ஹிந்து மதம் ஒழிந்தால் மட்டுமே சூத்திரப் பட்டம் ஒழியும் - தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 13, 2023

ஹிந்து மதம் ஒழிந்தால் மட்டுமே சூத்திரப் பட்டம் ஒழியும் - தந்தை பெரியார்

எல்லோரும் சமதர்மம், பொதுவுடைமை பேசி பாமர மக்களிடம் செல்வாக்குப் பெறுகிறார்களே என்று காந்தியாரும் சமரசம் பேசத் துணிந்து விட்டார். ஏனெனில் இந்தக் காலம் சமதர்மப் பேச்சுக்காலமாக இருந்துவருகிறது. இன்று கடவுள் முதல் எந்த மகான், அரசியல்வாதி, முதலாளி ஆகிய எவரும் சமதர்மப் பேச்சினாலேயே வாழ முடிகிறது. கடவுள் ஒரு  “சமதர்மக்” கொள்கையுடையது என்பதினால் தான் அது மதிக்கப்படுகிறது. அதனால்தான் அது சர்வவல்ல மையுடையது என்று சொல்லப்பட்டாலும் மக்கள் அதை மதிக்கிறார்கள். ஆனால் அந்த வார்த்தைக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக மக்களுக்குள் இருந்து வரும் துக்கம், வறுமை, பொய், பித்தலாட்டம், அயோக்கியத்தனம்  வஞ்சகம் முதலாகியவைகளைப் பற்றியும், நோய், கொலை, கொள்ளை முதலியவைகளைப்பற்றியும் சிந்தித்துப் பார்த்து  இதற்கு யார் பொறுப்பாளி! சர்வ வல்லமை உடைய கடவுள் இந்தக் காரியங்களுக்கு மாத்திரம் சக்தியற்றவராகவோ, பொறுப்பாளியல்லாதவராகவோ எப்படி இருக்கமுடியும்? கடவுள் என்பதே பொய்யோ, அல்லது அவர் சர்வ வல்லமை உடையவர் என்பது பொய்யோ, அல்லது நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ, அல்லது நமக்கேதான் புத்தி இல்லையோ என்று தமக்குள்ளாகவே கேள்வி கேட்டு எவரும் உண்மை அறிவதில்லை.

அதுபோல்தான் காந்தியாரும் செல்வாக்குள்ள சில வார்த்தைகளைச் சொல்லிவிடுவதால், அதாவது, சத்தியம், அஹிம்சை, நீதி, சமாதானம் என்ற வார்த்தைகளைச் சொல்வதன் மூலமும், அது கெட்டிக்காரத்தனமாய் விளம்பரம் செய்யப்படுவதன் மூலமும்; இந்திய அரசியலில் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டதால் அவர் நடத்தையின் பயனாய் நாட்டில் அரசியல்துறையில் ஏற்படும் பொய் பித்தலாட்டம் நாணயக் குறைவான காரியங்களுக்கும் ஏமாற்று வஞ்சகங்களுக்கும், அடிதடி, கொலை கொள்ளை, நாசவேலைகளுக்கும் மற்றும்  அட்டூழியங்களுக்கும் சமா தானக் கேடான குழப்பங்களுக்கும் அவர் சிறிதும் சம்பந்தப் படாதவராய் பொறுப்பு ஏற்கப்பட வேண்டாதவராய்த் தப்பித்துக்கொள்கிறார்.

இதுபோலவே சில செல்வாக்குள்ள வேஷம் பதவி ஆகியவைகளாலும் தாங்கள் எவ்வளவு அயோக்கியத்தனம் அட்டூழியம் செய்தாலும் பல சாமியார்களும், குருமார்களும், பண்டாரசன்னதிகளும், மடாதிபதிகளும், ஆச்சாரியார் களும், மதிக்கப்படத்தக்கவர்களாகவும் பூசிக்கப்படத் தக்கவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.

அதுபோலவே அரசியலிலும் சில செல்வாக்குப் பெற்ற சொற்களை அதாவது சுதந்திரம், சுயராஜ்யம், சுயேச்சை, முதலாளி கொள்ளை, ஏகாதிபத்திய எதேச்சாதிகாரம், பாரதமாதா என்பன போன்ற வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் எப்படிப்பட்ட அயோக்கியனும் பாடுபடாமல் வாழத்தக்கவனாக ஆகிவிடுகிறான். திருநீறு, நாமம், காவி, ருத்திராட்சம் முதலியன அணிவதினாலும் மகாமகா அயோக்கியர்களும் மதிக்கத்தக்கவர்களாக ஆகிவிடு கிறார்கள்.

எனவே பித்தலாட்டத்திற்கும் நாணயக் குறைவிற்கும் ஒழுக்கக் கேட்டிற்கும், வஞ்சக வாழ்விற்கும் செல்வாக்குப் பெற்ற சொற்கள் இடமளித்துப் பாதுகாப்பளிக்கின்றன.

இதன் தன்மையையும் பயனையும் நன்றாய் அறிந்து அனுபவித்துவரும் காந்தியார் இப்போது ஜாதிகள் ஒழிய வேண்டுமென்றும், ஏழையும் பணக்காரனும் ஒழிய வேண்டும் என்றும் சொல்லி அந்தச் செல்வாக்கு வார்த்தைகளால் ஏற்படக் கூடிய பயனும் அடைய வேண்டுமென்று ஆசைப் பட்டுத் துணிந்து அந்தச் சொற்களைச் சொல்லி விட்டார்.

அதாவது காந்தியார் தன்னைக் காணவந்த ஒரு தாழ்ந்த ஜாதியார் கூட்டத்தாரிடம் பேசுகையில்,

“இந்துமதம் சாகாமல் இருக்கவேண்டுமானால் ஜாதிகளை எல்லாம் ஒழித்துவிடவேண்டும்”

- என்று பேசியிருப்பதாக அரிஜன் என்கின்ற பத்திரிகையில் காணப்படுகிறது. இதைப் பத்திரி கைகள் எல்லாம் விளம்பரப்படுத்திக் காந்தியார் சமுதாயத்தில் சமதர்மம் பேசிவிட்டார் என்று மக்கள் கருதும்படிச் செய்கின்றன.

காந்தியார் ஜாதிகள் ஒழிய வேண்டுமென்று சொன்னது எதற்காக என்பதைக் காட்ட அந்த வாக்கியத்திலேயே தெளிவுபடுத்தி இருக்கிறார். அதாவது இந்துமதம் உயிர்வாழவேண்டுமானால் ஜாதிகள் ஒழியவேண்டும் என்று அவர் சொல்லி இருப்பதால் இந்துமதத்தைக் காப்பாற்றுவதற்காகவே அவர் அப்படிச் சொன்னார் என்பது விளங்கும்.

முதலாவதாக இந்துமதம் என்றால் என்ன என்பதை நிர்ணயிக்கக் காந்தியார் அதிகாரியா? தகுதியானவரா? அல்லது இந்துமத சாஸ்திரங்கள், இந்துமத தர்மங்கள், 

இந்து மதக் கடவுள்கள், அவற்றின் வாக்கு, செய்கை, ரிஷிகள் கருத்து, மனுக்களின் சட்டம் ஆகியவை அதிகாரிகளா? தகுதியானவர்களா? என்பதை அறிவுள்ள மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அடுத்தாற்போல் காந்தியார் இந்த விஷயத்தில் தந்திர மில்லாமல், முரண்இல்லாமல் தெளிவான வழியில் நேராய் நடந்துகொள்ளுகிறாரா? என்பதையும் அறிவாளிகள் சிந்திக்கவேண்டும்.

முதலாவது இந்து மதத்திற்கு ஆதரவு மனுதர்ம சாஸ்திரமும், வேதத்தை அடிப்படையாய்க் கொண்ட புராண இதிகாசங்களும், கடவுள் ரிஷிகள் வாக்குகள் முதலியவைகளுமேயாகும் என்பதை எந்த இந்துவும் மறுக்கமாட்டார். இப்படி இருக்க இவைகளை மாற்றக் காந்தியாருக்கு என்ன அதிகாரம்? காந்தியார் இந்து மதத்தின்படி சூத்திரரேயாவார். சூத்திரருக்கு இந்தப் பேச்சுக்கள் பேச உரிமை உண்டா? ஏதோ பார்ப்பனர் ஆதிக்கக் காலநிலை சுயமரியாதைக்காரர்களால் சிறிது கெட்டுவிட்டதால் பார்ப்பனர்கள் தற்கால சாந்தியாகக் காந்தியாரை விபீஷணராகக் கையாளுகிறார்கள் என்பதல் லாமல் அவர் இதெல்லாம் பேச எப்படி அதிகாரியாவார்? இவர் சொல்லுவதைச் சங்கராச்சாரிகள், சாஸ்திரிகள், வைணவ மடாதிபதிகள் ஸ்மார்த்த, மாத்துவ, முதலிய அதிகாரம்பெற்ற மத மடாதிபதிகள் எப்படி ஒப்புக்கொள்ளு வார்கள்? மக்கள் மத விஷயத்தில் அபிப்பிராயம் சொல்ல இவர்களைத்தான் மரியாதை செய்வார்களா அன்றிக் காந்தியாரை மரியாதை செய்வார்களா?

இந்து மதத்தின் ஒரு சிறுவேர்க்கொடி மீதி இருந்தாலும் நாளைக்கு இந்துமத மக்கள் மீது சாஸ்திரங்களும், சாஸ்திரிகளும்தான் ஆட்சி, ஆதிக்கம் செலுத்துவதேயன்றி காந்தியார் சொல்லுக்கு என்ன மரியாதை, மதிப்பு, விலை இருக்கமுடியும்? இதைக் காந்தியார் தெரியாதவர் என்று யாரும் சொல்லிவிடமுடியாது. ஆதலால் காந்தியார் சொல்லுவதில் தந்திரமும் முரணும் இல்லாத நாணயம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அதுசெல்லுபடி அற்றது என்றே சொல்லுவோம். 

இந்தச் செல்லுபடி அற்ற தன்மையிலாவது காந்தியார் தந்திரமில்லாமல் பேசி இருக்கிறாரா என்பதைக் கவனிப் போம். என்னவென்றால் காந்தியார் சொல்லும் ஜாதி ஒழிப்பு என்பது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவையான ஜாதிகளை அல்ல என்றும் உயர்வுதாழ்வு பாராட்டும் உன் ஜாதிகளைப் பற்றித்தான் சொல்லுகிறார் என்பதையும் வாசகர்கள் உணரவேண்டும்.

அவர் சென்றவாரம் ஜாதி ஒழிப்பு பற்றிக் கபிலதலி என்ற இடத்தில் பேசி இருக்கிறதாகப் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. 

அதாவது, “ஜாதி இந்துக்கள் மணிபுரி (ஜாதியார் என்னும் தாழ்ந்த) ஜாதியாரைத் தங்கள் ஓட்டு பலத்திற்காகத் தங்களில் ஒரு பகுதியார் என்று எண்ணினாலும் அவர்களது நலனை ஜாதி இந்துக்கள் கவனிக்கவில்லை” என்று சொல்லிவிட்டு, “இந்துமதம் சாகாமல் இருக்கவேண்டுமானால் ஜாதிகளை எல்லாம் ஒழித்துவிடவேண்டும்” என்கிறார்.

மற்றும் தம்மைப் பற்றி “நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்பதை மறந்தே

விட்டேன்” என்கிறார்.

அதற்கும்கீழ் “இயற்கைக்கு விரோதமான பிரிவுகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது” என்கிறார்.

அதற்கும்கீழ் “ஜாதி இந்துக்கள் என்பதற்குப் பிராமணன், சத்திரியன். வைசியன் என்று பொருள் கூறப்படுமானால் இந்த மூன்று ஜாதியாரும் பிரிட்டிஷார் வெளியேறிச் சுதந்திரம் ஏற்பட்ட காலத்தில் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளமுடியாதபடி ஒழிந்து போவார்கள். ஜாதி வித்தியாசங்கள் எல்லாம்  காணப்படமாட்டா, ஒழிக்கப்பட்ட ஜாதியார் தங்கள் உரிமையைப் பெற்றுவிடுவார்கள்” என்று பேசி இருக்கிறார். (இது 16.02.1947  அரிஜன் பத்திரிகையில் இருக்கிறது.) 

எனவே இந்த வாக்கியங்களின்படி ஜாதி வித்தியாசங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்பதும், ஜாதி என்பதும், உள்  ஜாதிகளே தவிர வர்ணங்கள், வருண முறைகள் அல்ல என்பதும் நன்றாய் விளங்குகின்றனவா இல்லையா என்று கேட்கிறோம். ஜாதிகளில் நம்பிக்கை இல்லை என்பதில் இயற்கை அல்லாத அதாவது செயற்கை ஜாதிப் பிரிவுகளில் நம்பிக்கை இல்லை என்றால் காந்தியாரைப் பொறுத்தவரை இயற்கைக்கு விரோதம் அதாவது செயற்கை ஜாதி என்பது வருண முறை அல்லாத உள் ஜாதிகளைத்தான் குறிப்பிடுகிறார். ஏனெனில் வருணமுறை இயற்கையாய் ஏற்பட்டது என்பதை அவர் பல சமயம் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதை எப்பாடுபட்டாவது காப்பாற்றவேண்டும் என்றும் பிராமணன் முதலிய வருணம் பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் பல தடவை குறிப்பிட்டு இருக்கிறார்.

அன்றியும் ஜாதி இந்துக்கள் என்பதில் சூத்திரர்கள் என்பவர்களும் பெரும்பாலோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அன்றியும் ஜாதி இந்துக்கள் என்பது பிராமணன், சத்திரியன், வைசியன் என்ற கருத்திலேயே அப்படிக்  கூறப்படுமானால் மனித சமுதாயத்தில் இவர்கள் மிகச் சிறுபான்மையாராவார்கள். ஆதலால் சுதந்திர இந்தியாவில் இவர்கள் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளத் தகுதி அற்றவர்களாகப் போய்விடுவார்கள். அப்போது இந்த ஜாதிவித்தியாசம் காணப்படமாட்டா என்றும் அந்தக் காணப்படாதத்தன்மை எப்படி  இருக்கும் என்றால் “ஒடுக்கப்பட்ட ஜாதியார் தங்கள் உரிமைகளைப் பெற்று விடுவார்கள்” என்றும் சொல்லி முடிக்கிறார்.

ஆதலால் காந்தியார் கூறும் ஜாதி என்பது உள்ஜாதி தானே ஒழிய வருணமுறை ஜாதி அல்ல என்றே சொல்லுவோம்.

எதுபோல் என்றால் கோவிலுக்குள் ஆதிதிராவிடர்கள் செல்லுவதால் உள் ஜாதிகள் ஒன்றாகக் கருதப்படுகிறது என்பதல்லாமல் அங்கு வருணமுறை, அதாவது பிராமணத் தன்மை சிறிதும் எப்படி மாற்ற மடையவில்லையோ அதுபோல் வருணப்பிரிவு சிறிதும் அழிக்கப்படவே இல்லை என்போம்.

தவிரவும் காந்தியார் நவகாளியில் 12.02.1947இல் தனது பிரார்த்தனையின்போது என்ன சொல்லுகிறார் என்றால்,

 “தீண்டாமை என்பது உண்மையாக ஒழிந்துவிடுமானால் ஜாதி என்பதே இருக்காது” ஜாதிமுறை ஓர் உயர்ந்த அந்தஸ்தான - பழக்கவழக்கமாக இருக்குமானால் தீண்டப் படாத (கீழ் ஜாதி) மக்கள் தாங்களும் அந்தஸ்து வேண்டு மென்று இயற்கையாக விரும்புவார்கள். ஆனால் அது முடியாததாக இருக்கும். ஆதலால் அந்தப் போராட்டம் இல்லாமல் இருக்கவேண்டும். அது உள்ள வரையில் தீண்டப்படாதமக்கள் வேறாகத்தானி ருப்பார்கள். ஆதலால் (அந்த மாதிரி) ஜாதிகள் ஒழிந்துவிட்டால் எல்லோரும் இந்துக்களாக இருப்பார்கள். ஆதலால் தீண்டப்படாத மக்கள் தங்களுக்குள் இருக் கும் உள்ஜாதிகளை ஒழித்துக் கொண்டு சுத்தமாக இருப்பதன் மூலம் ஜாதி இந்துக்களுக்குள் கலந்துவிட வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார் (இது 15.02.1947 ‘இந்தியன் எக்ஸ்பிரசில்’ காணப்படுவ தாகும்) இதிலும் காந்தியார் ஜாதி என்பதை வருணம் என்பதாகக் கருதவில்லை என்பதோடு சூத்திரர்கள் என்பவர்கள் தங்களுக்குள் ஒரு ஜாதி ஆகவேண்டும் என்றும், உள் பிரிவுகள் ஒழிய வேண்டும் என்றும் வருண முறையிலும் தீண்டாமை இருக்கக்கூடாது எனவும்தான் கருத்துக்கொண்டு பேசியிருக்கிறாரே ஒழிய வருணம் ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை.

ஆதலால் காந்தியார் சொல்லும் செயற்கை ஜாதி பேதங்கள் இப்போது தாமாகவே அல்லது சுயமரியாதைக் காரர்கள் தொண்டால் ஒழிந்துகொண்டுதான் வருகின்றன. இதற்குக் காந்தியார் முயற்சி சிறிதும் தேவை இல்லை என்போம்.

அன்றியும் காந்தியாரும்கூட வேறு யாராவது ஏதாவது சமுதாயத்தில் மாற்றம் செய்து வைத்திருந்தால் பிறகு அதில் தான் வந்து புகுந்து பெருமை சம்பாதித்துக்கொள்வதைத் தவிர அவராகச் செய்ததாக இதுவரை சமுதாயத் துறையில் ஒன்றுகூடக் காணமுடியாது என்று ஆதாரத்தோடு சொல்லுவோம்.

எடுத்துக்காட்டாக,

1. தீண்டப்படாத மக்களுக்குக் குடிதண்ணீர் வசதிக்கு 1922இல் காந்தியார் தனிக் கிணறு வெட்டிக்கொடுக்கக் காங்கிரஸ் கமிட்டியின் மூலம் பணம் உதவி செய்து கிணறு வெட்டச் சொன்னார்.

ஜஸ்டிஸ் கட்சியார் பொதுக்கிணற்றில் யாவரும் (ஆதி திராவிடர் உட்பட) தண்ணீர் எடுத்துக்கொள்ள உரிமை உண்டு, தடுத்தால் அபராதம் என்று சட்டம் செய்தார்கள். அதனால்தான் அந்த உரிமை ஏற்பட்டது.

2. தீண்டப்படாத மக்களுக்குத் தனிக் கோவில் கட்டிக் கொடுக்க காந்தியார் திட்டம் போட்டார்.

சுயமரியாதைக்காரர்கள் அதை எதிர்த்து இப்போது உள்ள கோவிலுக்குள்ளேயே அவர்கள் போகவேண்டுமே ஒழிய தனிக்கோவில் கட்டக் கூடாதென்றார்கள். அதனால் தான் இதே கோவிலுக்குள் புக முடிந்தது. 

அதற்கப்புறம்,

3. காந்தியார் தீண்டப்படாத மக்கள் வேண்டுமானால் சூத்திரர்கள் செல்லுமிடம் வரையில் கோவிலுக்குள் போகலாம் என்றார். 

சுயமரியாதைக்காரர்கள் அதுகூடாது, கோவிலுக்குள் பார்ப்பனர் உள்பட எல்லோருக்கும் ஒரே இடம் இருக்க வேண்டும் என்றார்கள்.

4. பிறகு காந்தியார் அதை ஒப்புக்கொண்டு கோவி லுக்குள் தடை கட்டும் தந்திரம் செய்தார். 

அதைச் சுயமரியதைக்காரர்கள் எதிர்த்தவுடன்  கர்ப்பக் கிரகத்தை பிராமணருக்கு மாத்திரம் உரிமை என்று வைத்து விட்டால் போதும், ஜாதி உயர்வுக்கு ஒரு அடையாளமாகி விடும் என்ற அளவுக்கு வந்தார்.

