தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு அறிக்கை

 "உடல் உறுப்புகள் கொடை கொடுப்போருக்கு அரசு மரியாதை"
மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம் நம் முதலமைச்சர்!


உடல் உறுப்புகளைக் கொடையாகக் கொடுப்போருக்கு, அரசு மரியாதை அளிக்கப்படும் என்று நமது 'திராவிட மாடல்' அரசின் முதலமைச்சர் அறிவித்திருப்பது மற்ற மாநிலங்களுக்கு முன்னு தாரணமானது & மாமனித நேயம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பல விபத்துகள் காரணமாக  மூளைச்சாவு அடைந்து உயிருக்குப் போராடும் நோயாளிகளின் முக்கிய உடல் உறுப்புகள் - வாழும் மற்றவர்களுக்கு  பயன்படுத்தப்பட்டு மற்ற மனிதர் வாழ்வில் ஒரு புதுயுகத்தை, புதுவாழ்வை ஏற்படுத்த உதவிடும் பெற்றோர்களை அரசும் நாமும் எப்போதும் பாராட்டி நன்றி கூறி வருகிறோம்.

அப்படித் திடீரென்று இத்தகைய நிலைக்குள்ளாகும் இளைஞர்கள்  மற்றும் பலரது உறுப்புகளை மறுபயன் மூலம் மனித வாழ்வுக்கு ஒரு புதுத் திருப்பம் ஏற்படுத்தப்படுவது உண்மையான தொண்டறம் ஆகும்!

அப்படி தங்களது உறுப்புக் கொடை மூலம் உண்மை மனிதநேயத்தின் உருவமாகும் அவர்களது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று நமது திராவிட மாடல் அரசின், முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு, ஓர் எடுத்துக்காட்டான மாமனிதநேயமாகும்!

அரசு மரியாதை அத்தகையவர்களுக்கு என்பது, ஒரு புதுத் திருப்பமாகும்.

மனித மாண்பைப் போற்றும் செயல்!

தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி என்பது, ஒரு தனித் தன்மையான, சாமான்யர்களையும் சமூகத்தில் முக்கிய மாமனிதர்களாக மதித்து, அவர்களது தியாகத்தை, மனித மாண்பை,  உயர்த்திடும் ஆட்சி என்பதை இதன் மூலம் உலகுக்கே சீரிய அறிவிப்பின் மூலம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. 

அரசு மரியாதையுடன்  இறுதி நிகழ்வுகள் நடந்திருக்குமாயின் அக்குடும்பத்தின் பின்வரும் பல தலைமுறைகள், இதனை மறக்காது, மனித சமூகத்திற்குப் மேலும் பலவாறு தொண்டாற்றத் தூண்டும் வகையில், ஒரு நற்சான்றிதழினை அக்குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுதல் மேலும் அவர்களைப் பெருமைப்படுத்தி, நன்றி கூறும் அரிய செயலாக அமையும்! அரசும் மருத்துவத் துறையும் யோசிக்குமாக.

தந்தை பெரியார் கூறும் மானிடப் பற்றுக்கு இந்த உடல் உறுப்புக் கொடை சரியான எடுத்துக்காட்டு.

இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணம்

ஜாதி, மதம், இனம், நாடு முதலிய பலவற்றையும் தாண்டி "மனிதம்" என்பது தான் பொதுவாக அறிவியல் ரீதியானது; சமூக நலம் சார்ந்தது என்பதை விளக்குவதே, குருதிக் கொடை - விழிக்கொடை மற்றும் உறுப்புக் கொடைகளின் உள் அமைதி கொண்டுள்ள தத்துவங்கள்.

நமது முதலமைச்சர் இதிலும், இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் ஒரு புதுமையான வழியைச் சுட்டிக் காட்டியுள்ளார்!

தமிழ்நாடு, இப்போது பலருக்கும் கற்றிடம் - வெற்றிடமல்ல. கற்றிடம் என்று பறைசாற்றுவோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
24.9.2023


No comments:

Post a Comment