பொதுமைச் சமுதாயத்தை உருவாக்கும் பெண்கள் நிலையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 16, 2023

பொதுமைச் சமுதாயத்தை உருவாக்கும் பெண்கள் நிலையம்

பேராசிரியர்

எம்.எஸ்.கண்மணி

சமுதாயம் என்ற கட்டமைப்பு ஆணையும், பெண்ணையும் உள்ளடக்கியது. இதில் ஆண் உயர்ந்தவனாகவும், பெண் இழிவானவளாகவும், ஆணுக்காகவே படைக்கப்பட்டவளாகவும், உடைமைப் பொருளாகவும் கருதப்படுகிறாள். இதற்கு அடிப்படைக் காரணம் ஆணாளுமைச் சமுதாயம் தனக்கான கட்டற்ற விடுதலையைப் பெற உருவாக்கிய நுட்பான கோட்பாடுகளே. ஒ மனிதனுக்குத் தேவை 'வீடு, மனைவி, மக்கள்' என்பது 'மனிதன்' என்றால் ஆணை மட்டுமே குறிக்கக் கூடியதாகும்.

'மனிதன்' என்ற ஆண் பால் சொல்லுக்கு இணையான பெண் பால் சொல் இல்லை. மனித சமூகத்தின் சரிபாதியான பெண்ணை முழுமை பெற்ற மனிதராகவே கருதாத நிலையே உள்ளது. ஆணை மட்டுமே மனிதராகக் கருதும் சமுதாயத்தில் அவன் தேவையை நிறைவு செய்யும் ஒரு பொருளாகவே பெண் இருக்கிறாள். 

வேட்டைச் சமுதாயத்தின் தலைமையேற்ற பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளி ஆண் மய்யச் சமூகத்தை கட்டமைக்க அவர்கள் கண்டறிந்த நுட்பமான அந்த ஒற்றைச் சொல் 'கற்பு'. பெருமையும், புகழும், வலிமையும் ஆண்களுக்கு உரியதென்றும், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களுக்குரியது என்றும் பிரித்தான்.

நிலத்தையும் பெண்ணையும் பாதுகாப்பதைத் தனது கடமையாகக் கொண்டான். அதிக பரப்புள்ள நிலத்தையும், அதிக எண்ணிக்கையில் பெண்களையும் வைத்திருப்பவன் தலைவனானான். பொருளீட்டுதலை அவன் தலையாயக் கடமையாகக் கொண்டான். தனக்கான ஆண் வாரிசை ஈன்று தருபவளை பெருமைப்படுத்தினான். இப்படி சிறிது சிறிதாக மிகவும் நுட்பமாக ஆணாளுமைச் சமூகத்தைக் கட்டமைத்தான். அதில் வெற்றியும் கண்டான்.

இதில் என்ன வேடிக்கை என்றால், நிலத்தை, பெண்ணை, ஆடு மாட்டினை தனக்கு அடிமையாகக் நினைத்தவனுக்கு, இந்தச் சூழல் தன்னையும் அடிமைப்படுத்தும் என்பதை எண்ண மறந்தான். தான் கட்டிய சிலந்தி வலையினுள் தானே மாட்டிக் கொள்ளும் சிலந்தி போல அவன் நிலை ஆனதை அவன் உணர மறந்தான். இன்றும் அதை மறந்தே வாழ்கிறான்.

பாகுபாடுகள் நிறைந்த இந்த ஏற்ற இறக்கச் சமுதாயத்தின் இழிநிலையைப் போக்க தன் வாழ்நாளெல்லாம் போராடி வெற்றி கண்டவர் தான் தந்தை பெரியார். பிறவி பேதம் என்பது சுயமரியாதைக்கு எப்படி இழுக்கோ அதுபோலவே பாலினப் பேதமும் இழுக்குதான் என்பதை தனது நுட்பமான ஆய்வியல் பார்வையால் இதே சமூகத்தைச் தட்டி எழுப்பியவர்.

