திராவிடர் கழகத்தினுடைய உணர்வு இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை - கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

திராவிடர் கழகத்தினுடைய உணர்வு இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை - கலைஞர்

தந்தை பெரியார் அவர்கள் இன்று சிலையாக இருக்கிறார். பெரியார் என்கிற ஒருவர் தமிழகத்தில் தோன்றாமலிருந்தால் அவருடைய பணி தமிழ்ச் சமுதாயத்திற்குக் கிடைக்காமல் போயிருந்தால், அவருடைய போராட்டங்கள் இந்தத் தமிழ் மண்ணிலே நடைபெறாமல் இருந்திருந்தால், இன்றைக்குத் தமிழன் எவ்வளவு தலை தாழ்ந்திருப்பான்? எந்த அளவுக்குத் தமிழன், பொட்டுப்  பூச்சிகளாய் - புன்மைத் தேரைகளாய் மதிக்கப்படக்கூடிய இருந்திருப்பான் என்பதைத் தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.

இன்று அரசு அலுவலகங்களைப் பார்க்கின்றோம். அங்கே தமிழர்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்ற காட்சியினைக் காண்கின்றோம். தாசில்தார்களைப் பார்க்கின்றோம்; அவர்களில் பலர் தமிழர்களாக இருக்கிற காட்சியையும் பார்க்கின்றோம். அதைப்போலவே, மாவட்ட  ஆட்சித் தலைவர்களைப் பார்க்கின்றோம். எல்லா இடங்களிலுமல்ல; ஒரு சில இடங்களில் தமிழர்கள் இருப்பதைப் பார்க்கின்றோம். இப்படிப்பட்ட வேலைகளுக்கு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை 'அவர்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்.

தந்தை பெரியார் பார்வையால்....

இவைகள் அனைத்தும், ஏதோ அவர்களுக்குக் கிடைத்த கிரகப் பலன்களால் அல்லது. அவர்களுக்கு ஏற்பட்ட சனிப் பெயர்ச்சியின் விளைவாய் அல்லது, குருப் பெயர்ச்சியின் விளைவால் - நாலாமிடத்தில் இருந்த சந்திரன் அய்ந்தாமிடத்திற்குச் சென்ற காரணத்தால் அல்லது. சந்திரன் அவர்களுடைய திசையைப் பார்த்த காரணத்தால், தமிழர்களுக்கு ஏற்பட்டுவிட்ட ஆதாயங்கள் அல்ல. சந்திரனும், சூரியனும், சுக்கிரனும் பார்த்த பார்வையால் இந்தப் 'பவிசு' தமிழனுக்கு ஏற்படவில்லை.

தந்தை பெரியார் என்கிற ஒருவர் பார்த்த பார்வையில்தான் தமிழனுக்கு இந்த ஏற்றம் கிடைத்திருக்கிறது. திராவிடர் இயக்கம் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றும், இன்றைக்கு நம் சமுதாய இயக்கம் - அரசியல் துறையிலும், பொருளாதாரத்துறையிலும் முறையே பாடுபடுகிற இந்த இரண்டு இயக்கங்களை நடத்தி வருகிறோம் என்றால், இந்த இயக்கங்களுடைய அடிப்படை வரலாறு என்ன?

சாஸ்திரக்கூறு

ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, 'நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு; பள்ளிக்குச் செல்ல அருகதை கிடையாது' அப்படித்தான் சாஸ்திரத்தில் போட்டிருக்கிறது என்று மாடு மேய்க்க மாத்திரம் ஒரு சாதி என்றும். மாளிகையிலே குடியிருக்க இந்தச் சாதிக்குத்தான் மகேஸ்வரன் அங்கீகாரம் அளித்திருக்கிறான் என்றும், பிரிக்கப்பட்டிருக்கின்ற கொடுமையைக் கண்டு அலறித் துடித்தார்கள்.

