ஸநாதனத்தைக் காப்பது இவர்கள் நோக்கமல்ல; பா.ஜ.க.வைப் பாதுகாக்கவே போராடுகிறார்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 13, 2023

ஸநாதனத்தைக் காப்பது இவர்கள் நோக்கமல்ல; பா.ஜ.க.வைப் பாதுகாக்கவே போராடுகிறார்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை

 ‘‘ஈரோட்டுப் பாதையில் கலைஞர்'' - தி.மு.க. இணைய வழிக் கூட்டம்

சென்னை, செப்.13 - "ஸநாதனத்தைப் பாதுகாப்பது இவர்கள் நோக்கமல்ல; பாஜகவைப் பாதுகாக்கவே போராடுகிறார்கள்", எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசினார். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணி செப்டம்பர் மாதத்தினை "திராவிட மாதம்" எனக் கொண்டாடி வருகிறது.. அவ்வகையில் 09.09.2023 அன்று "ஈரோட்டுப் பாதையில் கலைஞர்", எனும் தலைப் பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இணைய வழியில் பேசியதாவது:  

கலைஞரின் உழைப்பும் - துணிவும்!

கொள்கையை முன்னிறுத்தி தோற்றுவிக்கப் பட்டதே  திராவிட முன்னேற்றக் கழகம். ‘‘கொள்கை வேட்டி போன்றது; பதவி துண்டு போன்றது'' என்கிற முழக்கத்தை இலக்காகக் கொண்ட கட்சி திமுக!  "நாங்கள் வகிப்பது பொறுப்பு தானே தவிர, பதவியல்ல", என அழகாகக் கூறினார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். திமுக என்பதும் மூன்றெழுத்து, கொள்கை என்பதும் மூன்றெழுத்து!   இன்றைய தலைமுறையினர்,  தலைமைக்குக் கட்டுப்படுதல், கொள்கைகளைப் புரிந்து கொள்ளுதல், கட்சி வளர்ச்சிக்குப் பாடு படுதல் ஆகிய மூன்று விசயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.     

ஈரோட்டு குருகுலத்தில் பயின்ற கலைஞரிடம், ‘‘உங்கள் வாழ்வின் திருப்புமுனை எது?'' என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். "பெரியார் சந்திப்பு தான் என் வாழ்நாள் திருப்பம்", என்றார் கலைஞர்! உங்களைக் குறித்து நீங்களே ஒரு வரியில் கூறுங்கள் என்றபோது, "மானமிகு சுயமரியாதைக் காரன்", என்று அழகாகக்  கூறினார். எதிர்நீச்சல் என்பது கலைஞருக்குக் கைவந்த கலை. அதன் வெற்றி கரையை தொடுவதற்கு அவரிடம் ஏராளமான உழைப்பும், துணிவும் இருந்தது! 

75 ஆண்டுகள் எங்கள் பயணம்!

ஈரோட்டுப் பாதை என்பது தனித்துவமான பாதை! நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் குறித்துக் கூற எண்ணற்ற சாதனைகள் இருக் கின்றன. இது  திராவிட மாதமும் கூட! ஈரோட்டுப் பாதை என்பது அவ்வளவு  எளிதல்ல; அவ்வளவு சுலபமும் அல்ல! கல், முள் பாதை களில் கூட நடந்துவிடலாம். ஆனால், மனதைப் பாதிக் கக் கூடிய, மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடிய பாதை என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல! 

அவதூறுகளை அள்ளி வீசுவார்கள், ஆதார மற்ற செய்திகளைத் தெளிப்பார்கள், பொய்யுரை களைத் புளுகித் தள்ளுவார்கள். இதற்கிடையே தான் எதிர்ப்பு களை உரமாக்கி இயக்கம் வளர்த்தார் கலைஞர்! பொது வாழ்வில் 75 ஆண்டுகள் நாங்கள் இணைந்து களத்தில் இருந்துள்ளோம்!

‘‘உடன்பிறப்பே!'' - கலைஞர் கடிதங்கள்!

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் காலத்தால் நிலைத்து நிற்பவை. 1977 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளையொட்டி ஒரு கடிதத்தை  கலைஞர் எழுதினார். பெரியாரை எப்படி எதிர்த்தார்கள், அதை எதிர் கொண்ட விதம்,  பின்னாளில் கொள்கையில் பெரியார் வென்ற விதம், எதிரிகள் அஞ்சி ஓடிய நிலை உள்ளிட்ட அனைத்தையும் தமக்கே உரிய பாணியில் கலைஞர் எழுதியிருந்தார். இன்றைக்கு ஒன்றிய அரசும், பாஜகவும் பம்மாத்து காட்டும் வேளையில், இந்தக் கடிதம் படிப்பது பொருத்தமாக இருக்கும்!  இதற்கு கலைஞர் தந்த தலைப்பு "பெரியார் தந்த துணிவுண்டு!"

‘‘உடன்பிறப்பே!

‘‘சுண்டெலி வந்ததென்று சூரப்பூனை அடுப்பின் அண்டையில் பதுங்குவதுண்டோ?

அரவமொன்று ஆடிவர -  கண்ட கீரிப்பிள்ளை கலங்கியே வியர்த்து நிற்பதுண்டோ?

நண்டுக்குப் பயந்தொளிந்து  நரிக்கூட்டம் நடுங்கு தல்தான் கேட்டதுண்டோ?

குள்ளநரியின் கோபங்கண்டு சிங்க ஏறுதான் கோழை போல் ஓடிடுமோ?

முதுகெலும்பில்லாப் பேடிகட்குப்  போர்க்களத்து மாவீரன் மண்டியிட்ட வரலாறுண்டோ?''

பெரியாரின் "குடிஅரசு" அலுவலகத்தில் முப்பது  ஆண்டுகட்கு முன்பு துணையாசிரியர் பொறுப்பினை ஏற்றிருந்தபோது இந்தக் கருத்தமைந்த கவிதையொன் றினை எழுதிய நினைவு எனக்கு இன்று எழுந்தது. பெரியார் பிறந்த நாளன்றோ இன்று! அதனால் அந்தக்  கவிதை நினைவுக்கு வந்தது. அவரின் அலுவலகத்தில் ஈரோடு நகரில் வாழ்ந்ததும், அவர் இல்லத்தில் அவரோடு அமர்ந்து உண்டதும் - அன்னை மணியம்மையார் எங்கட்கு உணவு பரிமாறியதும் -  இரவு நெடுநேரம் வரையில் பெரியார் வீட்டு மேல் மாடியில் அவருக்கு எதிரே அமர்ந்து அரசியல், சமுதாய சீர்திருத்தப் பாடங் களைக் கேட்டதும் - எல்லாமே நேற்று நடந்ததுபோல் இருக்கின்றன.

எத்தனையோ எதிர்ப்புகள் அவருக்கு! நாலா திசையிலிருந்தும் வசைமாரி  பொழிந்த வண்ணமிருந்தனர், தங்கள் வாழ்வுக்கு வழி தேடிக்  கொண்டு தன்மான இயக்கத்தைத் தகர்ப்பதற்கு முனைந்திட்ட தன்னலச் சிறு மனிதர்கள், குறுமதியினர்! பெரியார் ஒரு நச்சாறு என நவின்றோரும் உண்டு - பின்னர் அவர்கள் எவ்வாறு அடங்கினர் என்று சரிதமும் உண்டு! கொல்லுவேன் -  குடலைப் பிடுங்குவேன் - என்று மிரட்டல் கடிதம் வராத நாள் இருக்காது! எங்களூர் கூட்டத்திற்கு வந்தால் திரும்பிப் போக முடியாது என்று எச்சரிக்கை மடல் எத்தனை எத்தனையோ! அனைத்தையும் சிரித்தபடி படித்து - மடித்து வைத்து விடுவார்.

அவரின் எதிர்ப்புக்கு ஆளானவர்கள் - அல்லது இலக்கானவைகள் - சொத்தை சோடைகளா? அல்ல! அல்ல! வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், அவை அறிமுகப்படுத்திய ஆயிரம், ஆயிரம் கடவுளர்கள் -  சர்வ வல்லமை வாய்ந்ததாகக் கூறப்பட்ட அவற்றை எதிர்க்கத்தான் அவர் சல்லடம் கட்டி நின்றார். அவர் கையிலிருந்த போர்வாளின் பளபளப்பு கண்டு வைதிக புரி அஞ்சி நின்றது. ஜாதி சமய வெறியர்களின் தலையில் ஓங்கி விழும் சம்மட்டியடியாக அவரது பேச்சும் எழுத்தும் அமைந்தன.

எதிர்ப்பு இல்லாத நாளை அவர் வீணான நாளாகக்  கருதினார். ஊழலிலே ஊறித்திளைத்தவர்கள், அவர் உருவாக்கி வளர்த்த உணர்வுகளை அழிக்க, அவர் மீதே ஊழல் புகார்களை அடுக்கினர். அவற்றைக்  காலால் உதைத்துத் தரைமட்டமாக்கி வெண்தாடி நிமிர, வேங்கை யென எழுந்து நின்றார்.

அவதூறுக் கணைகளின் முனைகளைத்  தன் கூரிய விழிப் பார்வையாலே மழுங்கிப் போகச் செய்தார்.

அவர் கண்ட அரசியலிலும் சரி, அவர் புகுந்த களங் களிலும் சரி, முதுகில் குத்துவோர் இருந்தனர். துரோகம் புரிவோர் இருந்தனர்.  நன்றி மறந்தோர் இருந்தனர். அவரை அழிப்பதொன்றே குறிக்கோள் எனத்  திட்ட மிட்டோரும் இருந்தனர். அவரைவிட்டு அண்ணா தலைமையில் நாம் பிரிந்து வந்த பிறகும் அவரால் நாம் உருவானோம் என்பதை மறந்ததுமில்லை.  அந்தத் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தை அழித்திட எண் ணியதுமில்லை. அந்தப்  பெருந்தன்மையும், அரசியல் பண்பாடும் அற்றவர்கள் இன்றுபோல் அன்றும் இருந் தனர். அவர்களின் வெத்துவெட்டுப் பேச்சுக்கள், வாய் வீச்சுக்கள் அனைத்தும் பெரியார் முன்னே எரிதழல் வீழ்ந்த வைக்கோல்களாயின.

அவர் காணாத களங்கள் இல்லை. எந்தக் களத்திலும்  அவர் எவனுக்கும் பயந்ததுமில்லை. சிறைச்சாலைப்  பிரவேசம் அவருக்குப் பொழுதுபோக்காகவே  இருந்தது!  போர் முழக்கம் அவரது இதயத் துடிப்பு! முன் வைத்த காலைப் பின் வைக்காத துணிவும் உறுதியும் அவரின் கூடப்பிறந்தவைகள் - அவருக்குத்தான் இன்று பிறந்தநாள்!

இந்த நாளில் அவர் பெற்றிருந்த துணிவையும், உறுதியையும் பெறுவோம் - ஊளையிடும் எதிர்ப்புகளை ஊதி எறிவோம் என்ற தெம்புடன் பீடுநடை போடுவோம்! வாழ்க பெரியார்! வாழ்க! வாழ்க!'' 

அன்புள்ள

மு.க.

17.9.1977

ஈரோடு போனவன்; நீரோடு போகமாட்டேன்!

பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் கூட அவர்  ஈரோட்டுப் பாதையில் தான் பயணம் செய்தார். ஆட்சி அதிகாரம், பேச்சு, எழுத்துப் பணி, இலக்கியப் பணிகள், திரைத்துறை வசனங்கள் என அவர் ஈடுபட்ட அனைத்துத் துறைகளிலுமே பெரியாரின் சிந்தனைகளை விதைத்தார்! 

