விருதையொட்டி வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தை உருவாக்கப்படும் பெரியார் உலகிற்கு அளிக்கிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 15, 2023

விருதையொட்டி வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தை உருவாக்கப்படும் பெரியார் உலகிற்கு அளிக்கிறோம்!

 சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு நமது முதலமைச்சர் கரத்தால் வழங்கப்பட்ட ‘தகைசால் தமிழர்' விருது

தந்தை பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் அளிக்கப்பட்ட விருதாகவே கருதுகிறேன்!

சென்னை, ஆக.15  தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருது எனக்குத் தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்ட விருதாக நான் கருதவில்லை. தந்தை பெரியாருக்கும், அர்ப்பணிப்போடு உழைக்கும் பெரியார் தொண்டர்களுக்கும் அளிக்கப்பட்ட விருதாகவே கருதுகிறேன். விருதையொட்டி வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தையும், வரலாற்றில் நிலைத்து நிற்கும் வகையில் உருவாக்கப்படும் பெரியார் உலகிற்கு நன்கொடையாக அளிக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (15.8.2023) தமிழ்நாடு அரசு வழங்கிய ''தகைசால் தமிழர் விருது'' பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

தந்தை பெரியாருக்கு 

அளிக்கப்பட்ட விருது

''தகைசால் தமிழர் விருது'' என்ற இந்த விருது என் பெயருக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், உண்மையில் அவ்விருது தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்ட விருது.

பெரியாருடைய இயக்கம் ஒரு தொடர் லட்சியப் பயணத்தைச் செய்து எதிர்நீச்சல் அடித்துக் கொண் டிருக்கும்பொழுது, அதற்கு உறுதுணையாக இருக்கக் கூடிய எண்ணற்ற மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்து இருக்கக் கூடிய, வாழுகின்ற அத் துணைத் தொண்டர்களுக்கும், தோழர்களுக்கும் தமிழ்நாடு அரசு - ''திராவிட மாடல்'' அரசு இங்கே சிறப்பாக வழங்கிய தகைசால் தமிழர் விருது என்பது அவர்களுக்கு  எல்லாம் வழங்கப்பட்ட ஒரு சிறப்பான விருதாகக் கருதுகிறேனே தவிர, தனிப்பட்ட வீரமணி என்ற ஒரு நபருக்குக் கொடுக்கப்பட்டதாக நான் கருதவில்லை. இதை அடக்கத்தோடு நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதுமட்டுமல்லாமல், இந்த விருதைப் பெறுகின்ற நேரத்தில், இரண்டு செய்திகள் மிக முக்கியமானதாகும்.

விருது கொடுத்த அந்தக் கரம் எத்தகையது?

45 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தாக்கப்பட்டு, நெருக்கடி நிலை காலத்தில், சிறைச்சாலை கொட்டடியில் தள்ளப்பட்டபொழுது, அவரது உடலில் ரத்தம் வழிகின்ற நிலையில், அவரை அணைத்துப் பிடித்த கைக்குத்தான் - அந்தக் கை இன்றைக்கு எனக்கு விருது கொடுத்திருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது, மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான சூழல் ஏற்பட்டது.

என்றாலும், ஒரு செய்தி மிகவும் முக்கியமானது; இவ்விருது பெரியாருக்குக் கொடுக்கப்பட்ட விருது; பெரியார் தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட விருது என்ற பெருமைகள் இருந்தாலும், இவ்விருதைக் கொடுத்தவர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஒப்பற்ற முதலமைச்சர் 'திராவிட மாடல்' ஆட்சியைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றவர். அந்த வகையிலும் சரி, இவ்விருது கொடுக்கப்பட்ட காலம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரக்கூடிய காலம்; அது என்னவென்றால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், இவ்விருது தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

முத்தமிழறிஞர் பெற்றுத் தந்த உரிமை!

எனவே, பேரறிஞர் அண்ணாவின் விருப்பப்படி, மாநில சுயாட்சி இன்றைக்கு முதலமைச்சர் கழகக் கொடியை அரசின் சார்பில் தேசிய கொடியேற்றும் அந்த உரிமை, தமிழ்நாட்டிற்கு  மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும் அவர் வழங்கிய வள்ளல் தன்மை என்று சொல்லவேண்டும்; உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறார். நம்முடைய முதலமைச்சர் அந்தக் கொடி ஏற்றிய காட்சியைப் பார்த்தபொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

மாநில சுயாட்சியினுடைய முதல் கட்ட வெற்றி என்ற முறையில் அதைப் பார்க்கிறோம்.

பெரியார் உலகிற்கு அளிக்கிறேன்!

அதுபோலவே, தகைசால் தமிழர் விருது பெரியாருக்கு அளிக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால், இவ்விருதுக்கு அளிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாயை - பெரியாருடைய சிறப்புகளை அமைத்துக் கொண்டிருக்கக்கூடிய - 95 அடி பெரியார் சிலையையும், 45 அடி பீடத்தையும் கொண்டு திருச்சி சிறுகனூரில் அமையக்கூடிய பெரியார் உலகத்திற்கு நான் இதை நன்கொடையாக அளிக்கிறேன்.

இத்தகவலை முதலமைச்சர் அவர்களிடமும் அறிவித்தேன்.

எப்போதும் தேவைப்படுவார் பெரியார்!

செய்தியாளர்: இன்றைக்கு சமூகத்தில் நடைபெறக்கூடிய சில நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்பொழுது, பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தேவைப்படுகிறாரா?

தமிழர் தலைவர்: நிச்சயமாக! ஏனென்றால், நோய் எப்பொழுது தாக்கும்? எப்படித் தாக்கும்? என்று தெரியாது.

எனவே, மருத்துவர்களும், மருத்துவமனைகளும் எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோல, பெரியார் தேவைப்படுகிறார்! எப்பொழுதும் தேவைப்படுகிறார்!! என்றும் தேவைப்படுகிறார்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

No comments:

Post a Comment