பெண்ணுரிமை - கல்வி - ஏழைகளுக்கு எதிரானவர் திலகர் திலகரின் எழுத்துகளிலிருந்தே சான்றுகளை எடுத்து வைக்கிறது பி.பி.சி. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

பெண்ணுரிமை - கல்வி - ஏழைகளுக்கு எதிரானவர் திலகர் திலகரின் எழுத்துகளிலிருந்தே சான்றுகளை எடுத்து வைக்கிறது பி.பி.சி.

மகாராட்டிராவை 1850களில் மகாத்மா ஜோதிபாய் புலே அதன் பிறகு கோவிந்த ரானடே, கோலப்பூர் சாகு மகாராஜ், பீம்ராவ் அம்பேத்கர் போன்றோர் நூற்றாண்டுகளாக சமூகநீதிக்களமாக பயன்படுத்தி மாற்றி அமைத்தனர். 

விவசாயத் தொழிலாளி, மகளிருக்கு அதிகாரம் அளித்தல், அனைவருக்கும் கல்வி மற்றும் தீவிரமான சமூக சீர்திருத்தம் என்ற 4 அடிப்படை கொள்கைகளை முன்வைத்தனர். இந்த நிலையில் தான் 1881 ஆம் ஆண்டில் பத்திரிகையாளராக தனது தொழிலைத் தொடங்கிய திலகர் மேலே கூறிய 4 கொள்கைகளிலும் முற்றிலும் எதிர்மறையாக திகழ்ந்தார்.  அவருடைய வாழ்நாள் முழுக்க அடித்தட்டு மக்களுக்கான உரிமைகள் கிடைப்பதை கண்டு வெறுப்பின் உச்சத்தில் வாழ்ந்தார். 

ஜோதிபா புலே அவரைத் தொடர்ந்து எம்.ஜி.ரானடே மற்றும் சீர்திருத்தவாதிகள் 1884இல் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளைத் தொடர்ந்து நடத்தியபோது திலகர் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றார்.

'த மராட்டா' என்ற மராட்டி இதழில் 1881-1897 காலக்கட்டத்தில் திலகர் தான் அதன் உரிமையாளர் மற்றும் ஆசிரியராக இருந்தார்.  அகில் பாரதிய இந்து மகாசபாவின் தலைவராக இருந்த என்.சி. கேல்கருடன் இணைந்து இணை ஆசிரியராக செயல்பட்டார்.

’கொடூர வட்டிக்கு பணம் தரும் பனியாக்கள் 

விவசாயிகளின் கடவுளாம்’

  1874-1879 காலக்கட்டத்தில் பஞ்சத்தால் சிறு விவசாயிகள் துன்புற்ற போது, டெக்கான் விவசாயிகள் நிவாரண மசோதாவை விவசாயிகள் நல அமைப்பின் சார்பில் எம்.ஜி. ரானடே மற்றும் ஆங்கிலேய நிர்வாகத் தலைவர் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது.

சிறு விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், அவர்கள் வருவாய் உயரும் போது  கடனை திருப்பிச் செலுத்தும் நடைமுறைகள் கொண்டதாகவும் அந்தத் திட்டம் இருந்தது. அந்தச் சட்டத்தையும், வங்கிகளையும் திலகர் விமர்சித்தார்.

வட்டி முதலாளிகள் 'விவசாயிகளின் கடவுள்' போன்றவர்கள் என்று அவர் கூறினார். கடன் கொடுத்தவரின் பணத்தைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், சிறு விவசாயிகளை சிறையில் தள்ளும் வகையிலான சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக பிரிட்டீசார் தங்களது நிர்வாகத்தின் கீழ் வங்கிகளை  கொண்டுவருவது இல்லை, அவை பனியாக்களின் கைகளிலேயே இருக்கட்டும் என்று 1885இல் அரசு முடிவு செய்தது. இது திலகருக்கு கிடைத்த முதலாவது வெற்றியாக அமைந்தது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க உருவான டெக்கான் சபாவை நோயுற்றவர்களின் அமைப்பு என்று திலகர் கூறினார். ரயத்வாரி நிலப் பகுதிகளுக்காக தனியாக ஓர் இயக்கத்தை அவர் நடத்தினார். வட்டிக்கு பணம் தருபவர்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்  (The Mahratta, 25 பிப்ரவரி 1900, Suspension and Remission of Revenue, தலையங்கம்).

