"வள்ளுவம் படிப்போமா?" (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 21, 2023

"வள்ளுவம் படிப்போமா?" (1)

மக்களின் பெருமையோ, சிறுமையோ அவர்களது பண்பாட்டைப் பொறுத்தே அமைகிறது.

பழம் பெரும் பண்பாட்டைப் ((Culture  - கலாச்சாரம் என்பது வட மொழிச் சொல்) பற்றி அறிந்து கொள்ளப் பெரிதும்   அகழ்வுகளும், கல்வெட்டுகளும் உதவுகின்றன. இவை   மண்ணில் புதைந்து பிறகு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டு, மக்களுக்கு அறிவு கொளுத்துவதற்குப் பயன்படும் நிலையில் - மொழியும், இலக்கியமும் கூட பெரிதும் சிறந்த சான்று ஆவணங்களாக காலத்தைத் தாண்டி மக்கள் சமூகத்திற்கு உதவு கின்றன!

பண்பாட்டுப் போர் நடத்தி அப்படையெடுப்பில் வெற்றி பெற்றவர்கள் - அதனால் மொழியை, இலக்கியத்தை அழிக்க மிகத் தந்திரமாக திட்ட மிடுகிறார்கள்.

நமது தமிழ் இலக்கியத்தில் நாம் கண்டு எடுத்து, பாதுகாத்து, பரப்பி, பயன் அடைய வேண்டிய வாழ்வியல் நூல் திருவள்ளுவரின் திருக்குறளே யாகும்!

பகுத்தறிவு, மானம், நன்றி, ஒழுக்கம், அறிவின் பயன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தல் மூலம் சமூகத்தின் மேன்மைக்கு உதவுதல்.

குறிப்பிட்ட மதம், நாடு, ஜாதி, மற்றும் வெறுப்பு - இவைகளைப் புறந்தள்ளி, மானுடம் உய்ய, மனிதம் சிறக்க மன்பதைக்கு வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம் அல்லவா திருக்குறள்!

 ஜாதி, மதம், மோட்சம், நரகம் என்ற கற்பனைகளுக்கு இடந்தராத ஓர் அறிவு - அறநூல் திருக்குறள்!

வருணாச்சிரம தர்மம் என்ற கருத்தியலை நோக்கமாகக் கொண்டு; தர்மம், ஊழி, வர்ணதர்மம், வர்ணராஸ் மிரதர்மம்  என்பதை, மறுத்து 'அறம்' என்பதற்குத் தனித்த, உயர்ந்த பொருள் கூறியுள்ளார் - 2500 ஆண்டுகளுக்கு முன்பே நமது திருவள்ளுர்!

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற (குறள் - 34)

மாசில்லா உள்ளம் - தூய்மையான உள்ளமே அறம் - அது வேதத் தன்மையொட்டிய பேத தர்மம் அல்ல என்று மறுத்தே ஒரு புதுநெறி, பொது நெறி - அறிவு நெறியை, ஒழுக்க நெறியைப் போதித்தார் என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் அமைந்த சமூகப் பண்பாடு மிகத் தன்மையோடு வாழ்ந்திருந்ததால் அதிலிருந்து பூத்த வள்ளுவம் யாத்த அறன்பற்றிய விளக்கம் - மாசில்லா மனம், தூய்மை உள்ளம், கரவற்ற மனிதம் நிலைத்து அங்கே பரவலாக இருந்த பண்பாட்டிலிருந்து கிடைத்த விளைச்சலே வள்ளுவம் என்ற அறிவுக்கான அமுத உணவு!

பிச்சை இடுகின்ற சமூகமாகவே வாழ்ந்துள்ள சமூகம்; பிச்சை கேட்கும் சமூக அல்ல - அக்கால மனிதம் விரிந்த சமூகம்!

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான்  (குறள் - 1062)

பிச்சையெடுக்காத மக்கள் சமூகம் வாழ்ந்தது என்ற பண்பை - பிச்சை எடுக்கும் தர்மத்திற்கு நேர் எதிரான பண்பாடு என்றுதானே சரியான பார்வை அமைய வேண்டும்.

பொதுக் கருத்தினை, அது பிறந்த மண், பேதமிலாத பெரு வாழ்வு மண், ஈத்துவக்கும் மண் - ஈதல் என்பதுகூட பிச்சை போடுதல் அல்ல!

'ஈதல் - பெரு உள்ளத்தோடு உதவி, அதன் மூலம் இன்பத்தைப் பெற்று  மகிழ்ந்து வாழ்தல்.

இத்தகைய பண்பாடு - எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்திருந்ததால்தான், வள்ளுவம் அதனை வார்த்தெடுத்து, நமக்கும் அறிவுப் பாடங்களாகத் தந்துள்ளது. நம்மைப் பாதுகாத்த வள்ளுவத்தை  - மானிடத்திற்கேற்ற பாடத்தை மேலும் படிப்போம்.

No comments:

Post a Comment