ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 23, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ஸநாதனத்தைப்பற்றி பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனவா தி.க.வும், தி.மு.க.வும்?

- பா.முகிலன், சென்னை-14

பதில் 1: இல்லை. ‘செமிகோலன்’ - போட்டுள்ளன! இவ்வளவு அக்கறை காட்டும் உங்களைப் போன்றோரின் பங்கு அதில் என்ன?

---

கேள்வி 2: குடியரசு தினத்தன்றாவது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை கொடியேற்ற விடுவார்களா?

- மீ.வேழவேந்தன், வடலூர்

பதில் 2: எந்த வித்தைகளையும் - இந்த ஆட்சியில் - எப்போதும் அவர்கள் நினைத்தால்  மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும்.

---

கேள்வி 3: சிறார்கள் மற்றும் முதியவர்களுக்கான ரயில்வே சலுகை ரத்து செய்யப்பட்டதால் 10,000 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தி உள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறதே?

- ம.மணி, திருவள்ளூர்

பதில் 3: சமூக நலனை ‘பலி கொடுத்து’ மிச்சப்படுத்துதல் - சரியான - பொறுப்பான - செயலாக இருக்க முடியாது! சீனியர் சிட்டிசன் சலுகை, சிறார் சலுகை - உலகம் முழுவதிலும் பற்பல நாடுகளின் மனிதநேயம் பொதிந்த சலுகைகளாகும். அவற்றை மறுத்து இப்படி ‘மிச்சமா?’ பெருந்தவறான பொருளாதாரக் கணக்கீடு!

---

கேள்வி 4: கனடா - இந்தியா சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் வேலை தேடி மற்றும் கல்விக்காக சென்ற நடுத்தர மக்கள்தானே? அவர்களுக்கு மோடி என்ன பதில் வைத்துள்ளார்?

- க.பழனி, செஞ்சி

பதில் 4: அவர் சொல்ல வேண்டிய பதிலை - எம்மிடம் கேட்பது நியாயமா?

---

கேள்வி 5: அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்கிறார்; செல்லூர் ராஜூவோ கூட்டணி இருக்கிறது என்கிறார்; யார் சொல்வது உண்மை?

- ந.இளங்கோ, கன்னியாகுமரி

பதில் 5: எல்லோரையும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியார் வாய்மூடச் சொல்லிவிட்டாரே! - லேட்டஸ்ட் செய்தி தெரியாதா? 

---

கேள்வி 6: பல லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டு, விநாயகன் பொம்மைகள் வைக்கப்படுகின்றன; பிறகு அவை தண்ணீரில் கரைக்கப்படுகின்றனவே, இதனால் யாருக்கு, என்ன லாபம்?

- எ.ரமேஷ், திருவண்ணாமலை

பதில் 6: கடவுளைச் “செய்து” கரைக்கும் மதம் இந்த மதம் அல்லாமல் உலகில் எந்த மதம்? என்று கேட்காதீர்கள் - பா.ஜ.க. பாய்ந்து பிராண்டிட மேலே விழும். எல்லாம் வள்ளலார் கூற்றுப்படி ‘பிள்ளை விளையாட்டு!’

---

கேள்வி 7: இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு  (கருநாடக மாநிலம்) தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரைத் தர மறுக்கிறதே, ஏன்?

- சே.செல்வம், கள்ளக்குறிச்சி

பதில் 7: கூட்டணிக்கும், அவர்களது நிலைப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம்? புரியாமல் கேட்காதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமை - ஒருங்கிணைப்புதான் ‘இந்தியா’ கூட்டணி - ஒரே பொதுநோக்கு, பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே!

---

கேள்வி 8: ஸநாதனம் என்றாலும் சரி, நீட் பிரச்சினை என்றாலும் சரி  உடனுக்குடன் அமைச்சர் உதயநிதி கருத்து தெரிவிப்பது எதைக் காட்டுகிறது?

- த.வெங்கடேஷ், திருச்சி

பதில் 8: அவரது ஆற்றலையும், கொள்கைத் துடிப்பையும், சரக்குள்ளவர் என்பதையும் காட்டுகிறது! 

---

கேள்வி 9: மாநில அமைச்சருக்கே கேரளாவில் உள்ள கோவிலில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதே?

- ப.கன்னியப்பன், மாமல்லபுரம்

பதில் 9: ஸநாதனம் எங்கே என்று கேட்பவர்களுக்குக் கேரள ஸநாதனிகளின் அழுத்தமான பதில் அங்கே!


No comments:

Post a Comment