மக்கள் பாடகர் கத்தாருக்கு நமது வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

மக்கள் பாடகர் கத்தாருக்கு நமது வீரவணக்கம்!

தனித் தெலுங்கானா அமைவதற்காகத் தொடர்ந்து போராடிய வரும்,  தன்னுடைய புரட்சிகர வரிகளால் மக்களிடையே விழிப் புணர்வை  ஏற்படுத்திய வரும் மக்கள் பாடகர் என்று அழைக்கப்பட்ட வருமான கத்தார் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (6.8.2023) காலமானார்.  

1949ஆம் ஆண்டு அய்தராபாத்தில் பிறந்த கத்தாரின் இயற்பெயர் கும்மாடி விட்டல் ராவ். இளம் வயதிலேயே மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட கத்தார், 1980களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.  பல்வேறு கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்று பாடல்களைப் பாடி தனது பயணத்தை தொடங்கினார்.

பின்னர் தனி தெலுங்கானா மாநிலம் கோரிக் கையை முன் வைத்து   தனது பாடல்கள் மூலமாக மாநிலம் முழுவதும் மக்களிடையே புரட்சித்தீயை மூட்டினார்.  

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்றிற்கு அழைக்கப்பட்டு, நான் பங்கேற்றிருந்தபோது மக்கள் பாடகர் கத்தார் திடீரெனக் கலந்து கொண்டார். அந்த மேடையில் அவர் பாடியது மிகவும் உணர்ச்சிகரமான பாடலாக  - அங்கு திரண்டிருந்த மக்களை உணர்வூட்டி உற்சாக மடையச்செய்தது. 

 பாடி முடிந்த பிறகு நமது கையைப் பிடித்துக் கொண்டு, "நான் பொறியியல்  படிக்கும் போது உங்கள் உரையைக் கேட்க அடிக்கடி நான் பெரியார் திடலுக்கு வருவேன்" என்று கூறினார். 

மக்களுக்காகவே தனது வாழ்வு அர்ப்பணித்துக் கொண்ட அவர், சில காலமாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் அய்தராபாத்தில் உள்ள தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று  (6.8.2023) உயிரிழந்தார்.

அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் என்று தெலங்கானா அரசு அறிவித் துள்ளது - அவருக்குத் தரப்பட வேண்டிய பொருத்தமான மரியாதையாகும். புரட்சிப் பாடகர் - செயல்பாட்டாளர் கத்தாருக்கு நமது வீர வணக்கம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
7.8.2023    


No comments:

Post a Comment