தன்னுடைய கல்வி செயல் திட்டம் முழுக்க தொடர்ச்சியாக திலகர் கடைப்பிடித்து வந்த ஜாதிய முறைகளை ஆதரிக்கும் வகையிலும், அவருடைய சிறு விவசாயிகளுக்கு எதிரான அணுகுமுறை தொடர்பிலும் இருந்தது. `சிறு விவசாயிகளின் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் படிக்க, எழுத, வரலாறு, புவியியல் மற்றும் கணிதம் கற்றுத் தருவதால் நடைமுறை வாழ்க்கையில் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை' என்பது திலகரின் வாதமாக இருந்தது.

அது `அவர்களுக்கு நல்லதைவிட அதிக கெடுதலையே செய்யும்' என்பது அவருடைய கருத்தாக இருந்தது. பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு `தச்சு, பொற்கொல்லர், மேஸ்திரி, தையல் வேலை, வாழ்க்கையில் அவர்களின் நிலைக்கு ஏற்ற மிக சாதாரணமான தொழில்களை' கற்றுத்தர வேண்டும் என்று அவர் கூறினார். அதுதான் `கல்வியில் அறிவார்ந்த முறையாக இருக்கும்' என்று திலகர் கூறினார்.

1881ஆம் ஆண்டில் அரசாங்கம் 200 பேர் வாழும் அனைத்து கிராமங்களிலும் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்க வேண்டும் என்று பூனா சர்வஜனிக் சபா கோரிக்கை விடுத்தது. அதை திலகர் எதிர்த்தார். `சிறு விவசாயிகளின் பிள்ளைகளுக்குக் கல்வி அளிப்பது பணத்தை வீணடிக்கும் செயல்' என்று அவர் கூறினார். அனைவருக்கும் கல்வி என்று ரானடே தொடர்ந்து வலியுறுத்துவதை திலகர் எதிர்த்தார். `அரசுப் பணம் என்பது வரி செலுத்துபவர்களின் பணம். அந்தப் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை வரி செலுத்துபவர்களுக்கு தான் உள்ளது' என்று அவர் கூறினார் (The Mahratta, 15 May 1881, Our system of Education-A Defect and a Cure).

நிலவுடைமை உள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி தரவேண்டும் என்றார் திலகர்

பம்பாய் பல்கலைக்கழகத்தில் பார்ப்பனர் அல்லாதோர் அதிக எண்ணிக்கையில் சேர உதவும் வகையில், நுழைவுத் தேர்வுக்கான பாடத் திட்டங்களை நீக்க வேண்டும் என்று ரானடே மேற்கொண்ட முயற்சிகளையும் திலகர் எதிர்த்தார் (The Mahratta, 7 August 1881, Our University I).. ஆங்கிலக் கல்வியை திலகர் எதிர்க்கவில்லை. `ஆங்கிலக் கல்வியை நாட்டில் அறிமுகம் செய்வதற்கு முன்பு நாம் அறியாமையில் இருந்த கூட்டமாக இருந்தோம்' என்று அவர் நம்பினார். நிலவுடைமை உள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப்பட வேண்டும்,  என்று அவர் விரும்பினார் (The Mahratta, 21 August 1881, Our University III). அவருடைய விமர்சனங்கள் பார்ப்பனர் அல்லாதோர் எதிர்ப்பை சம்பாதித்தது.

எனவே 1891இல் தேசத்தின் கட்டமைப்புக்கு ஜாதி அமைப்பே அடிக்கல் என்று அவர் வாதிடத் தொடங்கினார். கல்வி கற்ற பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் இடையில் வேறுபாடு கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. இப்படி இருந்தால் புரட்சி வெடிக்கும் என்று அவர் கூறினார் (The Mahratta, 22 March 1891, What shall we do next? Editorial).

ஜாதிக்கு மட்டுமே சக்தி உள்ளது' என்ற தலைப்பில் எழுதிய அவருடைய தலையங்கத்தில் (10.5.1891) `ஜாதியத்தின் தாக்கம் இல்லாமல் போயிருந்தால் நமது ஹிந்து தேசம் என்பது நீண்ட காலத்துக்கு முன்பே காணாமல் போயிருக்கும்; ரானடே போன்ற சீர்திருத்தவாதிகள் `ஜாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். தேசத்தின் உயிர்த்துடிப்பை அழிக்கப் பார்க்கிறார்கள்' என்று அவர் கூறியுள்ளார்.

