ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமையாதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 14, 2023

ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமையாதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமை யாதா? புதிதாகக் கொண்டு வரப்பட்டு நிறை வேறும் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே சிதைப்பதாகவோ, பறிப்பதாகவோ இருக்கக் கூடாது என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.  

அவரது அறிக்கை வருமாறு:

நமது இந்திய நாட்டில் தற்போதுள்ள குற்ற வழக்குகளைப் பொறுத்தவரை, இருவகை சட்டங்கள் - மெக்காலே காலத்து சட்டங்கள் என்று வர்ணிக்கப்படுபவை.  

1. இ.பி.கோ. என்ற இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code)

2. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Cr.P.C என்ற Criminal Procedure Code)

இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலமான 1860 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த 160 ஆண்டுகளில் இவற்றிற்குப் பல திருத்தங்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டாலும் அதன் அடிப்படைகளில் பெரியதொரு மாற் றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

காலாவதியாகிய காலனிய ஆட்சிச் சட்டங்கள் பல உள்ளன; அவைகள் கைவிடப் பட்டு புதிய அணுகுமுறையுடன் புதிய சட்டங்கள் மக்களாட்சியில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், அப்படி புதிதாகக் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத் தையே சிதைப்பதாகவோ, பறிப்பதாகவோ இருக்கக் கூடாது.

உரிமைகளைக் காக்கும் 

புதிய சட்டங்கள் தேவை!

பிரிட்டிஷ் ஆட்சியில் அன்றைய விடுதலைப் போராளிகளுக்கு எதிராகக் கொண்டு வந்து செயல்படுத்திய தேவையற்ற  ராஜ துவேஷ அரசு சட்டம்  - Sedition 124A, ரவுலட் சட்டம் என்ற கறுப்புச் சட்டம் என நாட்டுப் போராளிகள் மீது ஏவிவிடப்பட்ட கிரிமினல்லா திருத்தச் சட்டம் (Criminal Law Amendment),  பேச் சுரிமை, எழுத்துரிமைக்கு எதிரான வாய்ப்பூட்டுச் சட்டங்களை நீக்கி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படல் வேண்டும் என்பது நாட்டின் முதிர்ந்த ஜனநாயகவாதிகளின் விருப்பம் - விழைவு!  

மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் முதலமைச்சரின் கண்டன அறிக்கை

ஆனால், அதற்கு நேர் முரணாக இப்போது அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்து, நாட்டின் குற்றச் சட்டங்களை - விரிவான விவாதத்திற்கே இடம் தராமல் நாடாளுமன்றம் நடக்காமல் பெயரளவில் நடக்கும்போது, ஆளும் கட்சியின் அதிகவேக முன்மொழிவுகள், உடனே   கை தூக்கி  வாக்கெடுப்பு - எதிர்க்கட்சிகளின் பங்களிப்போ, நீண்ட உரிய விவாதத்திற்கான வாய்ப்போ சிறிதும் தராமல் அதிலும் ஹிந்தித் திணிப்பை உறுதி செய்வதுபோல, சட்டங்களின் பெயர்களைக் கூட மற்ற ஹிந்தி தெரியாத, பேசாத மக்களின் வாயில்கூட நுழைய முடியாதபடி பெயரிட்டு முன்மொழியப்பட்டதை, நிறைவேற்றப்பட உள்ளதை துவக்கத்திலேயே தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் மக்களின் உணர்வைப் பிரதிபலித்து ஒரு விளக்கமான கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.

இது காலம் தாழ்த்தாத மக்களாட்சியின் மாண்புமிக்க ஆக்கபூர்வ கருத்தாகும்.

"பாரதிய நியாய சன்ஹிதா

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா

பாரதிய சாஷ்யா சன்ஹிதா" ஆகிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன - ஹிந்திப் பெயரில்!

ஆங்கிலத்தை அலட்சியப்படுத்தி 

சர்வமும் ஹிந்திமயம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி ஆங்கிலத்தில்தான் உச்சநீதிமன்றம் உள்பட இச்சட்ட விளக்கங்கள், நடைமுறை நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் என்று  திட்டவட்டமாக உள்ள  குறிப்பு அலட்சியப்படுத்தப்பட்டு சர்வமும் ஹிந்தி மயம் என்ற ஆதிக்க மனப்பான்மையான அலங்கோல ஆர்ப்பரிப்பு ஏன்?

உச்சநீதிமன்றத்தின் மொழி, உயர்நீதிமன்றத்தின் மொழி என்றுள்ள  Article 348, 349 ஆகிய பிரிவுகள் இப்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமுன் வரைவுகளில் (மசோதாக்களில்) பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை ஒன்றிய அரசு மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளது.

தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமையதா?

முன்பு இல்லாத  பிரிவினை   போன்றவையும் புதிய மசோதாக்களில் இணைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது, இப்போது புதிய மசோதா - அரசுக்கு எதிராகப் பேசினாலோ, எழுதினாலோ, போராட்டத்தைத் தூண்டினாலோ ஆயுள் தண்டனை என்பது, இந்திய அரசமைப்புச் சட்ட  அடிக்கட்டுமானம் முக்கியப்படுத்தும் எழுத்துரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை என்ற ஜனநாயகப்படியான உரிமைகளையே ஏதோ மிகப் பெரிய ஆயுள் தண்டனைக்குரிய  குற்றம் என்பதாக புதிய குற்றச் சட்டம் கூறுமானால், அது தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமையாதா?

அது அரசமைப்புச் சட்டத்தினையே அப்படியே தூக்கி எறியும் துன்மார்க்க மசோதாவாக ஆகி விடுமோ!

மக்கள் கவனித்துத்தான் வருகிறார்கள்

உச்சநீதிமன்றம் முன்வைத்த கருத்து- இந்திய ஜனநாயகத்தை தேர்தல் ஆணையத்திடமிருந்து காப்பாற்ற, தேர்தல் ஆணையர்கள் நியமனம்பற்றி இயற்றப்படும் சட்டத்தில் மூவரில் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும் என்பதை காற்றில் பறக்க விட்டு விட்டு, 'ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்ற தமிழ் முதுமொழி போல பிரதமருடன் மற்றொரு ஒன்றிய அமைச்சரும் என்றால் சுதந்திரமாக இயங்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் எப்படி இருக்க முடியும் - செயல்பட முடியும்?

இதற்கெல்லாம் மக்களின் பதில், 2024இல் பொதுத் தேர்தலில்,   இன்னும் 6 மாதங்களில் நிச்சயம் கிடைக்கும்; அதுவரை, ஆடும் வரை ஆடட்டும் - நாட்டை ஒற்றை ஆட்சி, ஒரே கட்சி ஆட்சியாக்கச் செய்யும் பாசிச முயற்சிகளை மக்கள் கவனித்துத்தான் வருகிறார்கள் -  விடை தருவார்கள்.

தலைகீழ் மாற்றமாக இம்மசோதாக்கள் உள்ளன

நாடாளுமன்ற நிலைக்குழுவின் (Parliamentary Standing Committee) பரிசீலனைக்கு இம்மசோதாக்கள் உட்படுத்தப்பட்டுள்ளன என்பது சற்று ஆறுதல் போல் தெரிந்தாலும்,  இத்தகைய தலை கீழ்மாற்றம் (பெயர்கள் ஹிந்தியில் திணித்தல் உள்பட) இம்மசோதாக்களின் நோக்கமாகவும் உள்ளடக்கமாகவும் உள்ள நிலையில், இதனை  நாடு தழுவிய மக்கள் மன்றத்தின், குறிப்பாக வழக்குரைஞர்களின், ஓய்வு பெற்ற நீதிபதிகள் போன்றவர்களின் கருத்துரை விவாதங்களுக்கு உட்படுத்தி இதனுடைய பல பரிமாணங்கள், பாரதூர தொலை விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி    சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் இசைவோடும், ஆதரவோடும்  நிறைவேற்றப்படுமா? 

இது இன்றைய தலைமுறையை மட்டுமல்ல; இனி வரக் கூடிய எதிர்கால தலைமுறைகளையும் பாதிக்கக்கூடியதான மிக முக்கிய ஏற்பாடு அல்லவா?

இப்போது தேவைப்படுவது புதுப்புது ஹிந்திப் பெயர்களல்ல; மாறாக, நுண்மாண் நுழைபுலம் மிக்க சட்ட மேதைகள், மக்கள் தலைவர்களின் கருத்தாக்கமும், முடிந்தால் கருத்திணக்கமுமே!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
14.8.2023



No comments:

Post a Comment