தமிழர் தலைவரின் உலக வரலாற்றுச் சாதனை!! - பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உலக அமைப்பாளர் பன்னாட்டு தமிழுறவு மன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

தமிழர் தலைவரின் உலக வரலாற்றுச் சாதனை!! - பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உலக அமைப்பாளர் பன்னாட்டு தமிழுறவு மன்றம்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியார்க்கு

தமிழ்நாட்டு அரசின் சார்பாக  முதன்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தகைமைசால் தமிழர் விருது”வழங்கிச் சிறப்பிக்கிறார்

90-அகவையில் 80 ஆண்டுகள் பொதுத் தொண்டறம்

தந்தை பெரியார் தகுதித் தலைவர்க்கே

முந்தும் சமநீதி முன்னேற்றம் - விந்தை 

தகைசால் தமிழர் தகுவிருது தந்த

மிகைசால் முதல்வர் வணங்கு!

தொண்ணூற் றகவையுள்! எண்பதாண்டுத் தொண்டறம்!!

கண்டதமி ழர்தலைவ கண்மணியே! -தண்டமிழ்போல் 

என்றென்றும் வெல்இளமை ஏற்றேதான் ஆயுளோங்கி

இன்னும்நூ றாண்டே இரும்

வாழ்நாளெல்லாம் ஓய்வில்லாமல், தந்தை பெரியாரின் தடம் பற்றியே வாழ்ந்து - தமிழ்ச் சமுதாயத்தில் ஜாதி, மதம் ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து பகுத்தறிவுக் கொள்கைச் சமநீதிக்கு உச்சவெற்றிகண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிஅவர்களுக்கு “தகைசால் தமிழர் விருது”சுதந்திர தினவிழாவில் தமிழ்நாடு அரசின் சார்பாக நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்குகிறார் என்ற செய்தி அறிந்து உலகளாவிய தமிழர்கள் மட்டற்ற மகிழ்வடைந்துள்ளனர்.  

இந்தியாவின் மாநிலங்களிலெல்லாம் இன்றும் உள்ள தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து மாறித் தமிழ்நாடு சமத்துவம் அடைந்துள்ளதென்றால் அதற்கு முக்கிய கரணியம் பெரியாரின் திராவிடர் கழகமே!  பெரியார் போன்று ஒரு தலைவர் நமக்குக் கிடைக்கவில்லையே எனப் பல மாநிலத் தலைவர்கள் வருந்துமளவுக்கு, தமிழ்நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.  

தந்தை பெரியாருக்குப்பின்  திராவிடர் கழகத்தைத் தாங்கிப் பிடித்து மூச்சும், பேச்சும் கழகமே கழகக் கொள்கைக் குறிக்கோள்களே எனப் பாடுபட்டு அனைத்துத் துறையிலும் நிறைவைக் கண்டுள்ளார் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள், அச்சம் என்பதே கிஞ்சிற்றும் இன்றிப் பகைமைகளை நேருக்குநேர் சந்தித்து விளக்கம் தந்து வெற்றி பெற்றவர் ஆசிரியர் பெருமகன்.  

சமூக நீதிக்காகவும் - மக்கள் சமத்துவத்துக்காகவும் - தமிழ் - தமிழர்கள் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டு 56 முறை சிறை சென்றவர்; ‘விடுதலை’ இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று 60 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து ஆசியராக உள்ளவர்; எல்லோர்க்கும் இனியவர்! எளிமையாக வாழ்பவராக உள்ளார்!  இல்லார் இருப்பவர் பார்க்காத உறவு காண்பவர். கிஞ்சிற்றும்  மாசில்லா மனம் படைத்த அனைத்தறனாகத் திகழ்பவர். இத்தகைய அருங்குணங்கள் பெற்ற  தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது மிக மிகப் பொருத்தமுடைத்தாகும். 

'விடுதலை' ஆசிரியருக்கு விடுதலை நாள் விழாவில் நம் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திருக்கரத்தால் தருவதால் தகைசால் தமிழர் விருதே பெருமை பெறுகிறது.  முத்தமிழறிஞர் கலைஞரின் மீது இணையற்ற உழுவலன்பு கொண்ட ஆசிரியர் அவர்களின் உயர்வோ தோண்டத் தோண்டச் சுரக்குந் தன்மைத்தாகும்.  

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உலகத் தலைவர்களின் வரிசையில் வைத்து  எண்ணக் கூடிய ஓர் ஒப்பற்ற தலைவர் என்பதை அவரது வாழ்வியல் குறிப்புகள் நிலை பெற வைக்கின்றன.

ஆசிரியர் அவர்கள் 10 அகவையில் அறிஞர் அண்ணாஅவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிப்  பாராட்டைப் பெற்றார்.

பத்தரை அகவையில் கடலூரில் நடந்த திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

11-ஆம் அகவையில் ஆசிரியர் திராவிட மணியின் ஊக்குவிப்பால் மேடைகளில் “கி.வீரமணி என்னும் இச்சிறுவன் நன்றாகப் பேசுகிறான்” என்று தோழர்கள் பெரியாரிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.  நாமக்கலில் தந்தை பெரியார் கூட்டத்தில் பத்து மணித்துளிகள் பேசினார்.  தந்தை பெரியாரின் உள்ளத்தில் தன் 12ஆம் அகவையிலேயே நல்ல இடம் பிடித்தார்.  அப்போதே திராவிடர் கழகத்தின் பொதுக்கூட்டங்களுக்குத் தலைமை வகித்தார்.  மாநாட்டுக் கொடியேற்றினார்.  பள்ளிப் படிப்பிலும் கவனம் செலுத்தி நன்கு பயின்றார்.  இவரின் திறமையைப் பார்த்து பார்ப்பன ஆசிரியர்களும் வியந்து பாராட்டினர். 

“விடுதலை” இதழுக்கு 60- ஆண்டுகளாக ஆசிரியராக உள்ளார்.உலகில் எவரும் ஒருநாளிதழில் அறுபது ஆண்டுகள் ஆசிரியராக இருந்ததில்லை.  படிக்கும் போதே ‘புதுமை’‘முழக்கம்’இரண்டு கையெழுத்து இதழ்கள் நடத்தினார். கல்வி அதிகாரி திருக்குறள் கேட்டபோது மடமடவென்று திருக்குறள்களைக் கூறினார்.  பள்ளி இறுதி வகுப்பு வரை தன் திறமைக்காகக் கல்வி உதவித் தொகை பெற்றார்.

உயர்கல்வித் தகுதியோடு கூடப்பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஒவ்வொரு அகவையிலும் மிளிர்ந்தது, ஒளிர்ந்தது.  கலைஞரிடம் அப்போதே அறிவார்ந்த கூட்டங்கள் பேசியதால் நட்பு மலர்ந்தது. 

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த போது முக்கிய தலைவர்களெல்லாம் அண்ணாவோடு சென்றார்கள். ஆனால் ஆசிரியர் கி. வீரமணிமட்டும் தந்தை பெரியாருடனே இருந்தார்.  தந்தை பெரியாரின் இழப்புக்குப் பின், வாழும் பெரியார். ஆகவே தன் செயலாற்றலை உச்சமாகப் பெருக்கினார்.  பட்டம் பதவிகளுக்கு ஆசைப்படாத வியப்புக்குரிய ஆளுமை நாயகராக வளர்ந்தார்.  அரிய முயற்சியாக தமிழர் காப்புத் தெய்வமாகத் திகழ்கிறார்.   

பொது வாழ்க்கையில் விருப்பு - வெறுப்பு, இன்பம் - துன்பங்களில் சமம் கண்டு தெளிந்து வாழ்பவர்களே திராவிடர் கழகத்தினர் என்பதை நிலை நாட்டினார். போற்றலும் - தூற்றலும், வருத்தமும் - மகிழ்ச்சியும் ஒன்றாகக் கருதும் மனப்பக்குவத்தில் வாழ்ந்து தொண்டர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். மூடப்பழக்க வழக்கங்களை, புராண, இதிகாசங்களில் வரும், இழிவான கட்டுக்கதைகளையெல்லாம் தொண்டர்கள் தொடர்ந்து கண்டித்து வரும் தேவையைக் கற்பித் தொழுக வைத்தார். ஜாதி வெறிகளைச் சாடிப்பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சமத்துவத்தை மலரச் செய்தார். ஜாதி மறுப்புத் திருமணங்களை உருவாக்கினார். ஜாதி -சமய - மத வேறுபாடற்ற சமநீதிச் சமுதாயத்தை உருவாக்கும் தந்தை பெரியாரின் கொள்கைகளை  இளந்தலை முறையினர்க்குக் கற்றுத் தந்துள்ளார்.  போர்க்குணமும், அஞ்சாமையும், கொண் டிலங்கும் ஆசிரியர் அவர்கள் மனஉறுதி - கொள்கை நம்பிக்கையை இளைஞர்களின் நெஞ்சத்தில் விதைத்து விளைவு கண்டார்!

“தொண்ணூறு அகவையிலும் மனத்துக்கண் மாசிலனாக”

வாழும் நம் ஆசிரியர் - மேடைகளில் விரைந்து ஓடி ஏறுகிறார்.  ஓட்டமும் நடையுமாக, வேகமாக மிடுக்காக நடப்பது. நம்மை மலைக்க வைக்கிறது. 30, 40 நாள்கள் தொடர்ந்து கொள்கைப் பயணங்கள், கூட்டங்கள், முழக்கங்கள். அகவை தொண்ணூறு என்றாலும் இளமைத் துடிப்போடு விரைந்து சுறுசுறுப்புக் காண்கிறார் 

எண்ணிய எண்ணம் வெற்றி, தலையான கொள்கைகள் 

தமிழர் தலைவரைச் தொண்டறச் செம்மலாக முழக்கம்

இன்னும் நூறாண்டு வாழ வைக்க வேண்டும்.  

“துறந்தார் பெருமை துணைக்கூறின் இறந்தாரை 

எண்ணிக் கொண்டற்று”

என்பார் திருவள்ளுவர். துறவுநெறிப் பெருமையைக் கூறும்போது இறந்தாரை எண்ணுவது போல் என்பார்.  திருவள்ளுவர் கூறும் உண்மைத் துறவுப் பெருமை அளவிட முடியாதது ஆகும்.  இத்தகைய பற்றற்ற துறவுப் பெருமைக்கு ஒருவரைக் கூற வேண்டுமானால், நம் தமிழர் தலைவரைத்தான் கூற வேண்டும்.  இத்தகைய பெருந்தகைமைக் குறிக்கோள் கொள்கைகளால் தந்தை பெரியார் படைக்க நினைத்த உலகத்தை நோக்கியே தன் தொண்ணூறு வயது வாழ்க்கைப் பயணத்தையும் கண்டு பொது வாழ்வுத் தொண்டறத்தின் சிகரத்தை தொட்டிருக்கிறார் எவரிடத்து எதையும் எதிர்பாராத ஏந்தல் ஆசிரியர். “இல்லதென் இல்லவன் மாண்பானால்”என்ற வள்ளுவரின் வாக்கும்படியான இணையரைப் பெற்றுள்ளமை ஆசிரியர் பெரும்பேறு ஆகும். 

பெரியார் மறைவிற்குப்பின் திராவிடர் கழகம் அவ்வளவு தான் என்று நினைத்தவர்கள் மூக்கில் விரலை வைக்கும், அளவுக்குக் கல்வித்துறையில் பல்கலைக்கழகம் - மருத்துவத்துறை உதவிகள், திராவிடர் கழக வளர்ச்சியின் உன்னதமான மறுமலர்ச்சிகள், துறைதோறும், துறைதோறும் புதிய வரலாற்றினைத் தந்துள்ளார்.  

தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுமையும் அமெரிக்கா போன்ற அயல்நாடுகளிலும் பகுத்தறிவுக் கொள்கை வேளாகப் பரவச் செய்து வருகிறார் தமிழர் தலைவர்!

தந்தை பெரியார் வகுத்துத் தந்த பாதைவழி திராவிடர் கழகம் இப்போது எழுச்சிப் புதுமறுமலர்ச்சி வரலாற்றைப்  பெற்று வருகிறது.  திராவிடர் கழகத்தில்  மாணவர் கழகம், இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர்ப்பாசறை, இலக்கிய அணி, முதியோர் அணி என்று ஒவ்வொரு அணியினரும், வருங்காலத் தலைமுறை, தலைமுறைகளாக வளர்ந்து, வளர்ந்து வரும் தமிழ்ச் சமுதாயத்தை அமைத்து வருகிறது.  ஜாதி, மத, கட்சிபேத மற்ற தமிழ் தமிழர் வாழ்வே, தமிழ்நாட்டின் வாழ்வே, திராவிடர் கழகம் என்ற உன்னத ஒழுகலாற்றை கட்டமைத்துள்ள தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் கனவை நனவாக மெய்ப்பித்துள்ளார். 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்ற பெருமைக்குரியவர் பெருமகன் வீரமணி அவர்களே.

‘கலைஞர்’ஆட்சிக்கும் கவசமாக இருந்தார்.  இன்றும் நம் மாண்புமிகு முதன்மை முதலமைச்சர் "திராவிட மாதிரி"  ஆட்சியின் பாதுகாவலாகத் தமிழர் தலைவர் பாடுபடுவது  போற்றத்தக்கதாகும்.  

முரண்பாடுகள் போக்குடையவர்களிடத்திலும், தனிப்பகைமை பாராட்டாமல் பகைவர்க்கும்  அருளும் நெஞ்சோடும், பொறுமையோடும் கொள்கை விளக்கம் தருகிறார்.  தனிமனித விறுப்பு, வெறுப்புக்களைக் கடந்தது திராவிடர் கழகம் என்பதை மெய்பித்து வருகிறார். 

பதவிக்காகச் செயல்படாது, தொண்டிற்காகச் செயல்படும். ஒரே இயக்கம் திராவிடர் கழகமே. அக்கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் தமிழர் ஒற்றுமை பற்றிக் கூறும் போது, ஒரு மனிதனின் இயல்பினை பத்தாகப் பிரித்து அதில் ஒரு பகுதி நன்றாக இருந்தால் கூட, அந்த அளவிற்கேனும் தமிழர் ஒற்றுமை காண வேண்டும் என்பார்.  இன்று ஒன்றிய அரசு, தமிழ் இன, மொழி, தமிழ்நாட்டைக் ஒடுக்கும் சூதுவாதுகள் புரிவதற்கே ஒரு ஆளுநரை நியமித்து அடாவடி, செய்யச் செய்கிறது.  பலமுனைகளிலும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டரசுக்கும் முதலமைச்சருக்கும் தீமை புரிகிறது.  இதனைக் கடந்து, ஆளுநர் இரவிக்கும் ஒன்றிய அரசுக்கும் நல்ல படிப்பினை புகட்ட தமிழர் தலைவரின் களப்போர் மகத்தானது.  

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்தமுள்ளை எடுத்துத், தமிழ்க் கோயில்களில் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்த முதன்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அவர்களின் அரசை, தமிழர் நலம் பேணும் முதன்மைத் தமிழ்நாடு அரசைப் போற்றிப் பாதுகாக்க துணையாகும். தமிழர் தலைவர் வாழி!  நீடூழி!வாழி!வாழி!வணக்கம்!

ஆசிரியர் பெற்ற தகைசால் தமிழர் விருது

தந்தை பெரியார் பெற்ற விருதே!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

உலக அமைப்பாளர் பன்னாட்டு தமிழுறவு மன்றம் 


தமிழர்தலைவர்நம்தாய்மண்ணைக் காக்க

உமிபோல் பகைமைகள் ஊதி - நமின்தமிழ்

நாடு பகுத்தறிவு நாளும் வளர்ச்சிபெறப்

பாடுபடும் வீரமணி பாடு


“தகைசால் தமிழர் விருது”கலைஞர்

பகைவெல் மகன்முதல்வர் பண்பாய் - மிகைஅறிந்தே

உன்னத உச்சம் உயர்வாக தலைவர்க்கே

நன்பரிசு தான்வழங்கும் நாடு !


பற்றிலா ஞானியார்? பாசத்தை மக்கள்மேல்

முற்றும் பதியவைத்தே முன்னேற்றம் - சுற்றிவரத்

தன்னலமில் வாழ்வர் தகுஞானி! அவ்ஞானி

நன்றுநம் ஆசிரியர்நம்பு!

பத்து வயதினிலே பற்றிய கொள்கைத்தீ

கத்துகடல் சூழ்ந்த கயமைகளை -யுத்தவெறி

சாதிமத வேறுபாட்டைச் சாடி தொண்ணூற்றின்

நீதிசமம் காண்முயற்சி நீடு!


தீண்டாமைப் பேய்கள் திமிர்பேதங் களோட

மாண்புறு தந்தைநம் மாப்பெரியார்- காண்குறிக்கோள்

வெற்றிபெற ஓயா வியனுழைப்பார் வீரமணி

கற்றஅறம் தொண்டறம் காப்பு!


ஈடிணை இல்லாதே இவ்வுலகம் நம்தமிழர்

கோடிகோடி மேலுயர்த்தும் கொள்கைகள் -      பாடிவென்று

ஒத்துவாழ்ந் தேதமிழர் ஓங்குநிலை பெற்றுயர்த்தும்

வித்தகர் வீரமணி வேந்து!


தன்னேரில் லார்க்கே தகைசால் தமிழரெனும்

மன்பதைப் போராளி மாவிருதை- நன்றளித்த

மாமுதன்மை மாமுதல்வர் மாவரசு தான்வழங்கும்

கோ முதன்மை தந்த கொடை!


ஆசிரியர் வீரமணிஆக்கம் செயலாக்கம்

மாசில் பெரியார் மறுபதிப்பே!- வீசுதென்றல்

காற்றாய்க்; கனலாய்ப் புனலாய் ஆயுளோங்கி

ஏற்றஆயுள் ஓங்க இனிது!


தமிழர் தலைவர் தானடைந்த இப்பரிசோ

நம்பெரியார் பெற்றபுகழ் நற்பரிசே இத்தகைமைப்

பேறு தமிழ்விருதோபேசும் தலைமுறைகள்

வீறுதிராவி டர்கழகம் மேற்று!


வாழ்க திராவிட மாதிரி நம்அரசே

வாழ்க முதல்வர்மு.க.ஸ்டாலின் - வாழ்கவே

வாழிஅறம் வாழிநலம் வாழிஅன்பு வாழியரோ

வாழிதந்தை பெரியார் வாழ்த்து! 

No comments:

Post a Comment