கலைஞர் - அவர் ஒரு நவரச நாயகர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

கலைஞர் - அவர் ஒரு நவரச நாயகர்


தந்தை பெரியார் மனித இனத்தின் மீதான அனைத்து அடக்கு முறைகளையும் எதிர்த்துப் போராடினார். பெண் உரிமை, ஜாதிஒழிப்பு, மொழி, பகுத்தறிவு, சுயமரியாதை என்று! சூரியகாந்திப் பூவின் அனைத்து இதழ்களும் சூரிய ஒளியைப் பெறும் வகையில் அமைந்திருப்பது போல் தந்தை பெரியாரின் அனைத்துப் போராட்டங்களிலும் அனைத்து வகையான மானுட நலனே மேலோங்கி இருக்கும்.

கலைஞர் அவரின் மாணாக்கன், ஈரோட்டுப் பள்ளியில் பட்டம் பெற்றவர் ஆயிற்றே.

மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மக்களை விடுதலை செய்ய முன்வந்த கவுதம புத்தன் இன்று இல்லை. அவரின் தத்துவம் நாடுகள் பல கடந்து இன்றும் நிற்கிறது, கார்ல் மார்க்ஸ் இல்லை ஆனால் அவர் கொள்கைகள் அமரத்துவம் பெற்றுவிட்டது.

தந்தை பெரியார் இன்று நம்மோடு இல்லை.  ஆனால் அவரது கொள்கை, எதிரிகள் நெருங்காவண்ணம் தமிழ்நாட்டை அது காத்து நிற்கிறது.

கலைஞர் எத்தகைய எதிர்வினைகளையும் எப்படி அணுக வேண்டும், வாழ்வின் ஒவ்வொரு சிக்கலையும் எப்படி கடந்து  செல்ல வேண்டும் என்று இந்த உலகிற்கே சொல்லி வாழ்ந்து காட்டியவர்.

அவர் சந்தித்த சிக்கல்களை, சவால்களை யாரும் வாழ்வில் சந்தித்திருக்க  முடியாது. அந்த சவால்களை எல்லாம் மிக துணிச்சலாக சந்தித்து வென்றவர்.

"கலைஞர்" என்பது தனிச்சொல் அல்ல, திமுக எனும் கோடான  கோடி தொண்டர்களின் பொதுச்சொல். ஒவ்வொரு முறை நெருப்பாற்றை தாண்டியபொழுதும் அந்த இயக்கத்தையும் சேர்த்தே காப்பாற்றி கரையேற்றி இருக்கின்றார்.

அந்த அசாத்திய மனிதன் இன்று இல்லாமல் இருக்கலாம், ஆனால் எல்லா வழிகளிலும் எல்லோருக்கும் வழிகாட்டி விட்டே, சிந்திப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார்.

"என் வாழ்வில் இனி வாழ முடியாது" என்ற நிலை வரும் பொழுதெல்லாம் கலைஞரை நினைத்துக் கொள்வேன். மனம் ஆறுதல் அடைந்து உற்சாகம் பெறும்.

அந்த அளவு சிக்கல்களை - பெரும் சிக்கல்களை எல்லாம் சந்தித்து சிக்கல்களை நகைச்சுவையாக அணுகி வலி பொறுத்து கடந்து சென்றவர் கலைஞர்.

அவர் அளவு சிக்கல்களை சந்தித்தவனுமில்லை, அவரை போல் மீண்ட ஒருவனுமில்லை.

வாழ்வில் ஆயிரம் சிக்கல் வரலாம், ஆனால் ஒரு கட்டத்தில் திசைமாறும், ஏதாவது ஒரு கட்டத்தில் நமக்கு சாதகமாய்த் திரும்பும் - அதுவரை போராடு, உழைத்துக்கொண்டே இரு என்பதுதான் கலைஞரின் வாழ்க்கைத் தத்துவம்.

போராட்டமே வாழ்க்கையான மனிதனுக்கு கலைஞரின் வாழ்வினை விட ஆறுதலும் முன்மாதிரியுமான வாழ்வும் எதுவுமில்லை.

"கலைஞர் என்பது நதி, அதற்கு முடிவே இல்லை. எக்காலமும் ஏதாவது ஒரு வகையில் அது ஓடிக்கொண்டே இருக்கும், யாராவது ஒருவன் அதனால் பயன் பெற்றுக்கொண்டே இருப்பான்."

அந்த  உண்மையினை ஏற்கமுடியாதவர்கள். சாகலாம், அது ஒன்றுதான் அவர்களுக்கான மன ஆறுதலைக் கொடுக்கும்.

வாழ்க முத்தமிழறிஞர் கலைஞர் பெருமகனார் புகழ்!

No comments:

Post a Comment