5. இப்போது அதையும் சுயமரியாதைக்காரர்கள் எதிர்க்கிறார்கள்.

இதற்குக் காந்தியார் என்ன சொல்லுவாரோ தெரிய வில்லை.

6. சமபந்தி சாப்பாடு, கலப்பு மணம் விஷயமாகக் காந்தியார் சுமார் 1927, 28ஆம் ஆண்டுகளில் இங்கு வந்திருந்தபோதும், வங்காளத்தில்  ஒரு கூட்டத்தில் பேசும்போதும் மாறுபாடாகவும் எதிர்ப்பாகவும் பேசியவர். எங்கும் தாராளமாய் அவை அமலுக்கு வந்தபிறகு இப்போது மறுத்துப்பேசாமல் அனுமதிக்கிற அளவுக்கு இசைவு காட்டுவதாக இருந்து வருகிறார். இப்படியாக அநேக மாறுதல்களை எதிர்த்துத் தோல்வி அடைந்த பிறகே சம்மதிக்கிறவராகவும் ஆதரிக்கிறதாகவும் காட்டிக்கொண்டு வருகிறார்.

இவ்வளவுதூரம் காந்தியார் சமுதாயத் துறையில் இறங்கி வந்ததற்குக் காரணம் சுயமரியாதைக்காரர்கள்  இந்து மதம் என்பது பித்தலாட்டம்  என்றும், மக்கள் பிறவி இழிவு என்பவை நீங்க வேண்டுமானால் வருணாசிரமம் ஒழிய வேண்டும் அல்லது மக்கள் இஸ்லாமாக மாறி ஆகவேண்டும் என்றும் பெரிய போடு போட்டு அநேக எதிர்ப்புகளைச் சமாளித்துத் தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வரை இந்த 10 வருடத்தில் இஸ்லாமாக மதம் மாறியதேயாகும். இப்போதும் காந்தியாருக்கு இந்த அளவுக்காவது திடீரென்று ஞானம் பிறந்ததற்குக் காரணம் பாகிஸ்தான் கிளர்ச்சியில் முஸ்லிம்களை எதிர்க்கப் படை சேர்க்க வேண்டும் என்கின்ற உள் எண்ணமில்லாமல் வேறு காரணம் ஒன்றும் இல்லை என்று உறுதியாகச் சொல்லுவோம். இவரது வார்தா திட்டக் கல்வி என்பதே வருணாசிரமமும் உள் ஜாதிப் பிரிவும் காப்பாற்றப்படுவது என்பதை எந்த அறிவாளியும் மறுக்க முடியாது.

ஆகவே இந்த விஷயத்தில் ஏதாவது சிறு சந்தேகம் இருப்பவர்களும் நாம் சொல்லுவதை சரியா? தப்பா? என்று உணரவேண்டுமானால் இப்போதே காந்தியாருக்குத் தந்தி அடித்து அதாவது,

தாங்கள் சமீபத்தில் சொன்ன ஜாதி ஒழிப்பு என்பது வருணமுறையாகிய பிராமணன் முதலிய 4 ஜாதியும் ஒழிந்து ஒன்றாவதா? அல்லது அவை அப்படியே இருக்க உள் ஜாதிகள் (பிரிவுகள்) ஒழிவதா? என்று கேட்டால் அதன் வண்டவாளம் விளங்கிவிடும்.

ஆதலால், திராவிடக் காங்கிரஸ் இளைஞர்கள் காந்தியாரின் இந்தப் பழைய கருத்துக்களை புதுவார்த்தை களால் வெளியிடும் தந்திரத்தைக்கண்டு ஏமாந்து விடவேண்டாம் என்றும், இந்து மதம் ஒழிந்தாலொழிய அல்லது நாம் இந்து மதத்திலிருந்து வெளிப்பட்டால் ஒழிய சூத்திரப்பட்டம், திராவிடருக்கு ஒழியாது என்றும், முஸ்லிம்களுக்கு விரோதமாய் ஆரியர் சேர்க்கும் படை வலையில் விழுந்து விடக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 22.02.1947 


No comments:

Post a Comment