அவர்களால் பெரியாரைப் போல், அண்ணாவைப் போல் போராட முடிவில்லை. ஆனாலும், அவர்கள் கருத்துகளை மக்கள் மனதில் பதிய வைத்தார்கள். அன்றைக்கிருந்த ஆட்சியாளர்களிடம் முறையீடு செய்தார்கள். தங்களுடைய குறைகளை எடுத்துச் சொன்னார்கள்; இவைகளையெல்லாம் ஒருநிலைப்படுத்தித்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கப்பட்ட அந்த அமைப்பின் காலக்கட்டம் ஏறத்தாழ இன்றிலிருந்து எழுபது ஆண்டுகளுக்கு முந்தியது. அதை ஓர் உவமையால் சொல்ல வேண்டுமென்றால் மழை வருவதற்கு முன்பு நீலவானத்தில் வெண் மேகங்கள் திரண்டு. பிறகு அவைகளெல்லாம் கருமேகங்களாக உருக்கொண்டது போன்ற காட்சி! அதன் பிறகுதான் இடிமின்னல்!

அந்த இடிகளாகவும், மின்னல் தாக்குதல்களாகவும் பெரியாரும். அண்ணாவும் அந்த இயக்கத்திலே நுழைந்தார்கள்.

இடி மின்னல்

அதற்குப் பிறகு மழை பொழிந்தது, இன்றைக்கு இங்கு மழை பொழியுமோ பொழியாதோ எனக்குத் தெரியாது - ஆனால், எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கொஞ்சம் கொஞ்சமாக குவிந்திருந்த மேகங்கள் எல்லாம் திரண்டு எதிர்ப்புகளைக் கலக்கிடும் இடியாகவும், இழிவுகளைத் தீய்த்திடும் மின்னலாகவும், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணா அவர்களும் பொழிந்தார்கள். அவர்கள் பொழிந்த அந்த மழையினால்தான் சாதிக் குட்டிச் சுவர்கள் எல்லாம் கரைந்தன. மூடநம்பிக்கை என்கிற தேவையற்ற, புல், பூண்டுகள் எல்லாம் அழிந்தன. அந்த மழையிலேதான் தமிழனின் கழனி நீர் நிரம்பியதாக - நெல் நிரம்பியதாக உயர்ந்தது!

சுயமரியாதைப் பயிர் - அதுதான் ஆயிரங்காலத்துப் பயிர் - அந்த ஆயிரங்காலத்துப் பயிர்தான் இன்றைக்கு திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்றன.

நாணயத்தின் பக்கங்கள்

திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் இவைகளை நான் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூடச் சொல்ல மாட்டேன். அது தவறு என்று நான் கருதுவதால் அல்ல.

எப்படி ஒரு ரூபாய் நாணயத்திற்கு இரண்டு பக்கம் தேவையோ அப்படித்தான் திராவிடர் கழகமும். திராவிட முன்னேற்றக் கழகமும் ரூபாய் நாணயத்தினுடைய இரண்டு பக்கங்கள் என்று நான் ஆத்தூரிலே பெரியார் சிலைத் திறப்பு விழாவிலே பிரகடனப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். திராவிடர் கழகத்தினுடைய உணர்வு இல்லாமல் தி.மு. கழகம் இல்லை.

கரன்சி நோட்டு

கரன்சி நோட்டுக்கு இரண்டு பக்கம் தேவை ஒரு பக்கத்தை மட்டும் அழகாகச் சுவரிலே ஒட்டி வைத்துவிட்டு, இந்த நோட்டு செல்லும் என்று சொன்னால் அது செல்லாது. ஏனென்றால் பின்புறம் ஒட்டப்பட்டு விட்ட காரணத்தால் அது பயன்படாது. அது பயன்படாமல் போய்விட்ட காரணத்தால், என்னதான் அழகாக கண்ணாடிச் சட்டம் போட்டு வைத்தாலும் அந்த நோட்டு செல்லுபடியாகாது.

அதைப்போல திராவிட முன்னேற்றக் கழகம் - திராவிடர் கழகம் என்கின்ற இரண்டு புறத்தைக் கொண்ட இந்த கரன்சி நோட்டைக் கையிலே வைத்துக் கொண்டிருக்கிற வரையிலேதான் செல்லும். அதிலே திராவிடர் கழகம் என்று பகுதியைச் சுவரிலே ஒட்டிவிட்டு, 'பார்! பார்! தி.மு.கழகம் எவ்வளவு அழகாகத் தெரிகிறது' என்று சொன்னால் திராவிடர் கழகம் என்கிற பின்பக்கம் இல்லாமல் தி.மு.கழகம் செல்லாது. அதை உணர்ந்திருக்கிறவர்கள்தான் இன்றைக்கு தி.மு. கழகத்திலே இருக்கின்றோம்.

