வேதக் கல்வியைப் பரப்பத் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

வேதக் கல்வியைப் பரப்பத் திட்டம்

‘மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான்' (சமஸ்கிருத பல்கலைக் கழகம்) தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

வேதங்களுக்கான முறையான கல்வியை வழங்க 1987இல் டில்லியில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக ‘மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான்’ நிறுவப்பட்டது. இதை அப்போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் பி.வி.நரசிம்ம ராவ் தொடங்கி வைத்தார். 

1993இல் இந்த அமைப்பு டில்லியிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினிக்கு மாற்றப்பட்டது. இந்த அமைப்பின் முக்கியப் பணி, வேத பாடசாலைகளை உருவாக்குவதும், அவற்றுக்கு ஆதரவு அளிப்பதும் ஆகும். இதன்படி தற்போது நாடு முழுவதும் 450 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு மாணவர்கள் சமஸ்கிருதம், வேதங்கள், உபநிடதங்கள், ஆயுர்வேதம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைப் படித்து வருகின்றனர்.  

கடந்த ஆண்டு ‘மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தா'னின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களுக்கு இந்தியப் பல்கலைக் கழகங்களின் சங்கம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின்  அங்கீகாரம் கிடைத்தது. இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு நிறைவுச் சான்றிதழ்களை வைத்து உயர் கல்வியில் கூட சேர முடியும். இந்த ‘மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான்' அமைப்பு மூலம் வேத, சமஸ்கிருத கல்வி வாரியம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில் வேதக் கல்வியை ஊக்குவிப்பதற்காக வேத, சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மய்யங்கள் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம்  மூலமாக இராமேசுவரம், பத்ரிநாத், துவாரகா உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

75 ஆண்டுகளுக்கு முன்புவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இராமேசுவரத்துக்கு மாணவர்கள் வந்து குருகுலக் கல்வி மூலம் சமஸ்கிருதம் மற்றும் உபநிடதங்களைக் கற்றனர். 1965இல் இராமேசுவரத்தில் தொடங்கப்பட்ட தேவஸ்தான பாடசாலையில் சமஸ் கிருதம் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்னர் இது சில ஆண்டுகளுக்குப் பின்பு மூடப்பட்டது. 

இந்நிலையில், இந்த பிராந்திய மய்யம் அமைவதன் மூலம் மீண்டும் சமஸ்கிருதம் மற்றும் வேத உபநிடதங்களை மாணவர்கள் கற்க வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளார்கள்.

தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை என்று 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அந்த ஆண்டே ஒரு செங்கல் வைக்கப்பட்டது. இன்றுவரை அந்த ஒற்றைச்செங்கலோடு மதுரை எய்ம்ஸ் அப்படியே உள்ளது.   

ஆனால் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்களும், பிரத மரும் மதுரை எய்ம்ஸ் பற்றிப் போலியான தகவல்களைக் கூறிக்கொண்டே வருகின்றனர். இங்கே நல்ல மருத்துவக் கட்டமைப்பு இருப்பதால் எய்ம்ஸ் மருத்துவமனை இல்லையே என்று யாரும் கவலைப்படவில்லை. ஆனால் பிரதமர் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் அல்லவா! மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் மருத்துவ மனை செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. 

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட தேவையான மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனை கள் ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னும் வரவில்லை. ஆனால் சமஸ்கிருத பல்கலைக்கழகம் இந்த ஆண்டு அறிவித்து இந்த ஆண்டே கட்டியும் முடிக்கப்படுமாம்.

"கிடந்தது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை" என்பது போல வேதக் கல்வியைப் பரப்பப் போகிறார்களாம்.

மனிதனைப் பிறப்பின் அடிப்படையில் வருண பேதம் கற்பிப்பது தானே வேதம்.

இந்த வேத மதத்தில் சங்கரர், இராமானுஜர், மத்துவர் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருவருக்கொருவர் மாறு படுவது ஏன்?

உலகம் மாயை என்கிறார் ஆதிசங்கரர் - இல்லை  என்று இராமானுஜர் அதை மறுக்கிறார். ஜீயர் சங்கராச் சாரியார் ஏற்கமாட்டார். சங்கராச்சாரியார் ஜீயரை அங்கீ கரிக்க மாட்டார். ஆதிசங்கரர் பூணூலை அறுத் தெறிந்தார்.

இவற்றில் எதைச் சொல்லிக் கொடுக்கப் போகின்றார் கள்?

அதே நேரத்தில் இந்து ராஜ்ஜியத்தை நிறுவிட வேதம் சமஸ்கிருதக் கல்வியைப் பரப்பும் முயற்சி மிக நன்றாகவே தெரிகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஆரியர் - திராவிடர் போராட்டம் மூளப் போவது மட்டும் உறுதி!


No comments:

Post a Comment