நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 29, 2023

நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

சென்னை, ஆக. 29 - நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு வரும் 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் பரவலாக்கப் பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படி, 2002-2003ஆம் ஆண்டு காரீப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப  கழகம், ஒன்றிய அரசின் தர நிர்ணயத்திற்கு உட்பட்டு அதன் முகவராக செயல்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது. கடந்த 2022-2023ஆ-ம் ஆண்டு காரீப் கொள்முதல் பருவத்தில் 21.8.2023 வரை, 3,526 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 5 லட்சத்து 20 ஆயிரத்து 503 விவசாயிகளிடம் இருந்து 43 லட்சத்து 84 ஆயிரத்து 226 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.9,414.58 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் சம்பா கொள்முதல் 2023-2024ஆ-ம் ஆண்டு பருவத்தில், தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது. 

இந்த ஆண்டு 12.6.2023 அன்று மேட்டூர் அணை திறக் கப்பட்டு, குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட் டுள்ளன. இந்த நிலையில், விவசாயிகளின் நலன் கருதி, காரீப் 2023-2024ஆ-ம் ஆண்டு பருவத்திற்கான நெல் கொள் முதலை 1.9.2023 முதற்கொண்டு மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

அதற்கிணங்க ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் காரீப் 2023-2024ஆ-ம் ஆண்டு பருவத்திற்கான நெல் கொள்முதலை 1.9.2023 முதற்கொண்டு மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. 

ஒன்றிய அரசு சம்பா 2023-2024ஆம் ஆண்டு பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,183 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,203 என்றும் நிர்ணயித்துள்ளது. இந்நிலை யில் நெல் உற்பத்தியைப் பெருக் கும் வகையிலும், விவசாயிகளின் துயர்துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக் கத்தோடும், கே.எம்.எஸ். 2023-2024ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்க ஆணை பிறப்பித்தார்.

அதன்படியே, தற்போது சாதா ரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ் நாடு அரசு ஆணையிட்டுள்ளது. 

மேலும், இந்த புதிய குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையை 1.9.2023 முதல் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டுள் ளார். இவ்வாறு அரசின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment