உறுதி ஏற்போம் தோழர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 13, 2023

உறுதி ஏற்போம் தோழர்களே!

சென்னையில் நேற்று (12.9.2023) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில்  கழக அமைப்பு முறையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நல்ல பலனை அளித்துள்ளன. பொறுப்பை ஏற்று, திறம்படப் பணியாற்றி வரும் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் பாராட்டப் பெற்றனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 'தகைசால்  தமிழர்' விருது அளிக்கப்பட்டமைக்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், முதல் அமைச்சருக்கும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தை தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் உற்சாகத்தோடு வரவேற்றதோடு மாலைக்குப் பதில் ஒவ் வொருவரும் நன்கொடைகளை வழங்கியதும் தனித் தன்மை யானதாகும்.

தஞ்சையில் அக்டோபர் 6ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவும், நாளும் சாதனைகள் புரிந்து வரும் சமூகநீதிக்கான சரித்திர நாயகரும், "திராவிட மாடல்" ஆட்சியின் தளகர்த்தருமான  முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழாவும் மாலை நேர மாநாடாக தஞ்சாவூரில் நடத் துவது என்ற முடிவு - காலத்தாற் கழகம் மேற்கொள்ளும் கல்வெட்டாகும்.

வரலாற்றில் வைரக் கல்வெட்டாகப் பொறிக்கப்பட வேண்டிய - இந்தியத் துணைக் கண்டத்திலேயே முன் மாதிரியான  - தந்தை பெரியார் தலைமை தாங்கி வைக்கத்தில் நடத்திய தீண்டாமை ஒழிப்பு வெற்றிக்கான நூற்றாண்டும், காங்கிரஸ் ஆதரவில் நடத் தப்பட்ட சேரன்மாதேவி குரு குலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு ஒரு மாதிரியும், பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு வேறொரு மாதிரியுமாக பாரபட்சம், வித்தியாசம் காட்டப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு, திரு.வி.க. ஆகியோரால் முறியடிக்கப்பட்ட சேரன் மாதேவி குரு குலப் போராட்டம் நூற்றாண்டு ஆகிய விழாக்களை அடுத்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்துவது என்ற முடிவுகள் முக்கியமானவையாகும். 

சனாதனத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயலும் இந்தக் கால கட்டத்தில் இவ்விரு நூற்றாண்டு விழாக்களும் இந்தியத் துணைக் கண்டத்து மக்களிடையே புத்துணர்வையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியவை என்பதில் அய்யமில்லை.

அதே போல, 'சுதந்திர' இந்தியாவில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவு அரசமைப்புச் சட்டத்தில்  இடம் பெற்றிருப்பது அரு வருப்பானது. 1957 நவம்பர் 3ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்பு மாநாட்டில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை விடை கிடைக்க வில்லை.

"ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? உண்மையான சுதந்திரம் இருக்குமானால் ஜாதி இருக்கலாமா?" என்ற கேள்வி அறிவார்ந்த கேள்வியல்லவா! வேறு எவரும் சிந் திக்காத தனிப் பெரும் மனித உரிமை சமத்துவப் பெரு வெடியல்லவா!

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்பு சட்டப் பிரிவைக் கொளுத்துவது என்பதாகும்.

உலக அரங்கில் இத்தகைய தீர்மானம் - முடிவு எடுக்கப்பட்ட இன்னொரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்ட முடியுமா?

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 13(2), 25(1), 26, 29(1) (2), 368 ஆகியவை ஜாதியை இறுகப் பாதுகாக்கும் பிரிவுகள்தான்.

இந்த நியாயமான தீர்மானத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒன்றிய அரசு, சட்டத்தைக் கொளுத்தினால் தண்டனை என்று அறிவித்தது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்காகவென்றே ஒரு சட்டத்தை  - தேசிய அவமதிப்புத் தடுப்பு மசோதா (Prevention of Insult to National Honour - 1957)  - நிறைவேற்றப்பட்டது. அதன்படி 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதைப்பற்றிச் சற்றும் கவலைப்படாமல் தந்தை பெரியார் ஆணையை ஏற்று 10 ஆயிரம் திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவை எரித்தனர்.

அந்தப் போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்ற வகையிலும், உயிர் நீத்த வகையிலும், தமிழ்நாட் டிலேயே லால்குடி பகுதி முதலிடத்தைப் பிடித்து வரலாற்றில் தகைமை ஒளி வீசிற்று.

அந்த அடிப்படையில் லால்குடி பகுதியில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கான நினைவுச் சின்னம் ஒன்றை நிறுவுவது என்றும், அதனை தந்தை பெரியார் நினைவு நாளான வரும் டிசம்பர் 24 அன்று திறப்பது என்றும், ஜாதி ஒழிப்பு மாநாட்டையும் நடத்துவது என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்பு நாளான நவம்பர் 26ஆம் நாளை ஜாதி ஒழிப்பு நாளாக அனுசரிப்பது என்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முத்தாய்ப்பானது.

தீர்மானங்களைக் கழகத் தோழர்களும் உள் வாங்கி செயல் வடிவம் அளிப்பது ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழரின் கடமையன்றோ!

தீர்மானங்களை செயல்படுத்த உறுதியேற்போம் தோழர்களே!

வீழ்க ஜாதி!

வெல்க சமத்துவம்!!


No comments:

Post a Comment