'நீட்' - சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் போராடும் தமிழ்நாடு அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

'நீட்' - சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் போராடும் தமிழ்நாடு அரசு


ஏ.கே.ராஜன் குழு

மே 2021இல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 'நீட்' பாதகங்கள் குறித்து ஆராயச் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது.

12 முதலமைச்சர்களுக்கு கடிதம்

நீட் விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரிடம், ஒப்புதல் வழங்கும்படி பல்வேறு தருணங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.  நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரியும் அக்டோபர் 4, 2021 அன்று, 12 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

ஆளுநருடன் சந்திப்பு

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதியன்று, ஆளுநரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமன்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் அழுத்தம் - பிற அரசியல் கட்சிகளின் அழுத்தம் - பொதுமக்கள் - மாணவர் இயக்கங்களின் போராட்டத்தின் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2, 2022 அன்று நீட் விலக்கு மசோதாவினை ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார்.

அனைத்து கட்சிக் கூட்டம்

மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து, ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பிப்ரவரி 5, 2022 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.

மீண்டும் மசோதா

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிப்ரவரி 8, 2022 அன்று மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதலமைச்சரின் சந்திப்பு

இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி, மார்ச் 15, 2022 அன்று தமிழ்நாடு ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

அமைச்சர்கள் சந்திப்பு

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், மீண்டும் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரை ஏப்ரல் 22, 2022 அன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தினர். இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் ரவி மே 5, 2022 அன்று அனுப்பி வைத்தார்.

நாடாளுமன்றத்தில் தி.மு.க.

இப்படி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு ஒருபுறம் எடுத்து வருவதும், ஆளுநர் அதனைத் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், நீட் பிரச்சினையை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர்.

மோடியிடம் வலியுறுத்தல்

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிற போதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி செல்கிற போதும், பிரதமரிடம் வைக்கப்படும் முதல் கோரிக்கையே 'நீட்' தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோருவதுதான். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், பிரதமர் மோடியை டில்லியில் பிப்ரவரி 28, 2023 அன்று சந்தித்தார். அப்போதுகூட, பிரதமரிடம், நீட் ஒழிப்பைத்தான் வலியுறுத்தினார்.

நீட் மரணங்களைத் தடுக்க ஆர்ப்பாட்டம்

22ஆம் தேதி திராவிடர் மாணவர் கழகம் மற்றும் இளைஞர் அணி சார்பில்  தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தி.மு.க. - 2023 ஆக.20இல் பட்டினிப் போராட்டம் நடத்த உள்ளது.

No comments:

Post a Comment