ஜாலியன்வாலாபாக்கும் கிண்டியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

ஜாலியன்வாலாபாக்கும் கிண்டியும்


ஜாலியன்வாலாபாக் படுகொலை களைச் செய்த ஜெனரல் டயர் லண்டன் செல்லும் முன்பு தேனீர் விருந்து அளித்தார். அந்த தேனீர் விருந்தில் சில சமஸ்தான மன்னர்களும் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் மன்னர் சுந்தர்சிங் மஞ்சிதா. அவர்களின் பிள்ளைகள் ஒன்றிய அமைச்சர் களாகவும் இருந்துள்ளனர்.  

அந்த நிகழ்ச்சியில் சத்தார் சிங் என்பவரும் கலந்துகொண்டார். அவர் தனது உண்மைப் பெயரை மறைத்து ரிடையர்ட் பிரிட்டீஸ் இந்திய ஆர்மி கர்னல் என்ற பெயரில் நுழைந்தார். தேனீர் விருந்து கலந்துரையாடல் நடந்தது, சமஸ்தான மன்னர்கள் ஜெனரல் டயருக்கு விலை உயர்ந்த மோதிரங்கள், சந்தனப் பெட்டிகளில் உயர்ரக ரோஜா வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை வழங்கிக்கொண்டு இருந்தனர். மேவாட் மன்னர் விலை உயர்ந்த கார் ஒன்றை லண்டனில் அவர் வீட்டிற்கு டெலிவரி செய்து அதன் சாவியை வழங்கினார்.

அப்போது ஜெனரல் டயரைப் பார்த்து யாரும் எதிர்பாராத நேரத்தில் சத்தார் சிங்  கேள்வி ஒன்றைக் கேட்டார். நீங்கள் ஆயுதம் இல்லாமல் அமைதியாக தங்களது உரிமைகளைப் பற்றி உரையாடிக்கொண்டு இருந்த மக்களை அங்கு பெண்கள் குழந்தைகள் அனைவரும் இருக்கும் போது “ஆப்பிரிக்க யானைக்கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாக வேட்டையாட துப்பாக்கியால் சுடுவதைப் போன்று சுட்டுக் கொன்றீர்களே” என்று கேட்டார். 

முதலில் ஜெனரல் டயர் கோபப்பட்டு சத்தார் சிங்கை வெளியே போகச் சொல்லுவார் என்று அனைவரும் நினைத்தனர். 

ஆனால் அவரோ திமிர்த்தனமாக கம்பீர உடல்மொழியோடு ஆங்கிலத்தில் “ஆமாம் எங்களின் சட்ட திட்டங்களை மதிக்காமல் இருந்தால் எங்களின் துப்பாக்கிகள் பதில் கூறும்" என்று கூறினார். 

ஜெனரல் டயரின் பாதுகாவலர்கள் சிலர் சத்தார் சிங்கைப் பிடிக்கப் போனார்கள், ஆனால் ஜெனரல் டயர் அவர்களைத் தடுத்து அவரைப் பேசவிடுங்கள் என்று கூறி அதற்கு பதிலும் கூறினார், ஜெனரல் டயர் பதில் கூறியதும் அவையில் இருந்தவர்கள் கை தட்டினார்கள்.  அதன் பிறகு கத்தார் சிங்கை வெளியே அனுப்பினார்கள்.  

2018ஆம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரின் போது ஜாலியன்வாலாபாக் நினைவகம் தொடர்பாக நடந்த ஒரு விவாதத்தின் போது ஜெனரல் டயர் விருந்து அளித்தது குறித்துப்  பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. - சத்தார் சிங் தொடர்பானவை பஞ்சாபிய நாட்டுப்புறப் பாடலில் உள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ”எண்ணித் துணிக” என்ற ஒரு நிகழ்ச்சியை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடத்தினார். அதில் நீட் தேர்வில் கலந்துகொண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் குடும்பங்களை அழைத்து உரையாடினார். 

அப்போது சேலம் உருக்காலையில் பணி புரியும் அதிகாரியான அம்மாசியப்பன் ராமசாமி என்பவர் நீட் தேர்விற்காக பல கோடிகளை கொள்ளையடிக்கும் பயிற்சி நிலையங்கள், நீட் என்னும் மோசடித் தேர்வினால் தன்னுயிர் மாய்க்கும் மிகவும் திறமைவாய்ந்த இளம் தளிர்கள் குறித்துப் பேசி நீங்கள் “தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நீட் தேர்வு தடை மசோதாவிற்கு கையொப்பமிடுவீர்களா?" என்று கேட்டார். 

அதற்கு பதில் அளித்த ஆளுநரின் உடல் மொழி அன்று ஜெனரல் டயரின் உடல்மொழியோடு ஒத்துப்போனது. 

இங்கு அம்மாசியப்பன் ராமசாமியை பேசவிடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் ஆளுநர் அவரை முழுமையாக பேசவிட்டு அதற்கு பதில் கூறிய பிறகு ஒலி வாங்கியை பிடுங்கி உள்ளனர்.


No comments:

Post a Comment