைகாட்ட முடியாமல் மரணித்துப்போவதற்கு பெரியாரின் கோட்பாடுகளே அடிப்படைக் காரணம். அமர்த்தியா சென் போன்ற பொருளாதார அறிஞர்கள் அய்ரோப்பாவின் வளர்ச்சியோடு தமிழ்நாட்டை ஒப்பிடுகிறார்கள் என்றால் அது பெரியார் போராடிப் பரவலாக்கப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகமே.

ஜாதிய அடுக்குகளுக்கு இடையேயான பொருளாதார உறவு முறையாகச் சுருக்கப்பட்டிருந்த இந்திய முதலாளித்துவத்தையே மாற்றி முதலாளிகள் - தொழிலாளிகளுக்கு இடையேயான முரண்பாடாக தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது பெரியாரின் கோட்பாடுகள் ஊடாகவே.

இந்த முரண்பாடுகள் பற்றி தெளிவான கோட்பாட்டை மார்க்சிய லெனினிய அமைப்புகள் முன்வைத்திருந்தால், இன்றைய இந்தியா இன்னும் வேறுபட்டதாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment