நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 23, 2023

நூல் அரங்கம்

நூல்:“சித்திரபுத்திரன் கட்டுரைகள் தொகுதி 1”

ஆசிரியர்: தந்தை பெரியார் 

வெளியீடு:

தொகுப்பாசிரியர்: கி. வீரமணி

திராவிடர் கழக வெளியீடு

முதல் பதிப்பு 2023

பக்கங்கள் 320

நன்கொடை ரூ. 300/-

*  தந்தை பெரியார் மதராஸ் மாகாணத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த போதே, வார ஏடு ஒன்றை துவக்கி அதன் வழியாக பகுத்தறிவு - சுயமரியாதை சிந்தனைகளை மக்களிடம் பரப்ப எண்ணினார். அதற்காக தனது சொந்தப் பணத்தில் கஷ்டம், நஷ்டம் பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல் தனது எழுத்துப் புரட்சிக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்க முடிவு செய்தார்!

*  அதன் முதல் முயற்சியாக, அவரது முதல் கொள்கை முழக்கமாக, அச்சு வடிவில் ஈரோட்டிலிருந்து வெளிவர ஆரம்பித்த வார ஏடு தான் 'குடிஅரசு'! 1925ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் குடிஅரசு ஏட்டை கடலூரைச் சேர்ந்த ஞானியார் அடிகள் துவக்கி வைத்தார்! 

*  குடிஅரசு - அன்றைய தமிழ்நாட்டில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமகால அரசியலைப் பேசியதோடு ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை , தீண்டாமை ஒழிப்பு மற்றும் புராண இதிகாச பொய்யுரைகளைப் பற்றியும் விவரித்து எழுதியது!  

*  குடிஅரசு - அதுவரை எவருமே தொடப் பயந்த ' பார்ப்பனியம் ' பற்றி தொடர்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டது! பார்ப்பனர்கள் எவ்வாறெல்லாம் அன்றாட வாழ்க்கையில் ஊடுருவி, அப்பாவி மக்களின் அறியாமையை மூலதனமாக கொண்டு தங்களை வளர்த்துக் கொண்ட விவரங்களை பொது வெளிக்கு கொண்டு வந்தது! 

*  பெரியார் தனது குடிஅரசு இதழை யாரை நம்பியும் துவக்கவில்லை . தன்னை மட்டும் நம்பி, தன் கொள்கைகளை மட்டும் நம்பி அந்த வேலையைச் செய்தார். இதழில் அவர் தனது பெயரில் எழுதியதோடு புனைப் பெயரிலும் எழுதினார். அந்த வினோதமான புனைப் பெயர், புராணப் பெயரை நினைவூட்டும் - சித்திரபுத்திரன்! 

*  திராவிடர் கழகம் -  பெரியார்  ' சித்திரபுத்திரன் ' என்ற புனைப் பெயரில் 1925 முதல் 1973 வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை வெளியிடுவது என முடிவு செய்து, தற்போது இரண்டு தொகுதிகளை சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார்கள்.

*  இந்த முதல் தொகுதியில் 14.06. 1925 முதல் 21.12.1930 வரை வெளியான கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  61 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன! 

*  நூலின் பதிப்புரையில் தொகுப்பாசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்பான விளக்கத்தை தந்துள்ளார்கள். 

"குடிஅரசு செய்த புரட்சியின் பரிமாணத்தை எளிதில் வார்த்தைகளால் வருணிக்க முடியாது ! ஆராய்ச்சி மழை பொழிந்தது! தர்க்க வாதங்கள் தகத்தகாய ஒளி வீசி அறியாமை இருட்டை விரட்டியது! " ...என விவரிக்கின்றார்! 

*  மேலும் ஆசிரியர், " தந்தை பெரியார் திருச்சியில் உரையாற்றும் போது தன்னை எவ்வாறு அறிமுகப் படுத்திக் கொண்டார் தெரியுமா?...' நான் ஒரு பேச்சாளன் அல்ல! எழுத்தாளனும் அல்ல! ஒரு கருத்தாளன்!' .. என்று தானே! என்னே வியப்பு!.. என்னே அடக்கமிகு ஆழ் ஊற்று! .. அவரது அந்தக் கருத்துக் கருவூலங்களின் தொகுப்பே வாசகர்களின் சிந்தனை விருந்தாகும் தொகுப்பு! "... என்று இந்த நூலை அறிமுகம் செய்கிறார்!

*  நூலில் தரப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரையும் அன்றைய சமகால வாழ்வியல் நிலவரத்தையும், அரசியலையும், மூடநம்பிக்கை வழக்கங்களையும், அய்யாவின் அறிவார்ந்த தர்க்க வாதத்தையும் அறியும்படி செய்கின்றது! 

*  பெரியார் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பதற்கு அவரது கட்டுரைகளில் வருகின்ற சம்பாஷணைகள் ( உரையாடல்கள் ) மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்! பெரியாரின் எழுத்தில் கேலியும், கிண்டலும், நையாண்டியும் எங்கும் நிறைந்திருக்கின்றன! 

*  'கல்வியின் ரகசியம்' என்ற தலைப்பில் 17.01.1926 அன்று வெளியான கட்டுரை. பரீட்சையில் தோல்வியுறும் நிலையில் உள்ள தங்கள் பிள்ளைகளைத் தேர்ச்சி பெற வைக்க பார்ப்பனர்கள் கையாளும் குறுக்கு வழிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் உரையாடல்! 

*  கணபதி சாஸ்திரிகளுக்கும் லட்சுமண சாஸ்திரிகளுக்கும் இடையே நடைபெறுவது போன்ற கற்பனையான உரையாடல்! 

அக்கிரகாரத்தின் அக்கிரமமான புத்தியை வெளிப்படுத்தும் விதமாக, மற்றவர்களை கேவலமாக மதிக்கும் நரிக்குணம் கொண்ட வர்கள் பற்றி , சுவாரசியமாக எழுதப்பட்டதைப் படித்து சிரிக்கவும் சிந்திக்கவும் முடிகிறது! 

*  குடிஅரசு இதழில் வெளியான மற்றுமொரு சிறப்பான கட்டுரை - 1926ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் நாள் வெளியானது. 'தமிழுக்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் இரகசியமும்!'..

* ஹிந்தி மொழி ஆதிக்கம் என்பது பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கும் முன்னேற்றத்திற்காகவும் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்திற்காகவும் மட்டுமே என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொலை நோக்குப் பார்வையால் படம் பிடித்து எழுதிய அந்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

*  சித்திரபுத்திரனின் வைர வரிகள் இதோ : 

"இதுவரை ஹிந்திக்காக செலவாகியிருக்கும் பணத்தில் பெரும் பாகம் பார்ப்பனரல்லாதாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது! ஹிந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர் பார்ப்பனர்களாகவே இருக்கின்றார்கள். ஹிந்தி பாஷையை நம் பணத்தில் படித்து விட்ட பல பார்ப்பனர்கள் வெளி மாநிலங்களுக்குப் போய், ஆங்காங்கு நமக்கு விரோதமாய் பிரச்சாரம் செய்கிறார்கள்! 

*  நம்மை சூத்திரர்கள், புத்தி இல்லாதவர்கள், முட்டாள்கள் என்றும் தென்னாட்டு பார்ப்பனரல்லாத வர்களுக்கு மூளை இல்லை என்று சொல்வதும், வெளி மாகாணங்களில் உள்ள பத்திரிகைகளில் போய் அமர்ந்து கொண்டு பார்ப்பனியத்தை தேசமெல்லாம் நிலை நிறுத்தவும், பார்ப்பனரல்லாதாரை அழுத்தப் பிரச்சாரம் செய்யவும் , இது போன்ற காரியங்களில் பிழைப்பிற்கான காரியத்திற்கல்லாமல், வேறு வழியில் நமக்கு (ஹிந்தி) ஒரு பலனையும் அளிப்பதில்லை!" .... என்று ஒரு தீர்க்கதரிசி போல விளக்கம் சொல்லியிருக்கின்றார்!

*  பெரியார் அன்று சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் எழுதியது தானே இன்றும் நடக்கின்றது? நூறு ஆண்டுகள் ஆன பின்னும் அதே நிலை தானே? 

*  அன்று வெளி மாகாணத்தில் பத்திரிகைகளில் அமர்ந்து கொண்டு தூற்றினான்! இன்று வெளி மாநிலத்திலுள்ள தொலைக் காட்சிகளில் உட்கார்ந்து கொண்டு தூற்றுகிறான்! அவ்வளவு தானே! இதற்குப் பெயரும் ஸநாதனம் தானே?. இவ்வாறு ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு இன்றைய சூழலை விளக்குவதாக உள்ளது! 

பெரியாரை புரிந்து கொள்ள மற்றுமொரு நூல்! 

*  சித்திர புத்திரன் - அவர்

திராவிடர் இனத்திற்கான

விசித்திர புத்திரன்!

- பொ. நாகராஜன், 

பெரியாரிய ஆய்வாளர், சென்னை - 14.09.2023.


No comments:

Post a Comment