செப்.6ஆம் தேதி ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராவீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 1, 2023

செப்.6ஆம் தேதி ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராவீர்!

 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் 18 ஜாதிகளின் பரம்பரைத் தொழில் செய்வோருக்கு ரூ.13 ஆயிரம் கோடியை பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒதுக்கியுள்ளது.

இந்திய சுதந்திர நாள் கொடி ஏற்றும் விழாவிலும் பிரதமர் நரேந்திர மோடி இதனை தமது 56 அங்குல மார்பை நிமிர்த்திக் கூறி இருக்கிறார்.

பார்ப்பதற்கு ஏதோ தொழில்களை வளர்ப்பதற்கான ஓர் ஊக்க முயற்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் 18 ஜாதிகளின் பட்டியலை வெளியிட்டு அந்தத் தொழில்களை பரம்பரை பரம்பரையாக (Traditional)  யார் யார் எல்லாம் எந்தெந்த ஜாதித் தொழில்களை செய்கிறார்களோ அவர்களுக்கான  நிதி உதவி என்று நாக்கில் தேன் தடவுகிறார்கள். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம் என்பதன் மூலம் + 2க்கு மேல் செல்ல விடாமல் ஜாதித் தொழில் பக்கம் தள்ளும் சூழ்ச்சியாகும்.

திரு. ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநில முதலமைச்சராக யிருந்தபோது (1952-1954) கொண்டு வரப்பட்ட குலக்கல்வி திட்டத்தின் மறுபதிப்பே இது.

இது ஆர்.எஸ்.எஸின் மறுபதிப்பே! கையால் மலம் அள்ளுவது தெய்வீகக் காரியம் என்று சொன்னவர்தானே நரேந்திரமோடி.

அய்.டி. கம்பெனிகள், இணையதளம், முகநூல், மால்கள், காபி ஷாப், பங்குச் சந்தை, செவ்வாய்க் கோளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் மங்கள்யான் விண்கலம் எனப் பளபளப்பாகக் காட்டப்படும் இந்தியாவின் இருண்ட, இழிந்த பக்கம்தான் கையால் மலம் அள்ளும் தொழில்.

இந்தத் தொழில் இந்தியாவின் ஏதோவொரு பின்தங்கிய மாநிலத்தின், பின்தங்கிய குக்கிராமத்தில் நடைபெறலாம் என யாராவது நினைத்துக் கொண்டால், அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

கையால் மலம் அள்ளும் இழிதொழில் பின்தங்கிய பீகாரில் மட்டுமின்றி, வளர்ச்சிக்கே வழிகாட்டும் மாநிலமாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்திலும் இன்றளவும் நடந்து வருகிறது.

தலைநகர் டில்லி, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 256 மாவட்டங்களிலும் காணப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை என மய்ய அரசின் பல்வேறு பிரிவுகளிலும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாடெங்கிலும் 7,50,000 குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் குறிப்பிடுகிறது.

இந்தப் புள்ளி விவரங்கள் ரயில்வே துறையில் வேலை செய்துவரும் மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தயாரிக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்தும் அரசு சாரா அமைப்புகள், அத்தொழிலாளர் களையும் சேர்த்தால், நாடெங்கும் ஏறத்தாழ 13 இலட்சம் குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் கூறுகின்றன. சுகாதாரப் பணி என அலங்காரமாகச் சொல்லப்படும் மலத்தை அள்ளுவதும், சாக்கடையைச் சுத்தம் செய்வதும் தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்குள்ளேயே அடித்தட்டில் இருக்கும் அருந்ததியர், ஆதி ஆந்திரர், வால்மீகி உள்ளிட்ட சில பிரிவு மக்களின்மீது திணிக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால், அதற்குள் இறங்கி அடைப்பை நீக்கும் பொறுப்பைத் தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீது சுமத்தியிருக்கும் இந்திய ஹிந்துத்துவா ஜாதி சமூக அமைப்பு, மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதைத் தாழ்த்தப்பட்ட பெண்கள்மீது சுமத்தியிருக்கிறது.

"என்னுடைய உடம்பின் ஒவ்வொரு அங்கமும் நாறுகிறது; பலமுறை குளித்த பிறகும் நாறுகிறது. என்னால் சோற்றில் கை வைக்க முடியவில்லை; எனக்கு வேறு எந்த வேலையாவது கொடுங்கள். தயவு செய்து இந்த நரகத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கள்" என்கிறார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மலம் அள்ளும் தொழிலாளி சரசுவதி! அவர் மலத்தை அள்ளிக் கொண்டு வரும்பொழுது ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த இளை ஞர்கள், "இன்று நீ நடிகை கார்தீனா கைஃப் போல இருக்கிறாய் - எனக் கேலி பேசுவார்கள். அதைக் கேட்டும் கேட்காததுபோல நான் நடந்து செல்வேன்" என்று அன்றாடம் தனது மனது படும் வலியை விவரிக்கிறார், அவர்.

இந்தியாவைக் காக்க வந்திருக்கும் ரட்சகனாக நம்முன் நிறுத்தப்படும் நரேந்திர மோடி, வால்மீகி ஜாதியினர் மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதை ஆன்மப் பரிசோதனையாகச் செய்து வருகின்றனர் எனச் ஜாதித் திமிரோடு நியாயப்படுத்திப் பேசவில்லையா? - குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது,  'கர்மயோக்' என்ற நூலில் அவர் என்ன எழுதியிருக்கிறார்?

Scavenging must have been a spiritual experience for the valmiki caste. At some time some body have got enlightment in scavenging, they must have been taught that it is their duty to work for the happiness of the entire society and the gods.

"சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு ஞானம் ஊட்டப் பெறலாம்; அவர்கள் செய்யும் வேலை சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும், கடவுளின் சந்தோஷத் திற்காகவும் செய்யப்படுவதாகவும் கருதலாம்" - இதுதான் 'கர்மயோக்' என்ற நூலில் மோடி குறிப்பிட்டுள்ள பகுதியாகும்.

மலம் எடுக்கும் தொழிலைக் கேவலமாகக் கருதிய காலம் உண்டு; மலம் எடுப்பதற்கென்றே தனி ஜாதி  ஹிந்து வருணாசிரம அமைப்பு முறையிலும் உண்டு; அதைத்தான் வால்மீகி ஜாதி என்று மோடி குறிப்பிடுகிறார்.

அந்தத் தொழிலை, இழிவு என்று கருதி, அம்மக்கள் மத்தியில் கல்வி ஆர்வம் அரும்பும் நிலை ஏற்படும் பொழுது, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்காகப் போராடி, அதனைப் பெற்று வரும் ஒரு காலகட்டத்தில், அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, அரசே வெளியிட்ட நூலில், "மலம் எடுப்பதை இழிவான தொழிலாகக் கருதாதீர்கள். அந்தத் தொழிலைச் செய்வதானது கடவுளுக்குச் சந்தோஷத் தைத் தரக் கூடியது என்று சொல்ல முன் வந்தார்" என்பதைக் கவனிக்க வேண்டும்.

இத்தகைய மனப்போக்கு கொண்ட ஒருவர் பிரதமராக இருக்கும் இந்தியாவில் "விஸ்வகர்ம யோஜனா" திட்டம் ஆச்சரிய மான ஒன்றல்ல.

இந்த 2023இலும் இப்படி பரம்பரை ஜாதித் தொழிலை ஊக்குவிக்கிறார்கள் என்றால் இதனைக் கடந்து செல்ல முடியுமா?

இதே நரேந்திர மோடியின் நூல் அரசு சார்பில் வெளியிடப்பட்ட போதே திராவிடர் கழகம் ஆர்த்தெழுந்து கண்டன ஆர்ப் பாட்டத்தை நடத்தியதை நினைவூட்டுகிறோம். (11.12.2007)

அதனைத் தொடர்ந்து வரும் 6.9.2023 அன்று மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடத்தப்பட இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், 'விஸ்வகர்மா யோஜனா' என்னும் குலக்கல்வி திட்டத்தை ஆணி வேரோடு வீழ்த்தி எறிந்திட போர்க் குரல் கொடுப்போம் வாரீர்!

தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடுதான் இதிலும் முதற் குரல் கொடுத்து - இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்வோம் வாரீர்! வாரீர்!!


No comments:

Post a Comment