பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியல் வலையில் சிக்கிவிடக்கூடாது உத்தவ் தாக்கரே எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியல் வலையில் சிக்கிவிடக்கூடாது உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மும்பை, ஆக. 1 - மகாராட்டிரா மாநிலம் தானே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மகாராட்டிர மேனாள் முதலமைச் சரும்,  சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது: 

பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியல் வலையில் சிக்கிவிடக் கூடாது. தேர்தல் வரப்போகிறது. அவர்கள் இப்போது உங்களை (மக்களை) முட்டாளாக்க முயற்சிப்பார்கள். சண்டையை தொடங்குவார்கள். 2024 ரயிலை (தேர்தலை) தவற விட்டால், இப்போது அல்லது எப்போதுமே அதனைப் பிடிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பயனற்ற வர்களை மீண்டும் ஆட்சிக்கு வர விடாதீர்கள். பாஜக மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தால், அவர்கள் ஏன் இப்படி கட்சி களை உடைக்கிறார்கள்? அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை என்பது எனக்கு தெரியும். 2024-இல் எதிர்க்கட்சி கூட்டணி பாஜக-வை ஆட்சியிலிருந்து அகற்றும்.

மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப் படாத பாஜக-வின் இந்துத்துவா தவறானது. விஸ்வகுருவின் ஆட்சி யில் நம் நாட்டில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அவர்களை யார் காப்பாற்றுவார்கள்? திரவுபதி துன்புறுத்தப் பட்டபோது, மன்னன் திருதராட்டிரன் பார்வையற்றவராக அமர்ந்திருந்தார், அவர் தடுப்பதற்கு எதுவும் செய்யவில்லை. இன்று நமது அரசனும் (மோடி) ஒன்றும் செய்யவில்லை. இது போன்ற பல சம்பவங்கள் நடந் துள்ளதாக அவர் கூறுகிறார். உண்மையில் இதுபோன்ற சம்பவங்களுக்காக அவர் வெட்கப்பட்டிருக்க வேண்டும். 

மணிப்பூரில் அமைதியை விரும்பினால், உங்கள் (பாஜகவின்) முகவர்களான அமலாக்கத் துறை, சிபிஅய் மற்றும் வருமான வரித்துறை போன்றவற்றை அங்கு அனுப்புங்கள். ஒருவேளை அது அமைதியை மீட்டெடுக்கும். அமித்ஷாவும் அங்கு செல்ல வேண்டும். பாஜக தனது சொந்த வசதிக்கேற்ப சட்டங்களை வடிவமைக்கிறது.

கரோனா காலத்தில் என்ன நடந்தது, கங்கை சுடுகாட்டில் உடல்கள் எப்படி எரிக்கப்பட்டன என்பதை நீங்கள் பார்த்தீர் கள். மகாராட்டிராவில் இது போன்ற சம்பவங்கள் நடக்க வில்லை. எங்கள் கூட்டணியான ‘இந்தியா’வை பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். மோடி வெளிநாடுகளுக்கு செல்கிறார். அங்கு அவர் இந்திய பிரதமர் என்றுதான் அழைக்கப்படுகிறார். அப்படியென்றால் அவர் இந்தியாவின் பிரதமரா? இந்திய முஜாகி தீன் பிரதமரா? என்று கேட்கலாமா?. எவ்வளவு மலிவான எண்ணம் அவருக்கு? இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

No comments:

Post a Comment