இன்றைய நிலைகளை விட, அன்றைக்கு மோசமான காலமாக இருந்தது. சிறைக்கூடங்கள் கடுமையாக அச் சுறுத்தின. தேசிய நீரோட்டத்தை ஏற்றுக் கொள் எனக் கட்டாயப்படுத்தின. ‘‘ஈரோடு போனவன், நீரோடு போகமாட்டேன்'' எனத் திருப்பியடித்தார் கலைஞர். ஈரோடு பாதை என்பது சுகம் தரும் பாதையன்று; ஆனால், அதுதான் இறுதியான தீர்வு! மனித வளர்ச்சிக்குப் அந்தப் பாதையே விடியல் தரும்! 

கலைஞர் அவர்கள் மிதிவண்டி அழுத்த, நான் அமர்ந்து சென்றுள்ளேன். இன்னும் சொன்னால், பிரச் சாரத்திற்கு நடந்து போனோம், ரயிலில் போனோம், காரில் போனோம், விமானத்தில் போனோம். அனைத்துப்  பாதைகளும் ஈரோடு நோக்கியே இருந்தன! முடிதிருத் தும் நிலையங்கள், தேநீர் கடைகளில்  வளர்ந்த இயக்கம் இது! இந்த இயக்கம் அரசியல் கட்சியாய் மாறிய பிறகும் பாதை மாறவில்லை; ஈரோடு பயணம் முடிய வில்லை!

சமத்துவம் பேசும் தமிழ்நாடு!

அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழ்நாட்டின் இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் வரை யாருமே ஈரோட்டுப் பாதையில் இருந்து விலகவில்லை. இதுதான் எதிரிகளுக்கு எரிச்சலாக, குமட்டலாக  இருக்கிறது. ஜாதி ஒழிப்பை, சமத்துவ சமதர்மத்தை  இந்தியாவிலே தமிழ்நாட்டைத் தவிர யார் பேசுகிறார்கள்? பெரியார் சமத்துவபுரங்கள் வேறு எங்காவது உண்டா? மூத்திர வாளியோடு பெரியார் அலைந்ததன் பயனை இன்று தமிழ்நாடு அனுபவிக்கிறது! 

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிவிட வேண்டும் என்பது பெரியாரின் இறுதி இலட்சியமாக  இருந்தது. ஜாதிப் பாம்பை அடிக்க வைக்கம் வரை சென்றார். அடி வாங்கும் நேரத்தில் அது கருவறை சென்று பதுங்கிக் கொள்ளும்! எல்லாவற்றிலும் தகுதி பேசும் பார்ப்பனர்கள், அர்ச்சகர் விசயத்திற்கு மட்டும் பிறப்பு தான் முக்கியம் என்பார்கள். 

கலைஞரின் தனிச் சட்டம்!

இதை ஒழித்திட அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் நோக்கில் 1969 ஆம் ஆண்டு கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். "போராட்டத் தைத் தள்ளி வையுங்கள். அதற்கென தனிச் சட்டம் இயற்றுகிறேன்", என்று கூறிய கலைஞர் அவர்கள், 1972 இல் சட்டமும் இயற்றினார். அன்றிலிருந்து 50 ஆண்டு காலமாக எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டுமாக இந்தப் போராட்டம் தொடர்கிறது. இப்போராட்டத்தில் பலமுறை நாம் வெற்றி பெற்றுள்ளோம். எனினும் அந்த வெற்றி வெளியில் தெரியவில்லை. அதேநேரம் தோல்வி அடைந்தாலும் பார்ப்பனர்கள் வென்றதைப் போல காட்சி தருவார்கள். அதுதான் அவர்களின் சூட்சமம். பெரியார் எனும் கண்ணாடி அணிந்தால் இந்த நுட்பத்தை அறியமுடியும்! 

சமூகநீதிக்கான சரித்திர நாயகர்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வழக்கை கலைஞர் அரசு திறம்பட நடத்தியது. இதன் நியாயத்தை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. "அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் ஆகலாம், ஆனால் அதற்கு ஆகமங் களைப் படித்துத் தகுதி பெற வேண்டும்", என நீதிமன்றம் கூறியது. அப்போதுதான் நான் ‘விடுதலை' தலையங் கத்தில், "ஆபரேசன் வெற்றி; நோயாளி இறந்துவிட்டார்", என்று எழுதினேன். பிறகு மீண்டும் சட்டப் போராட் டங்கள் தொடர்ந்தன. 

இந்நிலையில் ஆகமப் பள்ளிகள் திறக்கப்பட்டு 69 விழுக்காடு இடஒதுக்கீடு  அடிப்படையில், 205 மாணவர் கள் தயாராகி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாகக் காத்திருந்த அவர்களில் சிலருக்கு, 2021 ஆகஸ்ட் 14 ஆம் நாள் பணி நியமனம் வழங்கினார் தமிழ்நாடு முதல மைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்! இந்த வரலாற்றைக் கொண்டாடும் வகையில் தான், "சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" எனப் பெருமையோடு அழைத்தோம்! 

அதே விரல்கள்! 

அதே ‘விடுதலை'!! 

1972 ஆம் ஆண்டு எந்த விரல்கள், ‘விடுதலை'யில் "ஆபரேசன் வெற்றி; நோயாளி இறந்தார்," என்று எழுதியதோ, அதே விரல்கள், அதே ‘விடுதலை'யில் 2023 இல் "ஆபரேசன் வெற்றி; நோயாளியும் பிழைத்துக் கொண்டார்", என்று எழுதும் வாய்ப்புக் கிடைத்தது!  

இந்த நீண்ட வரலாற்றுப் போராட்டத்தில் நமக்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக  தஞ்சாவூரில் அக்டோபர் 6 ஆம் தேதி மிகப் பெரும் வெற்றி விழா நடைபெற இருக்கிறது! அன்றைய தினம் நாம் முழங்கும் போர் சங்கு டில்லி வரை கேட்க வேண்டும்! 

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அகற்றிவிட்டார். ஈரோட்டு பாதை வென்றுவிட்டது. அர்ச்சகர் பணி என்பது ஏதோ 10 பேருக்கு வேலை கொடுப்பதல்ல; மாறாக ஸநாதன முதுகெலும்பை முறியடிப்பது! சமத்துவத்தை நிலைநாட்டுவது! அனைவருக்கும் அனைத்தையும் உறுதி செய்வது! 

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!

ஆத்தூரில் நடைபெற்ற பெரியார் சிலை திறப்பு விழாவில், "திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி மட்டுமல்ல; ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றார் கலைஞர். அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு திமுக இருக்குமா? என்றார்கள், பிறகு கலைஞருக்குப் பிறகு இருக்குமா? என்றார்கள். இன்றைக்கு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். 

திமுகவிற்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஓர் இலக்கு இருக்கிறது, சுயமரியாதை எனும் இரத்த ஓட்டம் இருக்கிறது. எங்களுக்குக் களைப்பில்லை; சோர்வில்லை; பாதைகளைச் செப்பனித்துக்  கொண்டு ஓடிக்கொண்டே இருப்போம். திமுக ஆட்சிக்கு சிலர் தடங்கல்கள் வரலாம், அதைக் கண்காணித்து அகற்றும் பணிக்காக நாங்கள் முன்னே செல்வோம்! இப்படைத் தோற்கின், எப்படை வெல்லும் என்பது நம் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு முழக்கமாகும். 

ஆட்சியின் சிறப்பிற்கு 

எதிரிகளே சாட்சி!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நிதானம் குன்றாமல், உறுதி குறையாமல் ஆட்சி நடத்துகிறார். எவ்வளவு சிறப்பாக நடத்துகிறார் என்பதற்கு உதாரணம், எதிரி களின் அலறலே அளவுகோல்! ஸநாதனத்தைக்  காப்பது இவர்கள் நோக்கமல்ல; பாஜகவை பாதுகாக்கவே போராடுகிறார்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்த லில் இந்தியக் கூட்டணி பெரும் வெற்றி பெறும்! பய ணங்கள் முடிவதில்லை;   இலட்சியங்கள் தோற்பதில்லை!", எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்! 

தொகுப்பு: வி.சி.வில்வம்   


No comments:

Post a Comment