'தமிழர் தலைவர் பேச்சிலிருந்து...' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

'தமிழர் தலைவர் பேச்சிலிருந்து...'

நமக்கு உறவினர்கள் யார்?

நம்முடைய நிகழ்ச்சிகளுக்கு மாநாடுகளுக்கு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு வரவேண்டும். நம்முடைய இயக்கத்து மாநாடுகளை நாம் இரண்டு நாள்கள் நடத்துகிறோம் என்றால் வெறும் கொள்கை விளக்கத்திற்காக என்று மட்டும் நான் நினைக்கவில்லை. அது நமக்கு திருவிழா மாதிரிதான். எப்படி பக்த கோடிகள் திருவிழா நேரத்திலே ஒன்றாக சேருகிறார்களோ அதுபோலத்தான் நம்முடைய மாநாடு கூட்டம். ஆனால் பகுத்தறிவு அடிப்படையிலே இருக்கும் என்பதுதான் மிக முக்கியமானது.

அந்தக் காலத்திலே, அய்யா காலத்திலே நம்முடைய மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வருவார்கள். அப்படி வரும்பொழுதுதான் இவ்வளவு பெரிய கூட்டம் நமக்கிருக்கின்றதா என்பதைப் பார்த்து உணர்வார்கள். அப்பொழுது நினைப்பார்கள் நம்முடைய கணவர் மட்டுந்தான் இப்படி இருப்பார் என்று நினைத்தோம்; நம்முடைய தந்தை மட்டும்தான் கட்சிக்காக இப்படி அலைகிறார் என்று நினைத்தோம்; ஆனால், நிறைய பேர் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்று மகிழ்ச்சி கொண்டு நம்முடைய குடும்பத்தார்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளுவார்கள்.

வருகிற மாநாட்டிலே கூட நான் இன்னொன்றைக்கூட அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஊர்க்காரர்கள், தாய்மார்கள் எல்லாம்கூட ஒருவருடைய முகவரியை மற்றவருக்கு கொடுக்க வேண்டும். நமது கட்சிக்காரர்கள்தான் நமக்கு சொந்தக்காரர்களே தவிர மற்றவர்கள் வேறு யாரும் கிடையாது. நமக்கு ரத்தப் பாசத்தைவிட கொள்கைப் பாசம்தான் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். நடுவிலே ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள். எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்துக்கொள்ள வேண்டும்.

(30.7.1991 அன்று திருச்சியில் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில்)

ஆழமான தத்துவம்

அரசியலிலே நாம் ஏன் தோற்றுப் போகின்றோம். நாம் நம் வீட்டை சரிப்படுத்தாவிட்டால், நாட்டை சரிப்படுத்த முடியாது. ஆகவேதான் பண்பாட்டுப் புரட்சி என்பதை வீட்டிலிருந்து தொடங்கவேண்டும். வீட்டிலே பார்ப்பனர்களை வைத்து நடத்திக் கொண்டு, வெளியிலே பார்ப்பனர்களை நாம் புறக்கணித்தால் வெற்றி பெறமுடியாது. அதனால்தான் நாம் வெற்றி பெற முடியாத நிலையிலே இருக்கின்றோம். இது ஒரு ஆழமான தத்துவம்.

பண்பாட்டுப் படையெடுப்பு என்பதிருக்கின்றதே அது மிகவும் ஆபத்தானது. வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு வெளியேறி 45 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னாலும் கூட யாரும் நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் இல்லாமல் பேச முடியாது. நாம் அறிந்தோ, அறியாமலோ ஆங்கிலம் இடையிடையே வந்துவிடுகின்றது. அந்த பண்பாட்டுப் படையெடுப்பு, மொழி படைஎடுப்பு என்பது கலந்துவிட்டது. அதே மாதிரிதான் கடவுள், மதம் என்பதும் கலந்துவிட்டது. அரசியலிலே ஆட்சி மாறி விட்டது. அரசியல் படையெடுப்பு என்பது இல்லை; அது தீர்ந்துவிட்டது. அதே மாதிரி பொருளாதாரப் படையெடுப்பு. அவர்கள் கொண்டுவந்து இறக்கியதை எல்லாம் தடுத்துவிட்டோம் ஆனால், பண்பாட்டுப் படையெடுப்பு என்பது இருக்கின்றது. காலிலே விலங்கு போட்டிருந்தால் எல்லோருக்கும் பளிச்சென்று தெரியும். கைகளிலே விலங்கு போட்டிருந்தால் எல்லோருக்கும் பளிச்சென்று தெரியும். ஆனால், மூளையிலே விலங்கு போட்டுவிட்டால் அது யாருக்கும் பளிச்சென்று தெரியாது.

(24.6.1991 அன்று சைதை எம்.பி.பாலு இல்ல மணவிழாவில்)


No comments:

Post a Comment