ஆத்தூரில் கலைஞர் இப்படிப் பேசி விட்ட காரணத்தால், இதனுடைய விளைவு என்ன ஆகுமோ! என்று யாராவது அஞ்சுவார்களேயானால், அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள நான் விரும்புகின்றேன்.

வானொலி விஷமம்.

வீரமணி சொன்னதைப் போல - தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்தில் - வேலூர் மருத்துவமனையில் தந்தை பெரியார் மறைந்தார் என்ற செய்தி எங்கள் காதுகளில் பட்டவுடன், நாங்கள் வானொலியைத் திறக்கிறோம். வானொலியில் இன்ப கீதம் பாடப்படுகிறது ! காரணம், தந்தை பெரியாருடைய சவ அடக்கம் மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிக்காத காரணத்தால் - வானொலியில் இன்ப இசை எழுப்புகிறார்கள்!

அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் தந்தை பெரியார் எவ்வளவு பெரிய வீரர் ! எத்தகை புரட்சிக்காரர் ! எவ்வளவு பெரிய மறுமலர்ச்சியைத் தமிழகத்திலே உருவாக்கியவர் என்பதை எண்ணிப் பார்த்து வானொலியினர் சோக கீதம் எழுப்பி இருக்க வேண்டும்.

அரசு மரியாதை

என்னுடைய இல்லத்திற்கு பெரிய அதிகாரிகள் எல்லாம் வருகிறார்கள்; அப்போது நான் ஆட்சிப் பொறுப்பில் தலைவராக இருக்கிறேன். வந்த அதிகாரிகளிடத்தில் பெரியாரின் சவ அடக்கத்தை அரசாங்க மரியாதையோடு நடத்த வேண்டும் என்று சொல்கிறேன். ஒரு பெரிய அதிகாரி என்னிடம் கேட்கிறார். "பெரியார் சட்டசபையில் ஒரு உறுப்பினராகக் கூட இருந்ததில்லையே ; அவருக்கு எப்படி அரசாங்க மரியாதை செய்யலாம்?" என்று கேட்கிறார்!

நான் கேட்கிறேன் அவரைத் திருப்பி - மகாத்மா காந்தியடிகள் எந்த சட்டசபையில் உறுப்பினராக இருந்தார்? அவர் மறைந்த போது அவருக்கு அரசாங்க மரியாதைகள் தரப்படவில்லையா? என்று கேட்கிறேன்.

அரசாங்க அதிகாரி - அவரும் தமிழர்தான் - தலையைச் சொரிந்து கொண்டு என்னிடம், "இல்லை" இல்லை ஒரு மாநில அரசு அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து அரசு மரியாதைகள் பெரியாருக்குச் செய்தால் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று சொன்னார்.

நான் கேட்கிறேன் - "நேரிட்டால்?" அவர் சொல்கிறார் - 'ஆட்சியைக் கூடக் கவிழ்க்கலாம்.'

அதுவே பெருமை

அப்போது நான் சொன்னேன். “எங்களுடைய ஆட்சியைக் கலைப்பதற்கு இதுதான் காரணமாகச் சொல்லப்படுமானால், இதைவிடப் பெருமை எனக்கு வேறு எதுவும் கிடையாது. எனவே, துணிந்து அறிவியுங்கள். பெரியாரின் சவ அடக்கம் அரசு மரியாதையோடு நடை பெறும்" என்று குறிப்பிட்டேன். எனவேதான் சொல்கிறேன் - அன்றைக்கே ஏற்படாத அச்சம், ஆட்சி கையிலே இருக்கும்போது ஏற்படாத அச்சம் - அகப்பையிலே உளுந்து இருக்கும்போது அதை ஆட்டலாம் - கீழே விழாமல் வீசலாம் என்று எண்ணிய கருணாநிதியா! அகப்பையிலே உளுந்து இல்லாத நேரத்தில் அதை ஆட்டப் பயப்படுவான்? எனவே, இதற்கு அச்சப்படத் தேவையில்லை. திராவிடர் கழகத்தின் உணர்வுகள்தான் தி.மு.கழகத்தை இயக்குகின்ற உணர்வுகள்.

(1-11-61 அன்று சேலம் ஆத்தூரில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து கலைஞர் ஆற்றிய உரையின் சுருக்கம்...)

No comments:

Post a Comment