பகவானுக்கே பட்டை நாமம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

பகவானுக்கே பட்டை நாமம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். ஆந்திராவின்  வைணவ ஆலயங்களில் ஒன்றான இங்கு 15 நாட் களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கை. அதன்படி  கோயில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் போது, உண்டியலில் இருந்த காசோலை ஒன்றை எடுத்துப் பார்த்துள்ளனர். அதில் 100 கோடி ரூபாய்க்கு கோயில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்து, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கோயில் வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு பக்தர் காணிக்கை செலுத்தியுள்ள சம்பவத்தால் சந்தேகமடைந்த அதிகாரிகள் இது குறித்து விசாரித்தனர். அந்த காசோலையில் உள்ள தகவல்களின் படி பொட்டேபள்ளி ராதா கிருஷ்ணாவின் சேமிப்புக் கணக்கு காசோலை அது என்பது   தெரிய வந்தது. காசோலை எம்விபி டபுள் ரோடு கோடாக் வங்கிக் கிளையின் பெயரில் இருந்தது. அதிலும் வராஹலக்ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் ரூ10 என்றும், பிறகு அதை அடித்து ரூ.100 கோடி எனவும் எழுதப்பட்டிருந்தது. 

கோவில் நிர்வாகம் வங்கியின் உதவியுடன் அந்தப் பக்தரை பிடித்து விசாரணை நடத்தியது. அதில் “நான் என் பகவானுக்கு - ரூ.100 கோடி என்ன - ஆயிரம் கோடிகூட கொடுக்க ஆசை தான், ஆனால் என்னிடம் பணமாக இல்லை. ஆகையால், அதற்கு பதிலாக, ரூ.100 கோடி காசோலை எழுதி பகவான் பெயரில் கொடுத்து விட்டேன். 

தற்போது என்னிடம் பணம் இல்லாததற்கும் பகவான்தான் காரணம்; என்னுடைய நிலையைக் கண்டு அவர் பணம் அருள்வார்; அப்போது ரூ.100 கோடியைப் பணமாக உண்டியலில் போடுவேன்; மிச்சத்தை நான் எடுத்துக்கொள்வேன்” என்று கூறினார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மெசின் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். 

இதனை அடுத்து, கோவில் நிர்வாகத்தினர் அவரை எச்சரித்து "இனி மேல் பணம் இல்லாமல் இதுபோல் உண்டியலில் போடக்கூடாது அப்படிப் போட்டால் சிறைத் தண் டனை தான் கிடைக்கும்" என்று மிரட்டி அனுப்பி உள்ளனர்.

'கடவுள் பக்தி' என்பது எத்தகைய கிறுக்குத்தனம் - மனநோய்த் தன்மை கொண்டது என்பதற்கு இது ஒன்று போதாதா?

எல்லாவற்றையும் படைத்தவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கதை அளப்பதும் - இன்னொரு பக்கத்தில் கடவுளுக்குப் பணத்தைக் கொட்டுவதும் படு முட்டாள்தனமும் முரண்பாடும் உடையது ஆகாதா?  


-  மயிலாடன்

No comments:

Post a Comment