இதுதான் பாராட்டு! இதுதான் பரிசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

இதுதான் பாராட்டு! இதுதான் பரிசு!

- குப்பு வீரமணி

தலைமை ஆசிரியர் ஆர்த்தி மல்லிகா, புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி கடந்த மே திங்கள் 31 ஆம் நாள் பணி நிறைவு பெற்றார். தன்னுடன் பணியாற்றிய சக ஆசிரியப் பெருமக்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் 31.05.2023க்கு முன்பாகவே இனிய விருந்தளித்து தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து மகிழ்ந்தார்.31.05.2023 அன்று பள்ளி ஆசிரியர்களும். ஊர்ப் பொதுமக்களும், (பழைய) மாணவர்களும் பங்கேற்றிட விடை நல்கு விழா உளங்கனிந்த பாராட்டு விழாவாக நடத்தப்பட்டு தலைமையாசிரியரை சிறப்பித்து  மகிழ்ந்தனர். இவையெல்லாம் இயல்பாக நடப்பதுதானே! வியப்பைடைய என்ன இருக்கிறது? இந்த பணி நிறைவு விழாவை பொருள் பொதிந்த, சிறப்பு மிக்க, இனிய எடுத்துக்காட்டான விழாவாக மாற்றிக் காட்டியவர் தலைமையாசிரியர் ஆர்த்தி மல்லிகாவின், மூத்த மகன் பொறியாளர் அருளரசு!

தனது தாயாரின் பணி நிறைவு விழா வழக்கம் போல் அமைவதை அவர் விரும்பவில்லை. இத்தனை ஆண்டுக்காலம் சிறப்பாக, பெருமையுடன் - பணியாற்றிய அவருக்கு தகுதிமிக்க பரிசாக, களிப்பூட்டும் பரிசாக, மறக்க முடியாத பரிசாக, வியப்பூட்டும் பரிசாக, இந்த விழா அமைய வேண்டும் என்று எண்ணி, தனது வேலையை ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கி, தாயாருடன் பள்ளி, கல்லூரியில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடன் பயின்ற பாசமிகு தோழியரை, ஆசிரியப் பெருமக்களை தேடிக் கண்டுபிடித்து பேசினார். தோழியர்களும் பசுமையாக அந்த நாட்களை மீண்டும் நினைவு கூர்ந்து நேரில் பங்கேற்று சிறப்பிக்கவும், அவர்கள் பேருவகையுடன் முன்வந்தனர்.

விழா நாள் வரை, இந்த முயற்சி அம்மாவுக்குத் தெரிய வேண்டாம் என்ற அருளரசு'வின் வேண்டுகோளையும் உற்சாகமாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்கவும் முன் வந்தனர். தொடர்பு கொள்ளப்பட்ட எவரொருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக உற்சாகம் பொங்க ஒத்துழைத்தனர். மற்றவர்கள் காட்டிய முனைப்பு எல்லோரும் அறிய வேண்டிய அற்புதம்! அவரவர் சூழலுக்கிசைய விழாவில் நேரில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. சிலர் பயணத்தைத் தவிர்க்க வேண்டிய சூழலில் இருந்தார்கள். அவர்களுடைய நேர்காணல் காணொலிக் காட்சியாகப் பதிவாகப் பெறப்பட்டது. இவர்களில் சிலர் வேறு சிலரைக் குறிப்பிட்டு, தமது நினைவிலிருந்து சில தகவல்களைக் கூறி அவர்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டினர். அவ்வாறே முயன்று அழைக்கப்பட்டனர். அனைவரிடமும் வயது, மூப்பு, நலிவு என்ற எல்லாவற்றையும் புறம் தள்ளி அந்த இளமைக் காலத்து இனிய தோழமையைக் கொண்டாடக் காத்துக் கொண்டிருந்த வேட்கை வெளிப்பட்டது.

கூடவே ஒரு தொகுப்பையும் அணியப்படுத்தினார் அருளரசு, அம்மா பள்ளியில் படித்தபோது நினைவில் பதிந்த ஆசிரியப் பெருமக்கள், அவரிடம் பயின்ற மாணவர்கள், சக ஊழியர்கள் தவிர பயின்று கொண்டிருந்த மாணவர்களிடம் கூட நினைவுப் பதிவுகளை சேகரித்துத் தொகுத்தார். இந்த முயற்சிக்குப் பின்புலமாக அமைந்தது தந்தை பெரியார் என்பதுதான்!

பாராட்டுரைகளுக்கு முன்பாக பொறியாளர் அருளரசு அம்மாவை அழைத்து ஒரு கேள்வி கேட்டார், "நீங்கள் இந்த விழாவில் யாராவது இப்போது இங்கே இல்லையே என்று ஏங்குகிறீர்களா?"

"ஆம்! " என்றவர் தமது பெற்றோரை, மாமனார் மாமியாரை மட்டுமன்றி அண்மையில் மறைவுற்ற துணைவரின் தம்பியையும் கண்ணீர் மல்க குறிப்பிட்டார். உடனடியாக அருளரசு அவர்கள் கேட்ட உறவுகளை அவர்கள் முன்னிலையில் நிஜ உருவங்களைப் போல (சிut ஷீut) முதல் வரிசையில் காட்சிப்படுத்த அரங்கமே ஆனந்தக் கண்ணீரில் திழைக்க, நெகிழ்ந்தார் தலைமை ஆசிரியர்.