தந்தை பெரியார் அவர்கள் பெண் விடுதலையைக் குறித்து பேசியது போல உலகில் வேறு எவரும் பேசியிருக்க முடியாது. பெண் அடிமையானதற்கான காரணத்தை நுட்பமாக ஆய்ந்தவர். பெண்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமெனில் 'ஆண்மை' அழிய வேண்டும் என்றார். அவர்தான் ஆளுமை என்பது அவர்களையே அடிமைப்படுத்துவது என்ற பெரிய உண்மையை பகிரங்கப்படுத்துகிறார். அவர் கூறுகின்ற இரண்டு வித சிந்தனைகளையும் ஒப்புநோக்கி நாம் அனைவரும் சிந்திக்கும்போது முரண் போலத் தெரிந்தாலும் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருங்கிய தொடர்புள்ளது என்பதை உணர்வோம்.

இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் துன்பத்தையும் இழிவையும், அடிமைத்தனத்தையும்விட ஒரு படி மேலான துன்பத்தை பெண்கள் அடைகிறார்கள்.

எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்கு சமத்துவம் கிடைக்குமா? அப்படி ஒருகால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விடயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்று பெண்ணின் விடுதலைக்காக ஆணாளுமையின் கடைசி எல்லை வரை சென்று ஆணையே ஆடவைக்கும் அளவிற்கு கேள்வியினை எழுப்பியவர்தான் பெரியார். அவற்றின் இன்னொரு பக்கத்தினையும் ஆய்வுக்குட்படுத்தி பல உளவியல் உண்மைகளை எடுத்துரைக்கிறார்.

பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்துவதினால் பெண்களுக்கு ஏற்படும் தீமையை விட ஆண்களுக்குத் தான் தீமை அதிகம்.

"பெண்களை அடிமையாக வைத்து இழிவாய் நடத்துவதின் பயனால் ஆண்களுக்கு ஓளவு நன்மை இருக்கின்றது என்று மேலெழுந்தவாரியாய் தெரிகின்றதே தவிர, உண்மையாக ஆண்களுக்கு அதனால் அநேக பொறுப்புகளும் கவலைகளும் அதிகமாகி வாழ்க்கையில் நிம்மதி என்பது இல்லாமலும், ஆண்கள் மக்கள் பிராயத்தில் அடைய வேண்டிய அறிவு, கல்வி, வீரம் முதலியவைகளை அடைவதற்கில்லாமலும் வளர்க்கப்பட வேண்டியவர்களாகி விடுகிறார்கள்" என்கிறார் பெரியார்.

எந்தவொரு செயலிலும் இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை நம்மில் பலரும் நினைப்பதே இல்லை. பெண் விடுதலை, பெண்ணடிமை, பெண் உணர்வு, பெண் உளவியல் என்று ஒரு பக்கத்தை மட்டும் மாற்றினால் போதாது. அதற்குக் காரணமான இன்னொரு பக்கத்தின் நன்மை தீமையும் ஆராய வேண்டும். எவ்வளவு சரியாக இருக்கிறது பாருங்கள்.

நமது சமுதாயக் கட்டமைப்பில் பெண் உணவு உற்பத்தி, பிள்ளை உற்பத்தி செய்பவளாகவும், ஆண் அதற்கான புறக்காரணிகளை சரி செய்ய வேண்டியவனாகவும் உருவாக்கப்படுகின்றனர்.

இந்த இரு தரப்பிலும் அதாவது ஆண், பெண் வேலை கட்டமைப்பு விடயத்தில் பெண்ணென்பவள் அதிக பாதிப்புக்கும், அடிமைத்தனத்திற்கும் உள்ளாகும்போது ஆணும் அதற்கு நிகரானப் பாதிப்புக்கு உள்ளாகிறான். பொருளீட்டல் என்ற மய்யப் பொருண்மையை நோக்கி  ஒரு ஆண் கண்டிப்பாகச் செயல்பட்டே ஆக வேண்டியுள்ளது. பெண்ணிற்கு வீட்டு வேலை கட்டாயமாக்கப்பட்டது போல் ஆணிற்கு பொருளீட்டல் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு ஆண் பெண்களைக் காப்பாற்றுதல், பாதுகாத்தல், சுயமரியாதைக்குக் கேடு வராமல் பாதுகாத்துக் கொள்ளுதல், பிள்ளைகளைப் பாதுகாத்தல், கல்வி கொடுத்தல், தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்று பொருளாதாரம் உள்பட எல்லாவிதப் பொறுப்புகளையும் ஆண்களே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, பெண்களை அடிமையாக்குவதால் தனக்கு இலாபம் என்று கருதுவது மூடநம்பிக்கையிலும் பெரும் மூடநம்பிக்கை என்கிறார் தந்தை பெரியார்.

ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தந்தையிடமிருந்து மகனுக்குப் போகிறது. இந்தப் பொறுப்பை நிறைவேற்ற குடும்பம் துறந்து, கடல் கடந்து சென்று பொருளீட்டும் அளவிற்கு இந்தச் சுமை ஆண்கள் மீது சுமத்தப்படுவதை நாம் அறிவோம். ஒரு ஆண் மகனென்றால் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்தலை தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். தாய்மாமனின் மதிப்பு அவன் செய்யும் சீர்வரிசையில் உயர்வாகும் என்ற பிம்பம் இன்றளவும் நமது சமுதாயத்தை கட்டிப் போட்டுள்ளதை உணர முடியும்.

இது ஒருபுறம் இருக்க கல்வி கற்காமல், பொது அறிவு, உலக அறிவு இல்லாமல் பெண்ணை மடமை நிறைந்தவளாக, அடிமையாக வளர்ப்பதினால் அவர்களால் வளர்க்கப்படும் பிள்ளைகள் சிந்திக்கும் திறனற்றே வளர்வார்கள் என்கிறார் தந்தை பெரியார். உலக அறிவும், கல்வியும், சிந்திக்கும் திறனுமுள்ள மேலைநாட்டுப் பெண்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளுக்கும், இங்கு வளர்க்கப்படும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்கிறார்.

பெண்களை இழிவுக்கு உள்ளாக்குவதனால் பெண்கள் முதலில் பாதிக்கப்பட்டு, பின் அந்தக் குடும்பம் பாதிப்புக்கு உள்ளாகி, அதன் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைகளான பிள்ளைகளை அறிவார்ந்தவர்களாக வளர்க்க இயலாமல் போவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

"பெண் மக்களை அடிமைத் தன்மையிலிருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச்சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சம பொறுப்பும் ஏற்படும்படி செய்து விட்டோமேயானால் மனித சமுதாயத்தின் நன்மைக்கு செய்ய வேண்டிய காரியங்களில் பெரும் செயலைச் செய்தவர்களாவோம். இப்படிப்பட்ட பெறும் மாறுதலை சுயமரியாதை இயக்கக்காரர்களைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.

ஆகவே பெண்ணை இத்தகைய நிலைக்கு வளர்த்தெடுக்க பெண்களுக்கு "பெண்கள் நிலையம்" அமைத்தல் அவசியம் என்கிறார். பெண்கள் நிலையமென்றால் உண்டு, தங்கும் உறைவிடப் பள்ளி போன்றது. இதுபோன்ற அமைப்பினை ஏற்படுத்துவதினால் பெண்கள் அமைப்பினை ஏற்படுத்துவதினால் பெண்கள் கல்வியையும், உலக அறிவையும் பெறுவதுடன் ஆண், பெண் இணைந்து வாழும் கூட்டு வாழ்வில் தாங்கள் சம பொறுப்பேற்கும் மனநிலைக்கு வர ஏதுவாய் அமையும். இதுபோன்று பெண்களை "பெண்கள் நிலையம்" வாயிலாகத் தயார் செய்தால் அதன் மூலம் சமுதாயத்தில் பொது நன்மை, பொதுத்தன்மை பிறந்து ஏற்றத் தாழ்வற்ற சமநிலைக்கு சமுதாயம் வர பெரும்பான்மை உதவும். எனவே, "பெண்கள் நிலையம்" ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் கோரிக்கை வைக்கிறார்.

தந்தை பெரியாரின் இத்தகைய நோக்கம் பெண்ணுக்கு விடுதலையைத் தருவதுடன், ஆணுக்கான விடுதலையையும் சேர்த்துப் பெற வாய்ப்பாக அமையும். இதுவே ஏற்றத் தாழ்வாற்ற சமூகம்  உருவாக அடிப்படையாய் அமையும்.


No comments:

Post a Comment