மத அடையாளங்கள் இல்லாத கல்வி முறை `மத அடிப்படைகளை மறுக்கும்' கருத்தை விதைப்பதாகக் கூறி அதை திலகர் நிராகரித்தார். பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் மத அடிப்படையிலான கல்வி `மறுக்கக் கூடாத தூய்மை மற்றும் எளிமையைக் கொண்டதாக இருக்க வேண்டும். கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று பள்ளிக்கூட மாணவர்களிடம் சொல்ல வேண்டும். அதற்கு எந்த மாணவராவது கண்ணால் காணும் ஆதாரம் கேட்டால், அவரை பிரம்பால் அடித்து மவுனமாக்கிவிட வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார் (The Mahratta, 3 July 1904, Religion Education, Editorial).

இந்தியர்களை ஹோம் ரூல் லீக் பார்ப்பனர்கள் ஆள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். `நால்வர்ணம் என்ற ஜாதிய முறை பிரிட்டிஷ் ஆட்சியில் சிதைந்துவிட்டது' என்று கூறி ஹோம் ரூல் முறையை அவர் வலியுறுத்தினார்.

 ஜம்காண்டி நகரின் பார்ப்பனர் அல்லாத தலைமை நிர்வாகியை கோல் இல்லாத கூனுள்ள கிழவன் என்று திலகர் விமர்சித்தார் (The Mahratta, 21 April 1901, Non-Brahmin Craze, Editorial). பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையைக் கொண்டுவந்த கோலாப்பூர் மகாராஜாவுக்கு `புத்தி பேதலித்துவிட்டது' என்று அவர் ஏளனம் செய்தார்(The Mahratta, 15 November. 1903). 

பெண் கல்வி என்ற முயற்சிக்கும் இதேபோல திலகரிடம் இருந்து பலமான எதிர்ப்பு எழுந்தது. ரானடே புனேவில் தொடங்கிய பெண்கள் பள்ளிக்கூடத்தில் வழக்கமான பாடத் திட்டங்கள் இருந்தன. அதனால் பெண்களால் உயர் கல்வி கற்க முடிந்தது. `தேசத்தில் வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு பெண் கல்வி அவசியம்' என்று ரானடே வலியுறுத்தினார்.

பெண் கல்விக்கு எதிர்ப்பு

மராத்தா, குன்பி, சோனார், மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தார்கள். அவர்களில் பலரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். சில உயர்ஜாதி பெண்களுடன் தாழ்த்தப்பட்ட ஜாதிப்பெண்கள் ஒன்றாக சேர்ந்து கல்வி பயில்வது குறித்து திலகர் விமர்சித்தார். "பெண்கள் கல்வி கற்பதால் என்ன பயன்? இதனால் பெண்களின் மகிழ்ச்சியான குடும்பவாழ்க்கை அழிவை நோக்கிச் செல்கிறது" என்று திலகர் கூறினார் (The Mahratta, 28 September 1884).

"பெண்களுக்கு தேவைப்பட்டால் தையல், சமையல், இதர வீட்டு அழகு வேலைப்பாடுகள்' மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காலை அல்லது மாலையில் தினமும் 3 மணி நேரம் மட்டுமே பள்ளிக்கூடம் நடத்த வேண்டும். எனவே, பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளைக் கவனிக்க நேரம் கிடைக்கும்  (The Mahratta, 18 September 1887 Curriculum of the Female High School, Is It In The Right Direction?) என்றும் அவர் கூறினார். `பாடத் திட்டத்தை உடனடியாக சரி செய்யாவிட்டால்,கணவரை மதிக்காத பெண்கள் உருவாகி பின்னர் உரிமைகளைக் கேட்பார்கள்" என்று திலகர் எச்சரிக்கை விடுத்தார்.

