பி.ஜே.பி. ஆளும் மணிப்பூரில் பெண்கள்மீது பாலியல் வன்கொடுமை பழங்குடியினர் கண்டனப் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

பி.ஜே.பி. ஆளும் மணிப்பூரில் பெண்கள்மீது பாலியல் வன்கொடுமை பழங்குடியினர் கண்டனப் பேரணி

இம்பால் ஜூலை 21  மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர் வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறை நிகழ்வைக் கண் டித்து, அம்மாநிலத்தின் சூர்சந்த்பூர் வீதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கண்டனப் பேரணி நடத்தினர்.

மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடு மைக்கும் ஆளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொதித்தெழுந்த பழங்குடியினர் நீதி கேட்டு போராட்டம் நடத்த வீதிகளுக்கு வந்துள்ளனர். 

இந்த நிலையில், 26 விநாடிகள் ஓடும் அந்தக் காட்சிப் பதிவின் ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை நிர்வா ணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்களில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹிராதாஸ் (32) என்ற அந்த நபர் தவுபால் மாவட் டத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் இந்த நிகழ்வின் பின்னணியில் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்றும் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள் ளது. மேலும், கைது செய்யப்பட்டவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக் குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காட்சிப் பதிவு உள்ள பிற நபர்களைப் பிடிக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும் மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள் கண்டனம்

ப.சிதம்பரம் - காங். மூத்த தலைவர்: “பிரதமர் மோடி, மணிப்பூர் குறித்த தனது மவுனத்தை கலைத்துவிட்டார். அமெரிக்கா, பிரான்ஸ், அய்க்கிய அரபு அமீரகம் மற்றும் ஏதோ ஒன்றை திறந்து வைப்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அவர் செல்லும்போது மணிப்பூர் மக்களைப் பற்றி அவர் சிந் திக்கவில்லை. எது அவரை மணிப்பூரை நினைத்துப் பார்க்க தூண்டியது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சொல்ல முடியாத கொடூரத்தின் காட்சிப் பதிவா?  மணிப்பூரில் நடந்த மனித உரிமை மீறல்களை உச்ச நீதி மன்றம் கவனத்தில் எடுத்துக் கொண் டதா? முதலில் பிரதமர் செய்ய வேண்டியது, மணிப்பூரில் மதிப்பிழந்த முதலமைச்சர்  பிரேன் சிங் ஆட்சியைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துவது தான்" என்று கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா : தனது டுவிட்டர் தளத்தில், 'ஒரு வெறிப்பிடித்த கும்பல் 2 பெண்களை கொடூரமாக நடத்தும் மணிப்பூரின் கொடூரமான காட்சிப் பதிவு கண்டு மனம் உடைந்து, ஆத்திரம் ஏற்படுகிறது. விளிம்புநிலைப் பெண்களுக்கு இழைக் கப்படும் வன்முறைகளால் ஏற்படும் வேதனையை வார்த்தைகளால் விவ ரிக்க முடியாது.

இந்த காட்டுமிராண் டித்தனமான செயல் புரிந்து கொள்ள முடியாதது மற்றும் மனிதாபிமானத் திற்கு அப்பாற்பட்டது' என ஆவேசமாக குறிப்பிட்டு இருந்தார். சமூக விரோ திகளின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்:- பெண்கள் மானபங்க காட்சிப்பதிவு நாட்டின் மனசாட்சியை உலுக்கி விட்டது. 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்தபோதிலும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக்கேடானது. இதற்கு பிரதமர் மோடி முன்வந்து பொறுப்பேற்க வேண்டும். இது உணர்வுப் பூர்வமான பிரச்சினை என்பதால் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. எப்படியாவது அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment