ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : ஒரே வாரத்தில் இரண்டு முறை தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். உலகின் அதிநவீன கப்பற்படைகளில் ஒன்று எனக் கருதப்படும் இந்திய கப்பற்படை என்ன செய்துகொண்டு இருக்கிறது?

- அ.வேல்முருகன், திருத்தணி

பதில் 1: இந்தக் கேள்வியைத்தான் மீனவ சகோதரர்கள் வழியும் கண்ணீருடனும், பெருகும் செந்நீருடனும் கேட்கின்றனர். உலகமும் கேட்கிறது!

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த 2014இல் "மீனவர் பாதுகாப்பை ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி உறுதிப்படுத்தும்" என்று முழங்கியது முதல் மீனவர் பாதுகாப்பு இந்த சோகக் களத்திலேயே  இன்று வரையில் சொக்கட்டான் ஆடுகிறது!

----

கேள்வி 2:  டில்லி பாஜக தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்துவிட்ட கருநாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக அறிக்கை விட்டுள்ளதே?

- மு.கார்த்திக், வேளச்சேரி

பதில் 2: பா.ஜ.க என்ற கட்சி தமிழர் நலன் - தமிழ்நாட்டு நலத்துக்கும் விரோதமான ஒரு கட்சி என்ற உண்மைக்கு ஓர் ஆதாரமே இதுவும்!

---

கேள்வி 3: பொதுப் பாடத்திட்டத்தை மாநில பல்கலைக்கழகங்கள் பின்பற்றத் தேவை யில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக் கழகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து தங்கள் கருத்து என்ன? 

- வே.கந்தசாமி, வந்தவாசி

பதில் 3: சம்மனில்லாது ஆஜரான ஆர்.எஸ்.எஸ். ரவி என்ற ஆளுநரின் அன்றாட இடையூறு செய்யும் வேலைகளைப் போன்றே - இதிலும் போட்டி அரசு நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே இத்தகு தலையீடுகள்! மீடியாவில் வாழ்பவர் ஆளுநர்!

---

கேள்வி 4: ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி குஜராத்திலுள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை இந்த கல்வியாண்டு முதல் சனாதன இலக்கியம் என்ற பாடப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது குறித்துத் தங்கள் கருத்து?

- தா.பரமசிவன், கிருஷ்ணகிரி

பதில் 4: நரிகளின் வேலை அதுதானே! இன்னும் 6, 7 மாதங்களில் ஒன்றியத்தில் ஏற்படவிருக்கும் ஆட்சி மாற்றம் - அதற்கான வழிக் கதவை நிச்சயம் திறக்கும்.

----

கேள்வி 5: தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான முடிந்து போன வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதியே முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளாரே?

- கா.சந்திரசேகரன், மதுரை

பதில் 5: 25.8.2023 'விடுதலை' அறிக்கையைப் படியுங்கள்!

----

கேள்வி 6: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் - உறுப்பினர் களை நியமிக்கும் அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பி மீண்டும் சர்ச்சையில் ஆளுநர் சிக்கியுள்ளாரே?

- ச.கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனம்

பதில் 6: 'தன்னைப் பற்றி எப்போதும் ஊடகங்களில் செய்தி வரவேண்டும்' அதற்கே இப்படி அலம்பல்.

----

கேள்வி 7: இமயமலை சென்ற நடிகர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் வீட்டிற்கும், உத்தராகண்ட் ஆளுநர் இல்லத்திற்கும் சென்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது பற்றி?

- ப.மருதமுத்து, கன்னியாகுமரி

பதில் 7: சந்நியாசிகள் காலில் விழுவது அவரது கலாச்சாரம் என்று அவரே சொல்லி விட்டாரே! சுயமரியாதை, பகுத்தறிவு என்பது வேறு, விளம்பர வெளிச்சம் வேறு!

----

கேள்வி 8: ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு மாணவர்களைச் சோர்வடையச் செய்யாதா? மேலும் ஆசிரியர்களுக்கு வேலைப்பளுவைக் கொடுக்காதா? இதுபோன்ற யோசனைகளை ஒன்றிய அரசுக்குக் கொடுப்பவர்கள் யார்?

- பா.கோவிந்தசாமி, வில்லிவாக்கம்

பதில் 8: நிச்சயமாக. மாணவப் பருவத்தின் படைப்பாக்க அறிவு (Creative knowledge) கட்டாயம் பாதிக்கப்படும். தேர்வுகள் மீது பயமும் வெறுப்பும் கூடுதலாகும்!

----

கேள்வி 9: பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர் சச்சின் டெண்டுல்கர் தேர்தல் ஆணைய விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளாரே?

- கே.பலராமன், சென்னை

பதில் 9: பலே, பலே இனம் இனத்தோடு சேருகிறது அல்லது சேர்க்கப்படுகிறது!

----

கேள்வி 10: தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரின் தற்சார்பு என்ற மூடத்தனமான பேச்சை நம்பி வீட்டிலே பிரசவம் பார்த்து அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்கிறதே?

- வி.காவியச்செல்வன், வியாசர்பாடி

பதில் 10: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையும், காவல்துறையும் முன்வந்து இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.


No comments:

Post a Comment