தொடர்ந்து.."வேறு யாராவது இங்கே இருந்திருக்கலாமா?" என்று வினவினார் மகன் அருளரசு.

இன்னும் வியப்புகள் உள்ளனவா? அடுத்து யார்..! என்னவென்று பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு கூடுதலானது, பரபரப்புடன் காத்திருந்தனர்.

"ஆமாம், எனக்குத் தமிழ் பயிற்றுவித்த என்னை மிகவும் கவர்ந்த தமிழய்யா கலியபெருமாள், மிகவும் பெருமைப்படுவார்கள்" என்றார். அழைத்தோம் அவர்களும் வர இசைந்தார்கள் என்றாலும் தவிர்க்க இயலாத பணியால்... தமது வாழ்த்துரையை பதிவிட்டிருக்கிறார்கள்.

கேளுங்கள் என்று காணொலியைக் காட்சிப்படுத்தினார். திரையைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கைகூப்பி வணங்கி மகிழ்ந்தார். அண்மையில் தமிழ்நாடு அரசு வழங்கிய இலக்கிய மாமணி விருதும் பெற்ற பேராசிரியர் முனைவர் இரா.கலியபெருமாள் அய்யா தமது மாணவியை அன்புடன் நினைவு கூர்ந்து பாராட்டி வாழ்த்துரைத்து பெருமை சேர்த்தார். அதனை தொடர்ந்து நிகழ்வில் பங்குப்பெற இயலாத தோழமைகளின் வாழ்த்துச் செய்தியும் காணொலியில் ஒளிபரப்பட்டது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

இளைய மகன் பொறியாளர் புகழரசு, "அம்மாவைப் பற்றி பாடல் பாடி அனைவரையும் கண்கலங்க வைத்தார்."

"வேறு யாரம்மா வேண்டும்?" என மகன் வினவ 

மேலும் சில ஆசிரியப் பெருமக்களைக் குறிப்பிட்டார். கூடவே தமது கல்லூரித் தோழியரையும் ஏக்கத்துடன் நினைவு கூர்ந்தார். "அவுக.. இப்போ எங்க எந்த ஊர்ல இருக்காகளோ..." என்ற ஏக்கம் தொனிக்கக் குறிப்பிட்டார். "கவலைப்படாதீர்கள்!  அவர்களையும் அழைப்போம் என்று கூறிவிட்டு கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்" என்றார் அருளரசு அம்மாவோடு பார்வையாளர்களும் எழுந்து அரங்கத்தின் வாயிலை ஆவலோடு பார்த்த கணம் விலை மதிப்பில்லாதது... தனது கல்லூரித் தோழியர் அருளரசு வேண்டுகோளுக்கிணங்க மறைந்திருந்தவர்கள் வெளிப்பட்டனர். ஆர்த்தி மல்லிகா தன் கண்களையே நம்பாமல் ஆனந்தக் கூச்சலிட்டு அவர்கள் பெயரைக் களிப்புடன் கூறியபடி ஓடி நெருங்கி எல்லோரும் ஒருவரையொருவர் கண்ணீர் மல்க கட்டித் தழுவி நின்ற காட்சி... பார்வையாளர்களையும் நெகிழச் செய்தது.

"இதுதான் பரிசு"  என்று எல்லோரும் உவப்புடன் கூறினர். மேலும் சில ஆசிரியப் பெருமக்களும் ஒருவர் பின் ஒருவராக கூடினர்.  தலைமை ஆசிரியர் ஆர்த்தி மல்லிகா பெருமகிழ்ச்சியை  எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்து, மகிழ்ச்சியில் நனைந்து நின்ற தருணம் எண்ணத்தக்கது. தலைமையாசிரியர் உருவம் பதிப்பிக்கப்பட்டு அஞ்சல்துறையால் வெளியிடப்பட்டிருந்த அஞ்சல் வில்லை (றிஷீstணீறீ ஷிtணீனீஜீ) தொகுப்பும் வெளியிடப்பட்டது, இதுவே இந்த நிகழ்வின் வித்தியாசமான சிறப்பினைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிறு தொகுப்பும் வெளியிடப்பட்டது நிகழ்வுகள் முன் பின்னாகத் தொகுக்கப்பட்டது என்றாலும் பெரியாரியலாளர்கள் எதைச் செய்தாலும் சிறப்பாக பொருள் பொதிந்த வகையிலேயே செய்வார்கள் என இந்த நிகழ்ச்சியும் எடுத்துக் காட்டான நிகழ்ச்சி என்று பலராலும் பாராட்டப்படுகிறது, விருந்துடன் நினைவில் நிற்கும் வகையில் தலைமை ஆசிரியர் ஆர்த்தி மல்லிகா அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நிறைவுற்றது.

No comments:

Post a Comment