திராவிட மாண்புகளை மீட்டெடுத்து, நம்மை வாழ வைத்தவர் பெரியார்! நடுவீரப்பட்டு பயிற்சிப் பட்டறையில் சு.அறிவுக்கரசு உரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

திராவிட மாண்புகளை மீட்டெடுத்து, நம்மை வாழ வைத்தவர் பெரியார்! நடுவீரப்பட்டு பயிற்சிப் பட்டறையில் சு.அறிவுக்கரசு உரை!

"திராவிடர் மாண்புகளை மீட்டெடுத்து தமிழர்களை வாழ வைத்தவர் பெரியார்! பெரியார் கருத்துகளைப் பின் பற்றியவர்கள் யாரும் தாழ்ந்து போனதில்லை", எனச் செயல வைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசினார். "பார்ப்பனப் பண் பாட்டுப் படையெடுப்பு" எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:

ஆழமும்! அகலமும்!

அறிவு என்பது அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்த அனுமதி இல்லாமல் இருந்தது. அதைக் கூர்தீட்டும் வாய்ப்பும் நமக்கு மறுக்கப்பட்டது. பெரியார் குறைந்தளவே படித்தவர். எனினும் இயல்பாக அமைந்த தம் அறிவைப் பெருக்கிக் கொண்டார்! இளம் வயதிலேயே குறுக்குக் கேள்விகள் கேட்பதில் வல்லவராக இருந்தார். அதன் மூலமே தம் அறிவை அகலப்படுத்திக் கொண்டார்! பிறகு புத்தகங்களை வாசித்து அறிவை ஆழப்படுத்திக் கொண்டார்!

பெரியார் உருவாக்கிய சமத்துவம்!

தமிழர்கள் தம் நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நான்கு வகையாக வகுத்தனர். முல்லையும், குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, பாலை என்பதோர் படிமம் கொள்வதை உணர்ந்து பாலை என்னும் நிலத்தையும் சேர்த்துக் கொண்டனர்.‌ காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, உப்பங்கழியும், கடற்பிரதேசமும் நெய்தல்,

கல் மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, நாடும் அதைச் சுற்றிய நெல் வயலும் மருதம் எனக் கொண்டனர்.

இந்த ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு பண்பாடு இருந்தது. இதைத் திணைப் பண்பாடு என்றார்கள். இதையே பார்ப் பனர்கள் வர்ணப் பண்பாடாக மாற்றி, காலப்போக்கில் நான்கு வர்ணங்களாக மாற்றிவிட்டார்கள்!

இந்த நான்கு வர்ணங்களில் உயர்ந்த இடத்தில் இருப்ப வர்கள் பூணூல் அணிந்தவர்கள். மற்ற மூவரும் அவர்க ளுக்குச் சேவகம் செய்பவர்கள். பார்ப்பன இனத்தில் கூட ஆண்கள் மட்டும் தான் உயர்ந்தவர்கள். பெண்கள் தாழ்ந்த வர்களே! அவர்களுக்குப் பூணூல் கிடையாது. இன்றைக்கும் பூணூல் அணிந்தவர்களுக்கு ஒரு சட்டம்; அல்லாதவர் களுக்கு ஒரு சட்டம் என்று இருக்கிறது. அதை உடைத்து அனைவரும் சமம் என உருவாக்கியவர் தந்தை பெரியார்!

கல்விக் கண்ணை மூடியவர்கள் பார்ப்பனர்கள்!

பெரியாரால் நாங்கள் எல்லோரும் படித்தோம். நீங்களும் இப்போது படிக்கிறீர்கள். இந்து மதம் இந்துக்களுக்குக் கல்வியை மறுத்தது. அதேநேரம் வெள்ளைக்காரர்கள், கிறிஸ்தவ மிஷினரி மூலம் அந்த வாய்ப்பை வழங்கினார்கள். நானும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் கிறிஸ்தவப் பள்ளியில் தான் படித்தோம். இன் றைக்கும் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். ஆக கல்விக் கண் திறந்தவர்கள் கிறிஸ்தவர்கள். கல்விக் கண்ணை மூடியவர்கள் பார்ப் பனர்கள். அதற்காகக் கிறிஸ்தவ மதத்தை நாம் ஏற்பதில்லை.

பார்ப்பனர்கள் திணித்த சடங்கு முறைகள்!

நம் பண்பாடு அனைத்தையும் கெடுத்துவிட்டார்கள்! பண்பாடு என்பது பழக்க வழக்கம்! நம் பழக்கங்களைப் பாழ்படுத்தியதே பார்ப்பனீயம் தான். தமிழர் முறைப்படி, தமிழ் மொழியில் நடைபெற்ற நமது வீட்டுத் திருமணங்களில் சமஸ்கிருதத்தை அத்துமீறி நுழைத்தார்கள். வேத முறைப்படி செய்யாவிட்டால் அத்திருமணம் செல்லாது எனக் கூறினர். ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாமனார், மாமியார் 1934 ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட வர்கள். நெருப்பில் 7 முறை சுற்றிவர வேண்டும். அப்படி செய்யாததால், இந்தத் திருமணம் செல்லாது என நீதிமன்றம் கூறியது. பிறகு 1953 இல் தான் சுயமரியாதைத் திருமணத்தை நீதிமன்றம் ஏற்றது. 

பார்ப்பனர்கள் திருமணம் செய்யும் முறையே வித்தியாச மாக இருக்கும். தந்தை தமது மகளை மடியில் வைத்து, தாரை வார்த்துக் கொடுப்பார். ஒரு காலத்தில் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வார்கள். அப்போது குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொடுப்பார்கள். அதே பழக்கத்தில் இப்போது மடியில் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். பார்ப்பனர்களின் ஒவ்வொரு சடங்கும் அவர்களின் முந்தைய பழக்க வழக்கத்தை நினைவு செய்யும்!

நாடற்ற, மொழியற்ற கூட்டம்!

பார்ப்பனர்களை "அலைகுடி" என்பார்கள். தம் குடியை ஓரிடத்தில் அமைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் அலைந்து கொண்டிருப்பார்கள். வீடு கட்டி வாழத் தெரியாது. "டெண்ட்" என்று சொல்லக்கூடிய தற்காலிகக் கூரை ஒன்றை அமைத்துத் தங்குவார்கள். அந்தப் பகுதியிலேயே தற்காலிக மாக  பெண்களுடன் வாழ்வார்கள். குழந்தையும் பெற்றுக் கொள்வார்கள். குடும்பத்தில் யாராவது இறந்தால் அப்படியே போட்டுவிட்டு போய்விடுவார்கள். இன்றைக்கும் பார்ப்பனர் கள் வீட்டில் யாராவது இறந்தால், உடனடியாக சடலத்தை வெளியே வைத்துவிடுவார்கள். சில மணி நேரங்களில் எரித்துவிடுவார்கள்.

திராவிட மொழிக் குடும்பம்!

உலகில் 10 மொழிக் குடும்பங்கள் இருக்கின்றன. மனிதர்களில் 7 வகை இனங்கள் உள்ளன. திராவிட மொழிக் குடும்பத்தில் மட்டும் 40 மொழிகள் உள்ளன. ஒயிட் எல்லீஸ், கார்டுவெல் இருவரும் இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார்கள். அதனால் தான் தமிழர்களாகிய திராவிடர்கள் குறித்துப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், "நான்தான் திராவிடன் என்று நவில்கையில், தேன்தான் நாவெல்லாம் வான்தான் என்புகழ்", என்று பாடினார்.

புகழ் பெற்ற திராவிடக் குடும்பத்தின் மாண்புகளை மீட்டெடுத்து, நம்மை வாழ வைத்தவர் பெரியார்! மிகச் சிறப்பாகத் திராவிடர்களாகிய நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்", என சு.அறிவுக்கரசு உரையாற்றினார்.

எங்களுக்குத் தனிப்பட்ட  இலாபம் கிடையாது!

2023 மே மாதம் 27 ஆம் தேதி பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமிழ்நாட்டில் தொடங்கியது. 17 ஆவது மாவட்ட மாக கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் நடை பெற்றது! 

மாதம் 8 பயிற்சிப் பட்டறைகள் வீதம், இந்த இரண்டு மாதத்தில் தொடர்ந்து ஏற்பாடு செய்து வரும் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளரும், பெரியாரியல் பயிற்சிப் பட்டறைப் பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் நிறைவு விழாவில் பேசும்போது, தமிழ்நாடு முழுக்க மாணவர்களை ஏன் சந்திக்கிறோம், இதனால் உங்களுக்கு என்ன பயன், பெரியாரின் கருத்துகள் எப்படி வாழ்க்கைக்குப் பயன்படும் என விளக்கிப் பேசினார்.