1890ஆம் ஆண்டில் 30 வயதான கணவர் ஹரி மைத்தி என்ற பார்ப்பனருக்கு 10 வயதான சிறுமி புல்மோனி என்பவரைத் திருமணம் செய்துவைத்தனர். அந்த சிறுமியோடு வலுக்கட்டாயமாக அவர் உடலுறவு கொண்டதால் கடும் உதிரப்போக்கு ஏற்பட்டு அந்தச்சிறுமி மரணமடைந்தார்.

இது தொடர்பாக எழுதிய திலகர் ஹரிமைத்தி சமூகத்தில் கற்ற மரியாதைக்குரிய இளைஞர் அவர் - ஏற்கெனவே மனைவியை இழந்திருக்கிறார் ஆகையால் `அவர் மீது குற்றம் சொல்ல வேண்டாம்' என்று மக்களை திலகர் கேட்டுக் கொண்டார்  (The Mahratta, 10 August 1890, The Calcutta Child-Wife Murder Case, Editorial).

1900 ஆண்டுக்குப் பிறகு தேசியத் தலைவராக மதிக்கப்படும் நிலையில் திலகரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதா? அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. "சிறு விவசாயிகளை நில உடைமையாளர்கள் மற்றும் வட்டிக்குப் பணம் தருபவர்களிடம் இருந்து விடுவித்துவிட்டது" என்று காலனி ஆதிக்க அரசின் மீது திலகர் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார் (The Mahratta, 8 November 1903, Inamdar's Grievances, Editorial).

இனாம்தார்கள் மற்றும் கோட்கள் போன்ற பெரிய நில உடைமையாளர்களை அவர் தீவிரமாக ஆதரித்தார். சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைப்பதை எதிர்த்தார் (The Mahratta, 27 September 1903. The Khoti Bill, Editorial). 1915இல் டி.கே. கார்வே புனேவில் பெண்கள் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியபோது திலகர் எதிர்த்தார். `சராசரி இந்துப் பெண்ணை தன் கணவரின் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆற்றவேண்டிய சிறப்புக் கடமைகளைக் கொண்ட ஒரு மருமகளாகத் தான் பார்க்க வேண்டும்' என்பது திலகரின் வாதமாக இருந்தது. `சமையல், வீட்டுப் பொருளாதாரம், குழந்தை பராமரிப்பு' என்ற விடயங்களை மட்டும் பாடத் திட்டமாக வைக்க வேண்டும் என்று கார்வேயை திலகர் கேட்டுக் கொண்டார்  (The Mahratta, 27 February 1916, Indian Women's University). பெண்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது, திலகரின் The Mahratta  இதழும், நகராட்சியில் அவருடைய ஆதரவாளர்களும் அதை எதிர்த்தனர் (The Mahratta 17 August 1919, Free and Compulsory Education in Poona).

மறுபக்கம் கம்யூனிஸ்டுகளோடு தொடர்பு

 1885ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகம் எங்கும் சமத்துவச் சித்தாந்தம் கம்யூனிஸ்ட் பெயரில் பரவ அதனை தின்று ஜீரணிக்க தானும் ஒரு கம்யூனிஸ்ட் போல் காட்டிக்கொண்டார்.  பிரிட்டனில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய உறுப்பினர்களுடன் திலகர் நெருங்கிய தொடர்பில் இருந்தார். லெனினை, ரஷ்யப் புரட்சியை அவர் புகழ்ந்தார். திலகரை பெருமைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரராக சோவியத் மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் வரலாற்றாளர்கள் கருதும் அளவிற்கு கம்யூனிச ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்வதில் வெற்றி பெற்றார். அவரது இந்த கம்யூனிச வேடத்தின் பின்னால் விவசாயிகளுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான, ஜாதி அமைப்புக்கு ஆதரவான செயல்பாடுகள் மறைந்து போனது. 

நூற்றாண்டு கடந்துவிட்டது இன்றும் மகாராட்டிராவில் விவசாயிகள்  தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஜாதிய மத மோதல்கள் தீவிரமாக உள்ளது, பெண்கள் கொல்லப்படுகின்றனர், கல்வி மறுக்கப்படுகிறது. புலே கையிலெடுத்து அம்பேத்கர், சாகுமகராஜ் போன்றோர் விட்டுச்சென்ற மிகவும் துடிப்பான மகாராட்டிராவை  மோசமாகப் பிளவுபட்ட மகாராட்டிராவாக விட்டுச் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment