பேரறிஞர் அண்ணா அவர்களின் 115ஆவது பிறந்த நாள்-சிறப்புப் பக்கங்கள் அய்யா - அண்ணா பாசமலர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115ஆவது பிறந்த நாள்-சிறப்புப் பக்கங்கள் அய்யா - அண்ணா பாசமலர்கள்

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

அறிஞர் அண்ணா அவர்களும் அவரை ஆளாக்கிய அவர்தம் ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த வற்றாத பாசம் - வளம் குறையா இலட்சியப் பற்று மிகவும் வியக்கத்தக்கவை!

கொள்கைக் குடும்பப் பாசம் என்பது திராவிடர் இயக்கத்தின் தனித் தன்மையாகும். குருதிப் பாசத்தைவிட அது ஆழமானது; மாறாதது; மங்காதது.

அறிஞர் அண்ணாவை அவர்தம் தலைவரான தந்தை பெரியார் தனது தலைமகனாகவே நேசித்தார்! அவர்கள் 18 ஆண்டுக் காலம் பிரிந்திருந்தனர் என்பது புறத்தோற்றம்; போலித் தோற்றம் என்றே கருதவேண்டும்.

1967இல் நாகரசம்பட்டி என்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊரில் நடைபெற்ற ஒரு விழா. “பெரியார் இராமசாமி கல்வி நிலையம்” என்ற ஒரு புதுக்கட்டடத்தை அவ்வூர்க் கழக நண்பர்கள் கட்டிக் கொடுத்து, அதன் திறப்பு விழாவை முதல் அமைச்சர் அண்ணா அவர்களை வைத்துத் திறக்க ஏற்பாடு செய்தனர். தந்தை பெரியார் அவர்களையும் அழைத்து, அவர்கள் முன்னிலை வகித்தார். அவ்விழாவிற்கு என்னைத் தலைமை தாங்கச் செய்தபோது, அவ்விழாவில் அய்யாவும் அண்ணாவும் பரிமாறிக் கொண்ட பாசமும், நேசமும் பார்த்தோரைப் பரவசப்படுத்தியதாக அமைந்தது!

அய்யா தந்தை பெரியார் அவர்கள் முதல் அமைச்சர் அண்ணாவிற்குப் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார்கள். அண்ணா அடைந்த பூரிப்புக்கோர் அளவே இல்லை; அருகில் இருந்தோர் வியந்தனர்!

அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் க.ராசாராம் அவர்கள் பேசும்போது, “18 ஆண்டுக் காலம் பிரிந்திருந்த தந்தையும், தனயனும் ஒரே மேடையில் இருப்பதைப் பார்க்க, இது என்றென்றும் மறக்க முடியாத காட்சியாக இருக்கிறது; இதுவே நீடிக்க வேண்டும்” என்று பேசினார்.

அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது இரண்டு கருத்துகளை ஆழமாகச் சொன்னார்கள்.

"நான் பதவிக்கு வந்த இந்த சில மாதங்களில் எனக்குப் பலரும் பல பொன்னாடைகளைப் போர்த்தியுள்ளனர் என்றாலும், இன்று இங்கே தந்தை பெரியாரால் பொன்னாடை போர்த்தப்பட்டுள்ளதே - அது எனக்காகவே போர்த்தப்பட்ட பொன்னாடை ஆகும்; மற்றவர்களால் எனக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடைகள் எனக்காக அல்ல; என் பதவிக்காகப் போர்த்தப்பட்டவை ஆகும்” என்று மிகுந்த நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்கள்!

அதற்கடுத்து அதே உரையில், "இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டனர். ஏதோ இந்த 18 ஆண்டுக் காலத்தில் நாங்கள் இருவரும் பிரிந்திருந்தோம் என்று; அது தவறு; நாங்கள் ஒரு போதும் பிரிந்திருக்கவில்லை; அவர்கள் உள்ளத்தில் நான் இருப்பேன்; என்றும் என் உள்ளத்தில் அய்யா அவர்கள் இருப்பார்கள்”. எனவே பிரிந்திருந்தோம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிச் சங்கடப்படுத்தாதீர்கள்" என்று குறிப்பிட்டார்கள்.

முதல்வர் என்ற நிலையிலே அண்ணா அவர்கள் முன் குவிந்த ஏராளமான பொதுக் கடமைகளுக்கிடையேகூட, எங்களது அன்புத் தொல்லையில் தந்தை பெரியார் 89ஆவது பிறந்த நாள் “விடுதலை” மலருக்கென முதல் அமைச்சர் அண்ணா அற்புத இலக்கியம் போன்ற கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தார்கள்.

அக்கட்டுரையின் தலைப்பு "அந்த வசந்தம்" என்பதாகும்!

முதல்வர் பதவிக்கு வந்த காலத்தை அண்ணா வசந்த காலமாய்க் கருதாமல், தந்தை பெரியார் அவர்களுடன் வாலிபப் பருவத்தில் எதிர்ப்புக்கிடையில் எதிர்நீச்சல் போட்டு, கொள்கைப் பிரச்சாரத்தை நாடு, நகரம், கிராமம், பட்டிதொட்டி இவைகளில் எல்லாம் முழங்கினாரே  - அதைத்தான் - பெரியாருடன் இருந்த அந்தக் காலத்தைத்தான் “வசந்த காலம்" என்று மிகுந்த பெருமையுடன் கூறினார்கள்!

அதில் ஒரு வரி. “நான் என் வாழ்வில் கண்ட - கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்" என்ற வாக்கியத்தை வைர வரியாக எழுதியிருந்தார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் நோய்வாய்ப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் இருந்து, அமெரிக்காவிற்குச் சிகிச்சைக்குப் புறப்பட ஆயத்தமான அன்று காலை, தந்தை பெரியார் அவர்கள் நேரே பொது மருத்துவமனைக்கே சென்று மிகுந்த கவலையோடு நலம் விசாரித்து, ஆறுதலைக் கூறிவிட்டுப் பெரியார் திடலுக்குத் திரும்பினார்கள்.

அன்று அமெரிக்காவிற்குப் பகல் 3 மணிக்கு விமானம் மீனம்பாக்கத்திலிருந்து புறப்பட (மும்பை வழியாக) ஏற்பாடு; அய்யா அவர்கள் பெரியார் திடலில் தனது இல்லத்தில் தங்கி ஆழ்ந்த யோசனையோடு இருந்த நிலையில், திடீரென்று அருகில் இருந்த ("விடுதலை" அலுவலக அறையில்) என்னை அழைத்து “ஏம்பா அண்ணா புறப்பட்டிருப்பாரா?" என்று கேட்டார்கள்; மணி 2.45 ஆன நிலையில் 3 மணிக்கு விமானம்- இந்நேரம் விமான நிலையம் வந்து புறப்பட ஆயத்தமாகியிருப்பார்கள் அய்யா என்றோம்.

"பரவாயில்லை. உடனே வேனை எடுக்கச் சொல்லுங்கள்; விமான நிலையம் சென்று அண்ணாவை ஒரு முறை பார்க்க முயற்சிப்போம்” என்றார்கள். அவர்களது கவலை -ஆர்வம் - பாசம் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. உடனே வேன் புறப்பட்டது. "அநேகமாக நாம் அண்ணாவைப் பார்ப்பது கஷ்டம் அய்யா; விமானம் புறப்படும் முன்பு போய்ச் சேரமுடியுமா என்று தெரியவில்லை” என்று கூறினோம். “வேன்” பறந்து செல்லுகிறது. வழி நெடுக மக்கள் அண்ணாவை வழியனுப்ப, சாலையின் இரு மருங்கிலும் கூடியிருந்தனர்.

அதோ அய்யாவும் விமான நிலையம் செல்லுகிறார் என்று பேசுகிறார்கள்.

யோசித்துக் கொண்டே அய்யா எங்களைப் பார்த்துச் சொன்னார்கள்: "உம். விமானம் புறப்பட்டு விட்டால் என்ன அந்தப் பறக்கும் விமானத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து விடுவோம்" என்றார்கள்!

அடடா அந்தச் சொற்களின் பின்னணியில் எத்தனைப் பாசப் பிழிவுகள்! சிறு பிள்ளைகள்தான் விமானத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். தன் தனயனைத் தூக்கிச் சுமந்த விமானத்தையாவது பார்த்துத் திரும்புவோம் என்றார் தந்தை பெரியார்! "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்பதன் பொருள் அப்போதுதான் புரிந்தது!

விமான நிலையத்திற்குள் வரிசையாக அமைச்சர்கள் வந்து நின்றுள்ள நிலையில், அய்யா வேனை அவர்கள் எதிர்பார்க்காத நிலையில், அய்யாவை வரவேற்றனர். சக்கர நாற்காலியில் அய்யாவும் அங்கே அமர்ந்து அண்ணா வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

அண்ணாவின் கார் வரவில்லை என்பது எங்களுக்கு எல்லாம் நிம்மதியைத் தந்தது.

சில மணித்துளிகளில் அண்ணாவை அழைத்து வந்த கார் வந்தது.

அய்யாவை அண்ணா அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. விமான நிலையத்திற்கு அண்ணாவை அழைத்து வந்த காரின் முன்சீட்டில் அண்ணா. பின் சீட்டில் கலைஞர் மற்றும் சிலர் அமர்ந்திருந்தனர்.

அய்யா அருகில் வந்தவுடன் இன்ப அதிர்ச்சியுற்ற அண்ணா அவர்கள் காரை நிறுத்தச் சொன்னதோடு, கதவைத் திறந்து இறங்கவும் முயற்சித்தார்கள்; ஆனால் தந்தை பெரியார் அவர்கள் "வேண்டாம்; வேண்டாம்; தயவு செய்து இறங்க வேண்டாம்; நீங்கள் சென்று நலம் பெற்று வாருங்கள்” என்று உணர்ச்சிகள் தொண்டையை அடைக்கும் வண்ணம் கூறினார்கள். அருகில்  அய்யாவின் தள்ளு நாற்காலிக்குப் பின்னால் இருந்த எங்களைப்போன்றவர்கள், அமைச்சர்கள் சிலர் ஆகிய அனைவரின் கண்களும் பனித்தன! கண்ணீர்த் துளிகள் உருண்டோடின.

ஒரு காலத்தில் 'கண்ணீர்த் துளி" என்று அழைக்கப்பட்ட தலைவராகிய தன் தனயனின் உடல் நிலை குறித்து, பாசம் பொங்க, "விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டால் என்ன, அண்ணா பயணிக்கும் விமானத்தையாவது பார்த்துத் திரும்புவோமே” என்ற- அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் பாசம்தான் என்னே!

நியூயார்க் டவுன் ஸ்டேட் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகி, டாக்டர் மில்லர் போன்ற மருத்துவ நிபுணர்களால் குணமடைந்து வந்த அண்ணா சுமார் 3 வாரங்களுக்கு மேல் அங்கேயே தங்கி இருந்தார்கள்.

பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரினை நியூயார்க் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்; காரணம் அங்கே அவர்கள் நிதானமாக ஓய்வுடன் இருப்பதால் படித்துப் பொழுதுபோக்க - களைப்பாறப் பயன்படும் என்பதால்.

அதனைப் பெற்றுப் படித்துவிட்டுக் குடும்பப் பாசத்துடனும், கொள்கைப் பாசத்துடனும் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் அய்யா அவர்களுக்கு எழுதிய கடிதமே அவர்களுக்குள் இருந்த பாசத்தினைப் படம் பிடித்துக் காட்டப் போதிய ஆவணம் ஆகும்!

கடித இலக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

முழுதும் அண்ணாவின் கையெழுத்திலேயே அண்ணாவே அய்யாவுக்கு எழுதிய கடிதம் அது!

அக்கடிதம் இதோ...

சிகிச்சைக்காக அண்ணாவை வழியனுப்பி வைத்த அய்யாவிற்கு அக்கடிதம் ஓர் அற்புதமான “டானிக்”காக (மருந்தாக)வும் பயன்பட்டது என்பதை அய்யா அவர்கள் அதைப் படித்துச் சுவைத்தபோது அருகில் இருந்த எங்களைப் போன்றவர்களால் உணர முடிந்தது!

அண்ணா சிகிச்சை முடிந்து திரும்பியவுடன், அண்ணாவை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்து வரவேண்டும் என்பதற்காகவே சென்னைக்கு வந்தார் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியார் திடலிலிருந்து அண்ணாவின் இல்லத்திற்குப் புறப்படுமுன் அய்யா அண்ணாவைப் பார்க்க வருகிறார் என்றவுடன், அண்ணா அவர்களே இல்லை இல்லை வந்து அய்யாவைப் பார்க்கிறேன் என்று சொன்னார்; முதல் அமைச்சர் அவர்களிடம் சொல்லி இருக்கிறார்கள் "அய்யா அவர்கள் அவென்யூ சாலை அண்ணா இல்லத்திற்குப் புறப்பட்டு விட்டார்கள்” என்று. அங்கே அய்யாவுடன் இறங்கி உள்ளே சென்றவுடன் அண்ணா எதிர்கொண்டு வணக்கம் தெரிவித்து அழைத்துச்சென்று அமரவைத்தார்கள்.

முன் ஒரு சம்பவம்:

சென்னை அரசினர் பொதுமருத்துவ மனையில் அய்யா தங்கிச் சிகிச்சை பெறும் நிலையில், சட்டப்பேரவையில் தோழர் முனு.ஆதி அவர்கள் காங்கிரஸ் தியாகிகளுக்குத் தருவதுபோலத் தந்தை பெரியாருக்கும் தியாகிகள் மானியம் அரசு அளித்திடுமா? என்ற ஒரு கேள்வி கேட்டபோது-

முதலமைச்சர் அண்ணா எழுந்து, "தியாகிகள் மானியம் என்ன? இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்ட காணிக்கையாகும்” என்று பதில்கூறி அவையினரையும் மற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்!

இச்செய்தி சட்டப்பேரவையிலிருந்து ‘விடுதலை’க்குக் கிடைத்தவுடன், சென்னை G.H. என்ற அந்தப் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தந்தை பெரியாரிடத்தில் ஓடோடிச்சென்று தெரிவித்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சி வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்றாகும்!

‘எனக்கு வலி குறைந்தே விட்டது!' என்று எங்களிடம் கூறினார் மருத்துவமனையில் தந்தை பெரியார் அவர்கள்.

நான் - 'விடுதலை'யின் ஆசிரியர் என்ற முறையில், அய்யா இதனை ஒரு பெட்டிச் செய்தியாகக்  (Box Matter)  கட்டம் கட்டிப் போட்டுக் கொள்ளலாமா? என்று கேட்டவுடன், மகிழ்ச்சியாக "தாராளமாகப் போடுங்கள்” என்று கூறினார்கள். அதுபோலவே அது ‘விடுதலை'யில் பெட்டிச் செய்தியாகியது.

அண்ணாவுக்கு நோய் முற்றிய நிலையில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும்போது, அதற்கருகில் உள்ள எனது இல்லத்திலேயே வந்து பலநாள் தங்கிய தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் ஆகியோர் ஒவ்வொரு நாளும் அந்த மருத்துவமனைக்குச் சென்று நேரில் அண்ணாவைப் பார்த்து, கவலையோடு திரும்புவார்கள்.

அண்ணா 1969 பிப்.3ஆம் நாள் நடுநிசியில் நம்மை விட்டுப் பிரிந்தபோது மருத்துவமனை வார்டிலேயே இருந்த நான் அவசர அவசரமாக வந்து நடு இரவிலே அய்யாவை எழுப்பி, அவர்களிடம் தகவல் சொன்னவுடன் அய்யா வேனை எடுக்கச்சொல் என்றார்கள். அண்ணாவின் உடல் அங்கிருந்து அவர்தம் இல்லம் கொண்டு செல்லப்படுமுன் அவரை ஆளாக்கிய தந்தை பெரியார் இறுதி மரியாதை செலுத்திடச் சென்றபோது அருகில் இருந்த கலைஞர் அவர்கள் அய்யாவைத் தழுவி, ‘அய்யா உங்கள் மூத்த மகன் நம்மையெல்லாம் விட்டுப் போய் விட்டாரே அய்யா' என்று கதறிக் கதறி அழுதார்.

அங்கே அண்ணாவின் உடல் அருகில் அய்யா அவர்கள் கண்கலங்கிய நிலையில் அப்படியே நின்று பிரியா விடை கொடுத்தார்.

வள்ளுவரின் குறளுக்குரிய இலக்கியமாய் அக்காட்சி நிகழ்ந்தது!

"புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து” குறள் (780)

வெண்தாடி வேந்தரின் கண்ணீர்த் துளிகள் அந்தக் கொள்கைக் கோமானின் உடலின் மீது விழுந்தது என்பதற்கு உருவமாக அந்த இரவே தனது அளப்பரிய துன்பத்தைத் தகர்க்க, நகர்த்த உடனே ஓர் இரங்கல் செய்தி எழுதினார் தந்தை பெரியார் அவர்கள்!

“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!"

என்பதே தலைப்பு! அத்தனை ஆழமான கருத்தடக்கம். ‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!'

'The King is dead

Long live the King'

என்று இங்கிலாந்தில் கூறுவது மரபு.

அதாவது அரசன் மறைந்தாலும், அது ஒரு தொடர் அமைப்பு; அது மறையாது என்பதாகும்!

ஆம்! இன்று அவர்தம் நூற்றாண்டை- அவரது இதயத்தை இரவலாகப் பெற்று ஆளும் அவர்தம் பாசமிகு தம்பி கலைஞர்தம் பொற்கால ஆட்சி உலகிற்கே பறைசாற்றிப் பல்முனைகளிலும் சாதனைச் சரித்திரத்தை நாளும் படைத்து அண்ணா வாழ்கிறார்  - என்றும் வாழ்வார் என்று காட்டுகிறதே!

'ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்' என்ற அரும்பசியெவர்க்கும் ஆற்றும் அரிய திட்டத்தின் தத்துவமே அண்ணா அரசு வாழ்கிறது; வளருகிறது; ஏழைய எளியவர்களின் நெஞ்சில் பால் வார்த்து வாழ்த்துடன் வளருகிறது என்பது தானே!

No comments:

Post a Comment