இங்கே பயிற்சி வகுப்பு எடுக்க வரும் ஒவ்வொருவரும் நிறைய படித்தவர்கள். நல்ல வேலை மற்றும் சிறப்பான தொழில் செய்பவர்கள்.‌ பல நூறு கிலோ மீட்டர் கடந்து இங்கே வந்து செல்கிறார்கள். ஒருநாளில் ஒரு மணி நேரம் வகுப்பெடுக்க இவ்வளவு உழைப்பைத் தருகிறார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்கிற பயன் என்ன? அதே போல இந்த மாவட்டத்தில் இருக்கிற ஒவ்வொரு தனிப்பட்ட கருஞ்சட்டைத் தோழர்களும் பணியில் இருப்பவர்கள். இந்த ஒருநாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய, குறைந்தது 15 நாட்கள் அவர்கள் உழைக்க வேண்டும். 

இவற்றை எல்லாம் ஏன் செய்கிறார்கள்? மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.‌ இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்குத் தனிப்பட்ட இலாபம் கிடையாது. ஆனால் பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டதால், அவரின் அறிவைப் பெற்றுக் கொண்டதால் வாழ்வில் சுயமரியாதை யுடன், பகுத்தறிவு வாழ்க்கை வாழ்கிறார்கள்! கடவுள், மதம், ஜாதி, சடங்குகள், விழாக்கள் என எந்த ஒன்றிற்கும் ஒரு ரூபாய் கூட அவர்கள் செலவழிப்பதில்லை. அப்படி சேர்த்த பணத்தை இதுபோன்ற பயிற்சிப் பட்டறைகள் மூலம் உங்களுக்குச் செலவு செய்கிறார்கள். பெரியாரால் தாங்கள் அடைந்த பயனை மாணவர்களும், இளைஞர்களும் பெற வேண்டும் என வேலை செய்கிறார்கள். எனவே நல்ல முறையில் சிந்தித்து, கல்வி கற்று, ஒவ்வொருவரும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும்", என இரா.ஜெயக்குமார் பேசினார். 

தலைப்பும்! வகுப்பும்!

பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தந்தை பெரியார் ஓர் அறிமுகம் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பார்ப்பனப் பண்பாட்டு படை யெடுப்பு, வழக்குரைஞர் சு.குமாரதேவன் புராண இதிகாசப் புரட்டுகள், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்த னைகள், மாநிலத் தகவல் தொழில் நுட்பக்குழு ஒருங்கிணைப் பாளர் வி.சி.வில்வம் ஊடகத்துறையில் தடம் பதித்த திரா விடர் இயக்கம் ஆகிய தலைப்புகளில் வகுப்பெடுத்தனர்!

வகுப்பில் சிறப்பாகக் குறிப்பெடுத்த புலியூர் விஜய வளவன், கன்னி தமிழ்நாடு ச.சந்தோஷ், நடுவீரப்பட்டு சு.ஓவியா ஆகியோர் பரிசுகள் பெற்றனர். இந்நிகழ்வில் 72 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பெண்கள் 14, ஆண்கள் 54. இறுதியில் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. மாணவர்கள், பயிற்சியாளர்கள் இணைந்து குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.

தொடக்க நிகழ்வுகள்!

முன்னதாக நடைபெற்ற தொடக்க நிகழ்விற்குக் கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர் வரவேற் புரை ஆற்றினார். நடுவீரப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள தமது சொந்த இடமான வள்ளலார் ஞானாலயம் வளாகத்தை இலவசமாக வழங்கி, மாணவர்களுக்குத் தேநீர், நொறுக்குத் தீனிகள், உணவு உட்பட அனைத்தையும் தம் பொறுப்பில் வழங்கிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் என்.இராமலிங்கம் தொடக்கவுரை ஆற்றினார்.

மாவட்ட இணைச் செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, மாவட்ட மகளிரணி தோழர் முனியம்மாள், மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்‌ இரா.பெரியார்செல்வன், ஏ.லோகநாதன், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாவட்டப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.தர்மலிங் கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் இராம நாதன், பண்ருட்டி ஒன்றியப் பொறுப்பாளர் இரா.கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பங்கேற்பும்! பங்களிப்பும்!

நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நெல்லுப்பட்டு இராஜவேல், மாவட்டச் செயலாளர் 

வி.அருணாசலம், கடலூர் நகரச் செயலாளர் இரா.குணசேகரன், நெய்வேலி இரத்தினசபாபதி, வடலூர் குணசேகரன், அன்பு திராவிடன், ஒன்றியத் தலைவர் இரு.இராஜேந்திரன், வடக்குத்து கிளைச் செயலாளர் நூலகர் கண்ணன், மாவட்ட வீர விளையாட்டுக் கழகத் தலைவர் இரா.மாணிக்கவேல், இராஜேந்திரன், பா.செந்தில்வேல், க.சேகர், சத்யா, மலர், மாதவன், தங்க.பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ.வேலு நன்றி கூறினார்.

தொகுப்பு: வி.சி.வில்வம்


No comments:

Post a Comment