சாமியார்கள் ஜாக்கிரதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

சாமியார்கள் ஜாக்கிரதை!

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மய்யம் சட்ட வரம்புகளை மீறியும், உரிய அனுமதிகள் பெறாமலும், பழங்குடி மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வன நிலங்களை ஆக்கிரமித்தும், பல்லாயிரம் சதுர அடி கட்டடங்களை கட்டி - தொடர்ந்து விழாக்களை நடத்தி வருகின்றது. இவ்வாறு அனுமதியின்றி சட்ட விரோதமாக வன நிலங்களிலும், பழங்குடி மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலும் ஈஷா யோகா மய்யம் செயல்படுவதை எதிர்த்து  போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொருளாளருமான முத்தம்மாள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் கட்டடங்கள் கட்டுவதற்கான உரிய அனுமதி பெறவில்லை எனவும், மாவட்ட ஆட்சியரிடமிருந்தும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மலைகள் பிரதேச பாதுகாப்பு ஆணையத்திடமிருந்தும், தீயணைப்புத் துறையிடமிருந்தும் கட்டடங்கள் கட்டுவதற்கு ஈஷா யோகா மய்யம் தடையில்லா சான்றுகளைப் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்கரை புலவம்பட்டி கிராம ஊராட்சியும் அனுமதி வழங்கவில்லை எனவும், வழிபாட்டு கட்டடங்கள் கட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதியும் வழங்கவில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு எதிராக, ஈஷா யோகா மய்யத்தின் சார்பில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள்  ஈஷா யோகா மய்யம் தன்னிடம் உள்ள ஆவணங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளது.

இத்தீர்ப்பினை தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் வி. கங்காபூர்வாலா மற்றும் நீதியரசர் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் வழங்கியுள்ளனர்.

ஆன்மிகத்தின் பெயரால் எந்த அளவுக்கு அத்துமீறல்களும், சட்ட மீறல்களும் நடை பெறுகின்றன என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?

இந்தக் குற்றவாளி நடத்தும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களும் வருகை தருகின்றனர் என்றால், எத்தகைய வெட்கக் கேடு! தீர்ப்புகள் என்னவாகும்!

ஏற்கெனவே இந்த ஆசாமிமீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இது போன்ற வேடதாரிகள் விடயத்தில் எல்லாம் நீதிமன்றங்கள் 'சுயோமோட்டாவாக நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே!

வடக்கே இப்படித்தான் ஒரு சாமியார் ராம்தேவ் என்ற ஆசாமி ரொம்பவே ஆட்டம் போடுகிறார். அவர்மீது வருமான வரி தொடர்பான வழக்குகளும் உண்டு.

எந்தவித விஞ்ஞான அடிப்படையும் இல்லாமல் மூலிகை மருத்துவ வியாபாரியாகக் கொள்ளை அடித்துக் கொண்டுள்ளார். இவருக்கு 'இசட்' பாதுகாப்பு ஒரு கேடாம்!

உ.பி.யில் சாமியார் ஒருவரே முதல் அமைச்சர் ஆகிவிட்டார். காவிகளின் ஆட்சியில் என்னதான் நடக்காது? எல்லாவற்றிற்கும் சேர்த்து 2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிக்கத் தயாராக இருக்க வேண்டும்! எச்சரிக்கை!!

No comments:

Post a Comment