எடப்பாடியில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 18, 2023

எடப்பாடியில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா!

எடப்பாடி, ஆக.18  சேலம் மாவட்டம் மேட்டூர் கழக மாவட்டம் எடப்பாடியில் திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 30.7.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் எடப்பாடி - கவுண்டம்பட்டி - தொலைப்பேசி அலுவலகம் அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக மாலை 4:15 மணியளவில் எடப்பாடி சின்ன மணலியில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் உரத்தநாடு கை.முகிலன் - செல்வமணி ஆகியோரின் இல்லத்திற்கு திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் - வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி மற்றும் தலைமைச் கழக அமைப்பாளர் க.நா.பாலு - பகுத்தறிவாளர், கழக மாவட்டத் தலைவர் கோவி.அன்புமதி, சேலம் மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகு, சேலம் மாநகரச் செயலாளர் சி.பூபதி, சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர் அ.இ.தமிழர் தலைவர், எடப்பாடி நகரச் செயலாளர் சா.ரவி, நகர துணைத் தலைவர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் ஆகியோர் வருகை புரிந்தனர்.

மாடிப் படிக்கட்டுச் சுவரில் சலவைக்கல்லில் (கிரானைட் டில்)தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் படமும்; தந்தை பெரியார் எடப்பாடிக்கு வந்தபோது தன்னுடைய இல்லத்தில் தங்கவைத்த - அன்றைய கழக நகரப் பொருளாளர் வி.மெய்வேல் - வாழ்விணையர் செல்லம்மாள் படமும் (இவர்களது ஆண் குழந்தைக்கு காமராஜ் என்று பெரியார் பெயர் சூட்டினார்.)

உரத்தநாடு நில அளவையர் கை.இ.கைலாசமுத்து - வாழ்விணையர் ஜெயலட்சுமி ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். (கை.முகிலனின் பெற்றோரும், தந்தை பெரியார் இடத்தில் ஒரு தொகையினைப் பெற்று, அன்றைக்கு உரத்தநாடு பேருந்து நிலையத்தில் - பல கட்டடங்களை நிறுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.) 

பின்னர் காவேரிப்பட்டி கிராமத்தில் கொடியேற்று விழா, பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சரியாக 7 மணிக்கு எடப்படி - கவுண்டம்பட்டியில் கூட்டம் தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் சா.ரவி அனைவரையும் வரவேற்றார்.

கழக காப்பாளர் சிந்தாமணியூர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் ப.கலைவாணன், பெரியார் பெருந்தொண்டர்கள் கை.முகிலன், ப.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் பெ.சவுந்திரராஜன், அமைப்பு சாரா தொழிற்சங்க செயலாளர் கே.என்.குணசேகரன், நகர கழக இளைஞரணி தலைவர் சி.மெய்ஞான அருள், மேட்டூர் நகர தலைவர் இரா.கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நூலாசிரியருக்குப் பாராட்டு விழா

பெரியார், காமராசர் ஆகியோரின் பற்றாளரும், வரலாற்று நூலாசிரியருமான இடைப்பாடி அமுதனைப் பாராட்டி, அ.இராஜராஜன், ராமதிலகம் அறக்கட்டளை நிறுவனர் எம்.குமரேசன் ஆகிய இருவரும் வாழ்த்திப் பேசினார்கள். ப.க. மாவட்டத் தலைவர் கோவி.அன்புமதி, நூலாசிரியர் அமுதனுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்கள்.

ஏற்புரையாற்றிய அமுதன் தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர் ஆகியோரின் கூட்டங்களை பெருமளவில் கேட்டு மகிழ்ந்ததாகவும், பள்ளிக்கூட நாட்களிலேயே எழுதத் தொடங்கியதாகவும், சுதேசமித்திரன் பத்திரிகையில் அவரது எழுத்துகள் பிரசுரமானதையும் குறிப்பிட்டார்கள். இவர் இயற்றிய “தமிழ்நாட்டில் சர்.தாமஸ் மன்றோ”   - என்ற நூலுக்கு கோவை சக்தி  குரூப் நிறுவனங்கள் தலைவர் டாக்டர் நா.மகாலிங்கம் அணிந்துரை வழங்கியுள்ளார். “தருமபுரியும் சர்.தாமஸ் மன்றோவும்“  வரலாற்று நூல். “சூரிய காங்கேயன்” (மோரூர்க் காங்கேயர் காலச் சரித்திர நவீனம்) இந்நூலுக்கு முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் அணிந்துரை வழங்கி யுள்ளார். மூக்குத்திப் பூக்கள் (சிறுகதைத் தொகுதி) - இந் நூலுக்கு சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் இராமகுருநாத் அவர்கள் அணிந்துரை வழங்கி யுள்ளார். மாவட்ட திராவிடர் கழகம் சான்றோர்களுக்கு பயனாடை அணிவித்து மகிழ்ந்தது.

பள்ளி மாணவச் செல்வங்களுக்குப் பரிசளிப்பு விழா!

எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் மதிப்பெண்கள் 479/500 பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்த ச.ரம்யா அவர்களுக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி பயனாடை அணிவித்தும், நோட்டுப் புத்தகங்கள் வழங்கியும், பெரியார் படிப்பகம் சார்பாக பணமுடிப்பு வழங்கியும் சிறப்பித்தார்.

பெரியார் - பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜன ஹாஷினி, இரண்டாம் பரிசு பெற்ற ஜீவகீர்த்தனா, மூன்றாம் பரிசு பெற்ற சுஜிதா ஆகியோர்களுக்கு நோட்டுப் புத்தகங் களும், உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களும் பரிசளிக்கப் பட்டன.

கழக துணைப் பொதுச்செயலாளர் உரை

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தனது உரை யைத் தொடங்கினார். முன்னதாக கழகக் காப்பாளர் சிந்தா மணியூர் சுப்பிரமணியம் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.

தந்தை பெரியாரின் தொண்டறங்களைப் பற்றியும், கலை ஞரின் செயல் திட்டங்களையும், காவல் துறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கட்சி தி.மு.க. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், 1969இல் காவல்துறை ஆணையத்தை நிறுவியவர் கலைஞர் என்றும், குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுங்கள் என்ற வேண்டுகோளையும், உங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கும், கோவில் குடமுழுக்கு - போன்ற விழாக் களுக்கும் பார்ப்பனர்களை அழைக்காதீர்கள் என்றும், கல்வி  மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துங்கள் என்ற அறிவுரைகளையும் வழங்கி, மணிப்பூர் பெண்களுக்கு நடைபெற்ற அநீதிகளைக் கண்டித்தும் உரையாற்றினார். அ.ப.ராஜேந்திரன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment