இந்திய ரயில்வேயா... இந்தி ரயில்வேயா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 28, 2023

இந்திய ரயில்வேயா... இந்தி ரயில்வேயா?

மு.இராமனாதன்

எழுத்தாளர்; பொறியாளர்

சமீபத்தில் கோவைக்குப் போயிருந்தேன். பகல் நேர ரயிலில் சென்னைக்குத் திரும்பினேன். எனக்கு ஜெயகாந்தனின் ‘பகல் நேரத்துப் பாசஞ்சர் ரயில்’ கதை நினைவுக்கு வந்தது. அந்தக் கதை நடப்பது விடுதலைக்கு முந்தைய காலத்தில். அது எல்லா நிலையங்களிலும் நின்று நிதானித்து ஓடிய பாசஞ்சர் ரயில்களின் காலம். இது விரைவு ரயில்களின் காலம். நான் பயணித்த ரயிலின் பெயர் சதாப்தி.

பகல் நேரத்து விரைவு ரயில்கள் 80-களில் வேகம் பிடித்தன. சதாப்தி ரயில்கள் 1988இல் ஓடத் தொடங்கின. மொத்தம் 20-க்கும் மேற்பட்டவை. தென்னகத்துக்கும் இரண்டு ஈயப்பட்டன. 2017இல் தண்டவாளம் ஏறியவை தேஜஸ் ரயில்கள். சமீபத்தில் வந்தவை வந்தே பாரத் ரயில்கள். இதுகாறும் 25 வழித்தடங்கள், இவற்றில் அய்ந்திலொன்று தென் னகத்தில் ஓடுகின்றன. இந்த ரயில்களுக்குள் ஒற்றுமைகள் பல உண்டு.

இவை ஒரு பகல் பொழுதில் இரண்டு பெரு நகரங்களை இணைப்பவை. குளிரூட்டப்பட்டவை. விமானங்களைப் போன்ற இருக்கைகளைக் கொண் டவை. விமானங்களைப் போலவே இந்த ரயில் களிலும் உணவு வழங்கப்படும். முன்பதிவு கட்டாயம். கட்டணம் அதிகம். இடை நிறுத்தங்கள் குறைவு. ஒற்றுமைகள் இங்கே முடியவில்லை. அது இந்த ரயில்கள் தாங்கி நிற்கும் பெயர்களிலும் தொடர்கிறது.

வடமொழியின் செல்வாக்கு

'சதாப்தி' சம்ஸ்கிருதச் சொல். நூற்றாண்டு என்று பொருள். ஜவாஹர்லால் நேரு நூற்றாண்டின் நினைவாகத் தொடங்கப்பட்ட ரயில்கள் இவை. 'தேஜஸ்' என்பதும் சம்ஸ்கிருதம்தான். வேகம், பொலிவு, ஒளி என்றெல்லாம் பொருள்படும். 'வந்தே மாதரம்' விடுதலை முழக்கமாக இருந்தது. அது ஒரு வங்கப் பாடலின் முதல் வரி; அந்தப் பாடல் மிகுதியும் சம்ஸ்கிருதச் சொற்களால் ஆனது. அதிலிருந்துதான் ‘வந்தே பாரத்' வந்தது. ஆக, இந்த மூன்று ரயில்களின் பெயர்களிலும் வடமொழி இருக்கிறது, அல்லது வடமொழியின் செல்வாக்கு மிகுந்திருக்கிறது. இந்தச் செல்வாக்கு ரயிலுக்குள்ளும் நீளும். அது நான் பயணித்த சதாப்தி ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தெரிந்தது.

ஒரு சீருடை ஊழியர் நாளிதழ் கொடுத்துக் கொண்டே வந்தார். அவரிடம் ஆங்கிலம், தமிழ் என இரண்டு நாளிதழ்கள் இருந்தன. அவர் யாரிடமும் அவர்களது தெரிவு எது என்று கேட்கவில்லை. அவரே முடிவுசெய்து சிலருக்கு ஆங்கிலமும் சிலருக்குத் தமிழும் வழங்கினார். வாசிக்க மாட் டார்கள் என்று சிலரை அவர் கணித்திருக்க வேண்டும். அப்படியானவர்களுக்கு அவர் எந்த நாளிதழும் வழங்கவில்லை. எனது முன்னிருக்கைப் பயணிக்கு அவர் தெரிந்தெடுத்தது ஆங்கிலம். அந்தப் பயணி வாட்ஸ்ஆப் காணொலியில் பேசிக்கொண்டிருந்தார். அன்பர் உரையாடலிலிருந்து ஒரு நொடி விலகி ஊழியரிடத்தில் 'தமிழ் பேப்பர்' வேண்டுமென்று கேட்டார். உரையாடலில் மும் முரமாக இருந்த அவருக்குத் தான் கேட்டுக்கொண்ட பிற்பாடும் தனக்குத் தமிழ் நாளிதழ் கிடைக்கவில்லை என்பதை உணரச் சற்றுத் தாமதமானது. அலை பேசியைக் கீழே வைத்துவிட்டு எழுந்தார். தமிழுக்காகக் குரல் கொடுத்தார். ஆனால், ஊழியர் பல இருக்கைகளைக் கடந்து போயிருந்தார். அப்போதுதான் இன்னொரு பயணி சொன்னார், அந்த ஊழியருக்குத் தமிழ் தெரியாது. அவருக்கு மட்டுமில்லை, அடுத்தடுத்து குடிநீர், தேநீர், சிற்றுண்டி என்று ஒவ்வொன்றாகப் பரிமாறிய பணியாளர்களில் எவருக்கும் தமிழ் தெரியவில்லை. அவர்கள் ஆங்கிலத்தில் ஓர் அட்சரம்கூடப் பேசவில்லை. 

உணவிலும் ஹிந்தி

முதலில் நொறுக்குத் தீனி வந்தது. சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய ஞெகிழிப் பொதிகளில் இருந்த பண்டத்தின் பெயர் பேல்பூரி. அது கண்ணைக் கவரும் வண்ணத்தில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. மெல்லிய இனிப்புச் சுவை தவிர, அதில் சொல்ல ஒன்றுமில்லை. இதைத் தவிர, சோன் பப்டி இருந்தது. இதன் பெயரும் பொதியின் மீது ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. எனக்கு ஹாங்காங் பயணங்கள் நினைவுக்கு வந்தன. சென்னையிலிருந்து செல்லும் விமானங்களில் எப்போதும் நொறுக்குத் தீனியாக முறுக்கு, காரசேவு, ஓமப்பொடி, மிக்சர் முதலான நம் உள்ளூர்ப் பண்டங்கள்தான் வழங்கப்படும். அந்த விமானம் ஹாங்காங் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்த மானது. ஆனால், அவர்களுக்குத் தம் வாடிக்கை யாளர்களில் பலர் தமிழர்கள் என்று தெரிந்திருந்தது.

சதாப்தியில் வழங்கப்பட்ட நொறுக்குத் தீனித் தட்டத்தில் இன்னொரு காகிதப் பொதியும் இருந்தது. அதில் ரயில்வேயின் சின்னம் பதித்திருந்தது. உள்ளடக்கத்தின் பெயர் பெரிய எழுத்தில் ஹிந்தியில் மட்டும் எழுதியிருந்தது. பிரித்துப் பார்த்தேன். உள்ளே வெவ்வேறு நிறுவனங்களின் மூன்று சிறு பொதிகள். பால் பவுடர், சீனி, அமிழ்த்தக்கூடிய தேயிலைத் தூள். இவை மூன்றையும் நாம் கலந்து ஒரு காகிதக் குவளையில் வைத்துக்கொண்டால், நம்மைக் கடக்கும்போது பரிசாரகர் தனது பிளாஸ் கிலிருந்து வெந்நீர் வார்ப்பார். அவர் வருகிற நேரத்தைத் தவறவிட்டால் போயிற்று. அவர் கடந்துபோனாலும் அழைக்க முடியும், அதற்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்.

அடுத்து உணவு வந்தது. சப்பாத்தி, பருப்பு மசியல், சோறு, பனீர் (பாலாடைக் கட்டி) மசாலா. பெயர்தான் மசாலா. இனிப்புதான் தூக்கலாக இருந்தது. எனக்கு பன்னாட்டு விமான சேவைகள் வழங்கும் 'இந்து உணவு’ நினைவுக்கு வந்தது. இதைச் சில சேவைகள் ‘இந்திய உணவு' என்றும் அழைக்கும். இதில் சைவம், அசைவம் என இரண்டு வகையும் உண்டு. அசைவத்தில் இஸ்லாமியரால் தவிர்க்கப்படும் பன்றி இறைச்சியும், கணிசமான இந்துக்கள் தவிர்க்கும் மாட்டிறைச்சியும் இராது. கோழி அல்லது மீன் இருக்கும். ஹாங்காங்கிலிருந்து வரும்போதும் போகும்போதும் பயணச்சீட்டுடன் 'இந்து உணவு'க்கும் மகிழ்ச்சியுடன் முன்பதிவு செய்துவிடுவேன். சதாப்தியிலோ,தேஜஸிலோ, வந்தே பாரத்திலோ அப்படியான எந்தக் குதூகலமும் தமிழர்களுக்குக் கிடைக்காது.

வேற்றுமைகள் மதிக்கப்பட வேண்டும்

இந்தப் பயணம் நெடுக நான் ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன். அவரது பாசஞ்சர் ரயில் கதையில் வரும் ரயில் ஒரு குறியீடு. அதில் இரண்டு கதாபாத்திரங்கள் ரயிலில் சந்தித்துக்கொள்வார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ராணுவ வீரர் ஒரு பயணி. வரதட் சணை கொடுக்க இயலாமல் மூன்றாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு, கணவனையும் இழந்து, ஊராலும் உறவாலும் கைவிடப்பட்டுக் கைக்குழந்தையுடன் அவதியுறும் பெண் இன்னொரு பயணி. அந்தப் பெண் ஜாதி இந்து பிரிவைச் சேர்ந்தவர். ராணுவ வீரர் தலித். அந்தப் பெண் ராணுவ வீரரிடம் தனது குழந்தையை ஒப்படைப்பதாகக் கதை முடியும். 

ஜாதித் தடைகளைச் சமன் செய்யும் கோலாக ஜெயகாந்தன் ரயிலைப் பார்த்திருக்க வேண்டும். அதேவேளையில், மொழியும் இனமும் தடைகளல்ல. அவை அடையாளங்கள். ஒவ்வொரு இனத்த வருக்கும் தனித்தனியே பண்பாடு உண்டு, உணவும் உண்டு. அவரவர் உணவு அவரவர்க்குப் பிரிய மானது. ஒரு மாநிலத்தவர்க்கு பேல்பூரி பிடிக்கும். இன்னொரு மாநிலத்தவர்க்கு முறுக்கு பிடிக்கும். இட்லியும் முறுக்கும் சாப்பிடுகிற ஊரில் எல்லாருக்கும் சப்பாத்தியையும் பேல்பூரியையும் ஊட்டுவது எவ்விதம் சரியாகும்? தமிழ்நாட்டில் ஓடுகிற ரயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்குத் தமிழ் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி மிகையாகும்? காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி வரை ஊடறுத்துச் செல்கிறது இந்திய ரயில்வே. அது நமது தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம். அந்த ஒருமைப்பாட்டை வளர்க்க இந்திய ரயில்வே செய்ய வேண்டியவை சில உண்டு. நம்மிடையே மொழியால், இனத்தால், பண்பால், உணவால் நிலவும் வேற்றுமைகளை அது மதிக்க வேண்டும். நமது ரயில்வே நிர்வாகம் அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளையும் உணவு வகைகளையும் பரிமாற வேண்டும்.

நன்றி: 'இந்து தமிழ்திசை', 25.8.2023


No comments:

Post a Comment