தமிழ்நாடு கோயில்களில் சமீப ஆண்டுகளாக சிலை திருட்டு இல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

தமிழ்நாடு கோயில்களில் சமீப ஆண்டுகளாக சிலை திருட்டு இல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடில்லி, ஆக 3 தமிழ்நாடு கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக சிலைகள் திருட்டு நடைபெறவில்லை என ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கோயில் சிலைகள் திருட்டு தொடர்பாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய கலை, கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: 

2013 முதல் 2023 வரையிலான கடந்த பத்து ஆண்டு களில் அதிகபட்சமாக கருநாடக மாநிலத்தில் இருந்து 14 சிலை கள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் மீட்கப் பட்டுள்ளது. ஆந்திராவில் 3 சிலைகள் திருடப்பட்டு 2 மீட்கப்பட்டுள்ளன. பீகார், ஒடிசா மாநிலங்களில் இருந்து 4 சிலைகள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை எதுவும் மீட்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளில் எந்த கோயில் சிலையும் களவு போகவில்லை. மேலும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 20 மாநிலங்களிலும் சிலை திருட்டு என்பது நடை பெறவில்லை.

சிலைகள் உள்ளிட்ட நமது பாரம்பரிய நினைவுச் சின்னங் களை பாதுகாப்பதில் இந்திய தொல்லியல் துறை உறுதியாக உள்ளது. அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட பழங்கால பொருட்களைப் பாதுகாப்பதில் தனியார் பாதுகாப்புப் படையினர், மாநில காவல்துறையின் ஆயுதக் காவலர்கள், தேவைக்கு ஏற்ப ஒன்றிய தொழில் பாது காப்புப் படையினரும் ஈடு படுத்தப்படுகின்றனர். 

ஒருவேளை பழங்கால பொருட்கள் திருடப்பட்டதாக எஃப்.அய்.ஆர் பதிவு செய்யப் பட்டால் உடனடியாக ‘லுக் அவுட்’  அறிவிக்கை  பிறப்பிக்கப் பட்டு, கஸ்டம்ஸ் உள்ளிட்ட சட்ட அமலாக்க நிறுவனங்கள் எச்சரிக்கை செய்யப்படுகின்றன. இதனால், திருடப்பட்ட பழங்காலச் சின்னங்கள் வேறு எந்த வெளிநாட்டுக்கும் சட்ட விரோதமாக கொண்டு செல் லப்படுவது தடுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களான 31 தொல் பொருட்கள் திருடப்பட் டுள்ளன. அவற்றில் 27 இன்னும் மீட்கப்பட வேண்டியுள் ளது. எனினும் அவை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. திருடிச் செல்லப்பட்ட பழங்காலச் சின்னங்களை மீட்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தியா வுக்கு வெளியே இது மாதிரியான நமது பழைய நினைவுச் சின் னங்கள் இருப்பதாக தெரியவந் தால் தொல்லியல் துறை உடனடியாக சம்பந்தப்பட்ட நாடுகளின் இந்திய தூதரகங் களின் மூலமாக அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நமது வெளியுறவுத் துறை மூலமாக 1976 முதல் 2023 வரை மொத்தம் 251 சிலைகள் உள்ளிட்ட பழைமையான நினைவுச் சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2014 - 2023 வரையிலாக மட்டும் மீட்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை 238 ஆகும். இவ்வாறு கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment