3 மாதங்களில் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 14, 2023

3 மாதங்களில் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!

ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது  ஆத்தூர் கழக மாவட்டம்!

மகிழ்ச்சியோடு செயல்படுகிறோம்!

இதுகுறித்து தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் அ.சுரேஷ் அவர்களிடம் கேட்ட பொழுது, பொதுக்குழுவில் ஆசிரியர் அவர்கள் அறிவித்த திட்டங்களுக்கு ஏற்ப, இயக்கப் பிரச்சாரங்களை வீரியத்துடன் முடுக்கிவிடுவது என்பதில் தீர்மானமாக இருந்தோம்! அவ்வகையில் ஆத்தூர், தம்மம்பட்டி, தளவாசல், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன் பாளையம் ஆகிய 5 ஊர்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி னோம்!

அதேபோன்று புத்தூர், தென்னங்குடி பாளையம், முள்ளுவாடி, இலுப்பந்தம், வீரங்கனூர், செந்தாரப்பட்டி, நாக்கியம்பட்டி, புத்திரக்கவுண்டன் பாளையம், உமை யாள்புரம், தும்பல் ஆகிய 10 ஊர்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்தினோம்! இவற்றில் இரா.பெரியார்செல்வன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ.மதிவதனி, இராம.அன்பழகன், பா.மணியம்மை, மாங்காடு மணியரசன் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினார்!

இந்தப் பிரச்சாரங்களின்  மூலம் பல தோழர்கள் எங்களுக்குப் புதிதாகக் கிடைத்தார்கள். மொத்தம் 15 கூட்டங்களை முடித்த பிறகு, இப்போது இந்தப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறோம். கூட்டங்கள் என்கிற போது அங்கு பெரியவர்கள் வருவார்கள். அவர்கள் ஏற்கெனவே பல கருத்துக ளுடன் இருப்பார்கள். அது ஒரு அனுபவம்! அதேநேரம் பயிற்சி வகுப்பு எனும் போது, மாணவர்கள் புதியவர்கள். ஆசிரியர் அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல, எழுதப்படாத சிலேட்டு! நாம் அவர்களிடம் சுயமரி யாதை, பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துக் கூறும் போது, அவர்கள் மனதில் அது பளிச்சென்று பதிந்து விடுகிறது. அவ்வகையில் இந்தப் பயிற்சி வகுப்புகள் கூடுதல் மனநிறைவைத் தருகின்றன!

பயிற்சி வகுப்புகளுக்கான ஏற்பாடுகளைப் பொறுத்தவரை திட்டமிட்டு 15 நாட்கள் வேலை செய் தோம். பெத்தநாயக்கன் பாளையம் என்பது நடுத்தர மான ஒரு ஊர். இங்கு 154 மாணவர்கள் பங்கேற்றதே பெரும் நெகிழ்ச்சியாக இருக்கிறது! மண்டபம், உணவு, ஏனைய ஏற்பாடுகளைச் சரியாக மதிப்பிட்டு, பள்ளிக் கூடங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் என நேரடியாகச் சென்று கேட்டுக் கொண்டதன் மூலம் இவ்வளவு பெரிய வெற்றி எங்களுக்குக் கிடைத்து உள்ளது", எனத் தலைமைக் கழகக் காப்பாளர் அ.சுரேஷ் தெரிவித்தார்.

நன்கொடை வசூலும், நூல்கள் விற்பனையும்!

தமிழ்நாடு முழுக்க நடைபெறும் பெரிய நிகழ்ச்சி களுக்குத் கடைத் தெரு வசூல் செய்யும் பணியை ஆத்தூர் சுரேஷ் விரும்பி செய்வார். தோழர்களும் அவரை அன்போடு அழைத்துக்  கொள்வர். தயக்கம் என்பதே சிறிதும் இல்லாமல், புன்னகை பூத்த முகத் துடன் அனைவரிடமும்  செல்வார். அவரின் அணுகு முறையால் ஒரு பத்து கடைகளில் நன்கொடையை வாங்கிவிடுவார். பிறகுதான் கூட செல்லும் தோழர் களுக்கே ஒரு உற்சாகம் பிறக்கும்! அதேபோல ஆசிரி யரின்  அவர்களின் தமிழ்நாடு அளவிலான பிரச்சாரக் கூட்டங்களில் இவரைக் காண முடியும்! கூட்டம் கேட்டுக் கொண்டிருப்பவர்களின் மனநிலை அறிந்து, சரியாக அங்கு சென்று நூல்களை விற்பனை செய்துவிடுவார். ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர்கள் நலன் பாதுகாப்பு மாநாட்டு வசூலிலும் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது    

ஈடுஇணையற்ற  தோழர்களின் பணி!

காலை உணவோடு தொடங்கியது ஆத்தூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை. பொதுவாகக்  காலை உணவுகள் ஏற்பாடு செய்வதில்லை. எனினும் கிராமம் சார்ந்த பகுதி என்பதால் பேருந்து பிரச்சினை, காலை உணவை முடித்துவிட்டு வந்தால் ஏற்படுகிற தாமதம் இவற்றை மனதில் கொண்டு காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழுதுபொருள், குறிப்பேடு, நல்ல காற்றோட்டமான சூழல், தின்பண்டம், இரு வேளை தேநீர், பிற்பகல் சிறப்பான உணவு எனப் பார்த்து, பார்த்து செய்கிறார்கள் தோழர்கள்! உயர் கல்வி, வேலை வாய்ப்பு, சுயமரியாதை, தன்னம்பிக்கைப் பெற்று மாணவச் செல்வங்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே உழைக்கிறார்கள் கருஞ்சட்டைப் படையினர்!

பயிற்சி வகுப்புகள்!

பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் தொடக்கத்தில்  மாவட்டச் செயலாளர் நீ.சேகர் வரவேற்புரை ஆற்றினார்.  மாவட்டத் தலைவர் த.வானவில் தலைமை வகித்தார்.

மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி.முருகானந்தம், செயலாளர் அ.அறிவுச்செல்வன், மாவட்டத் தொழிலாளரணி தலைவர் மு.மோகன்ராஜ், செயலாளர் வாழப்பாடி கூத்தன், பகுத்தறிவு ஆசிரிய ரணி மாநிலத் தலைவர் வா.தமிழ்பிரபாகரன், நகரத் தலைவர் வெ.அண்ணாதுரை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வேல்முருகன், பிச்ச.பழனிவேல்  ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

பள்ளி தாளாளர் சங்கர்சுதா வாழ்த்துரை வழங் கினார். தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் அ.சுரேஷ் தொடக்கவுரையாற்றினார். 

தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் எனும் தலைப்பில் முனைவர் அதிரடி அன்பழகன், தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்கிற தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் எனும் தலைப்பில் சே.மெ.மதிவதனி, ஊடகத் துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம் எனும் தலைப்பில் மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம், தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும் என்கிற தலைப்பில்  வழக்கறிஞர் பூவை. புலிகேசி பேசினர்.

எது திராவிடம்?  எது ஆரியம்?

தமிழர் - திராவிடர் - ஆரியர் எனும்  தலைப்பில் முனைவர் ப.காளிமுத்து அவர்கள் பேசும்போது, தமிழ் பேசினால் அவர்கள் தமிழரா? அப்படியெனில் ஆங் கிலம் பேசுபவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களா? திராவிடர்கள் பேசிய மொழி தமிழ். இதற்கான வரலாற்று சான்றுகள் ஏராளம் உள்ளன. அண்ணல் அம்பேத்கர் கூட திராவிடர்கள் யார், அவர்கள் பேசிய மொழி என்ன என்பது குறித்து எழுதியுள்ளார். ஆக திராவிடர்களும், தமிழர்களும் ஒன்றே என்பது உண்மை!  

இஸ்லாமாக மதம் மாறியவர்கள் மாமன், மச்சான் என்று பேசிக் கொள்வதைப் பார்க்கிறோம். 

கிறிஸ்தவ மதத்தில் இருக்கிற ஒரு தாத்தா கூட, பிற மத இளைஞரை "என்னடா, பேராண்டி," என்று விளிப்பதைக் காண்கிறோம். ஆக மதங்கள் வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் திராவிடர்களே - தமிழர்களே!

அனைவருக்கும் அனைத்தும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது திராவிடச் சித்தாந்தம். எல்லாமும் எங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பது ஆரியச் சித்தாந்தம். கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவு, நீதி, சமத்துவம் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவது திராவிடம். அதை முற்றிலும் மறுப்பது பார்ப்பனீயம்!

திராவிடத்தில் ஆண், பெண் பேதமில்லை. பேதம் மட்டுமே முழுமையாகக் கொண்டது ஆரியம்.

தேவையற்ற நுழைவுத் தேர்வுகள், நீட் போன்ற வற்றை எதிர்த்துப் போராடுவது திராவிடம்! அதை வலுக்கட்டாயமாக நுழைத்து மாணவர்களைப் பாழ் படுத்துவது பார்ப்பனீய ஆரியம்! அழகான தமிழ்ப் பெயர்களை வைப்பது திராவிடம். அசிங்கமான பெயர் களைப்  பரிந்துரை செய்வது ஆரியம்" என சுவைபட எடுத்துரைத்தார் முனைவர் ப.காளிமுத்து. 

சான்றிதழ் வழங்கல்!

மொத்தம் பங்கேற்ற 154 மாணவர்களில் பெண்கள் 87, ஆண்கள் 67. இவர்களில் வகுப்புகளைச் சிறப்பாகக் கவனித்துக் குறிப்பெடுத்த எஸ்.நவீனா, ஈ.ரம்யா, எஸ்.வினிதா, எஸ்.பிரியங்கா, ச.அக்சயா ஆகியோருக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. 

நிறைவாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பெரியார் பயிற்சிப் பட்டறையை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப்  பொறுப்பாளர்ளையும், பயிற்சியில் பங்கேற்று சிறப்பித்த மாணவர்களையும் பாராட்டி உரையாற்றினார். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 2,196 ரூபாய்க்கு நூல்கள் விற்பனையாகின. கழகப் பொறுப்பாளர்களும், பயிற்சிப் பெற்ற மாண வர்களும் குழுப் படம் எடுத்துக்கொண்டனர். மாணவர் தமிழ்மதி நன்றி கூறினார்.  

பங்கேற்றோர்!

மேட்டூர் கழக மாவட்டச் செயலாளர் ப.கலைவாணன், ஒன்றியத் தலைவர் தும்பல் பெரியசாமி, மாவட்ட ப.க.தலைவர் கோவி.அன்புமதி, மாவட்டத் தொழிலாளரணி தலைவர் மு.மோகன்ராஜ், செயலாளர் வாழப்பாடி கூத்தன், பொருளாளர் மு.சங்கர், தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், வாழப்பாடி நகரச் செயலாளர் ரமேஷ்,  திமுக நகரச் செயலாளர் பெ. வெங்கடேஷ், காளிசெட்டியூர் சுப்பிரமணி, தும்பல் அங்கமுத்து, மேட்டூர் கழக மாவட்டத் தோழர்கள் பார்த்திபன், மணிக்குமார், விஷ்ணு, வெற்றி, இராஜதுரை, தென்னகுடிபாளையம் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

- தொகுப்பு: வி.சி.வில்வம்


No comments:

Post a Comment