அலைபேசி மூலம் மேக்ரோ போட்டோகிராபி சாதிக்கும் மதுரை கல்லூரி மாணவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 29, 2023

அலைபேசி மூலம் மேக்ரோ போட்டோகிராபி சாதிக்கும் மதுரை கல்லூரி மாணவி

சின்னஞ்சிறிய புழு, பூச்சியினங்களை அலைபேசி கேமரா மூலம் பிரம்மாண்ட ஒளிப் படங்கள் எடுத்து அசத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர். மேக்ரோ போட்டோ கிராபி கலையில் சாதித்து வரும் இந்த மாணவியின் ஒளிப் படங்கள் பல்வேறு கண்காட்சிகளில் இடம்பெற்று பாராட்டுதல்களை பெற்றுள்ளன.

மதுரை கோச்சடை அருகே டோக் நகரைச் சேர்ந்த போட்டோகிராபர் சரவண விஜயகுமார் - சுபா தம்பதியின் மூத்த மகள் சுருதி (20). இவரது சகோதரர் விஸ்வசித் ராம். இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சுருதி தற்போது கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பிடெக் பயோடெக்னாலஜி படித்து வருகிறார்.

பொழுதுபோக்காக புழுக்கள், பூச்சி யினங்களை தனது மொபைல் போன் கேமராவில் படம் எடுக்க தொடங்கினார். இதில் ஆர்வம் ஏற்பட்டு மேக்ரோ போட்டோகிராபி என்றழைக்கப்படும் இக் கலையில் சாதனைகளை புரிந்து வருகிறார்.

எட்டுக்கால் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், எறும்புகள், ஊசித்தட்டான்கள், செடி, கொடிகளில் உள்ள புழு, பூச்சியினங் களை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தி வருகிறார். தண்ணீர் குடிக்கும் எறும்பு, இரை தேடும் எறும்புக் கூட்டங்கள், தேனீக்கள், வீட்டிலுள்ள ஈக்களின் கண்கள், சில பூச்சியினங்கள் மற்ற பூச்சிகளை இரையாக்குவது போன்ற படங்களை எடுத்து காட்சிப்படுத்தியுள்ளார்.

மொபைல் போனில் புழு, பூச்சிகளை படம் பிடிப்பதில் ஏற்பட்ட ஆர்வம் குறித்து ச.சுருதி கூறியதாவது: கரோனா காலகட்டத்தில் பிளஸ் 2 பாடங்களை படிப்பதற்காக எனது தந்தை மொபைல் போன் வாங்கித் தந்தார். அதிலுள்ள கேமராவில் ‘மேக்ரோ மோடில்’ யதார்த்தமாக வீட்டில் உள்ள சின்னஞ்சிறிய எட்டுக்கால் பூச்சியை போட்டோ எடுத்தேன். அது எனக்கு பிரம்மாண்டமாகத் தெரிந்தது.

அதிலிருந்து சிறிய புழு, பூச்சியினங்களை மொபைல் போன் கேமராவில் எடுக்க தொடங்கினேன். மொபைல் போன், அதில் பொருத்தும் சோனி 50 எம்எம் லென்ஸ், 150 எம்எம் லென்ஸ், இரவில் எடுப்பதற்கான மொபைல் லைட் ஆகிய நான்கு கருவிகள் மூலம் இத்தகைய படங்களை எடுத்து வருகிறேன்.

எனது வீட்டைச் சுற்றியுள்ள மரம் செடிகள் மீது வாழும் பூச்சியினங்களை ஒளிப்படம் எடுத்து வருகிறேன். இதனை உடனுக்குடன் எனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறேன். பூச்சியி னங்களை படம் எடுப்பதில் பொறுமை, நிதானம் முக்கியம். பூச்சிக்கும் மொபைல் போன் கேமராவுக்கும் இடையில் 1 செ.மீ. இடைவெளி தான் இருக்கும். கை நடுக்கமின்றி தெளிவாக, துரிதமாக எடுப்பது கடினம். அதற்கு பொறுமை அவசியம்.

சூரிய ஒளியின் பின்னணியில் மரக் கிளையில் ஊர்ந்து சென்ற எறும்புகளை 2.30 மணிநேரம் காத்திருந்து படம் எடுத்தேன். நான் எடுத்த மொபைல் போன் கேமரா படங்களை சென்னையில் நடந்த போட்டோ கண்காட்சியில் திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட ஒளிப்பதிவாளர் 

பி.சி.சிறீராம் ஆகியோர் பாராட்டியது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது.

மேலும், ஒரு பெண்ணால்தான் இவ்வளவு பொறுமையாக எடுக்க முடியும் என பாராட்டியதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல், மதுரை மடீட்சியாவில் நடந்த கண்காட்சியில் எனது படங்களை பார்த்து சு.வெங்கடேசன் எம்.பி.யும் பாராட்டினார்.

பூச்சியியல் துறையினருக்கும், புத்தக வெளியீட் டாளர்களுக்கும் உதவும் வகையில் படங்கள் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. நான் எடுத்த புழு, பூச்சியினங்களின் படங்கள் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்களில் இடம் பெறும் வகையில் சிறந்த படங்களை மொபைல் போனில் எடுக்க வேண்டும் என்பதும் எனது இலக்கு. ஒரு நல்ல படம் கிடைப்பதற்கு சுமார் 100 படங்கள் வரை எடுப்பேன். சூழலைப் பொறுத்து உடனடியாகவும் அமைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment