காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 13, 2023

காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

சென்னை, ஆக.13  காவிரியில் தண்ணீர் திறக்க கோரி தமிழ்நாடு அரசு  நாளை 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளது. இதற்கான உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அதிகாரிகள் டில்லி புறப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கருநாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் தண்ணீர் தருவது இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, ஜூன் வரை ஆகஸ்டு 11ஆம் தேதி முதல் தமிழ்நாட்டுக்கு 53.77 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கருநாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால் கருநாடகா அரசு வெறும் 15.73 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துள்ளது. 37.97டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படவில்லை.

இதையடுத்து தமிழ்நாட்டுக்கு அரசு காவிரி நீர் கேட்டு சம்பந்தப்பட்ட மன்றத்தில் முறையீடு செய்ததும் பலன் இல்லை. இந்நிலையில் டில்லியில் நடந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு பிரதிநிதிகள் காவிரியில் 37.97 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.. ஆனால் கூட்டத்தில் அதற்கான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்பட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து, காவிரி விசயத்தில் அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். அதன் அடிப்படையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கருநாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. நாளை (14.8.2023) காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்டு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தாக்கல்  செய்யும் மனுவில் 3 முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி நிலுவை நீரை மாதம் தோறும் திறந்து விட கருநாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். காவிரி ஆணையம் பாகுபாட்டோடும் ஒருதலை பட்சமாகவும் செயல்படக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு நீர்வளத்துறை அதி காரிகள் உரிய ஆவணங்களுடன் டில்லி புறப்படுகின்றனர். திங்கட் கிழமை அவர்கள் தாக்கல் செய்யும் மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment