மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியவர் காமராஜரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 15, 2023

மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியவர் காமராஜரே!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் கே.தமிழழகன் பேசும்போது, “வறுமையினால் படிக்காமல் இருந்த குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காக மதிய உணவுத் திட்டத்தைக் காமராஜர் கொண்டுவந்தார்” என்று குறிப்பிட்டதும், அமைச்சர் ப.வளர்மதி குறுக்கிட்டு, “தனியார் உதவியுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 12ஆம் வகுப்புவரை அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது” என்று பேசினார். இதை மறுத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரங்கராஜன், “காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே சுமார் 28 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தைத்தான் எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தினார்” என்று பதிலுரை கூறினார்.

இந்த விவாதத்தின் மூலம் பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைச் சர்ச்சைக்குள்ளாக்கியதைக் கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் விடுத்த அறிக்கை:

“திடீரென்று மதிய உணவுத் திட்டத்தைப் பற்றிய சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்ற ரீதியில் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரங்கராஜன், இதை மறுத்து பேசியிருக்கிறார்.

இதுபற்றிய சில விளக்கங்களை மக்கள் ‘மன்றத்தில் வைக்கக் கடமைப்பட்டுள்ளேன். ஆகவே, மக்கள் மன்றத்தில் கருத்துக்களைப் பதிவுசெய்கிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் உருவாகின. கரிகாலனுக்குப் பிறகு தமிழகத்தில் ஓடுகிற அத்தனை ஆறுகளிலும் அணைகளைக் கட்டி, தமிழகத்தைச் செழுமையாக்கியது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி,

நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி டாங்க் தொழிற்சாலை, திருச்சி கனரக மின் தொழிற்சாலை, ரயில்பெட்டி தொழிற்சாலைகள் போன்றவை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவானவைகள். ஆனால், இவை எல்லாவற்றையும் விட, காமராஜரின் நீங்கா புகழுக்குக் கல்விக்கண் கொடுத்த கடவுளாக, ஏழைப் பங்காளனாக கருதப்படுவதுதான் காரணம். அதனால்தான் கலைஞர் அரசு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது.

பள்ளி இறுதிப் படிப்பு வரை இலவசக் கல்வி கொடுத்தார். அப்படியும் கல்விக் கூடங்களில் மாணவர் சேர்க்கை குறைகிறது என்ற காரணத்தை அறிந்து, மதிய உணவுத் திட்டத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார் என்பது தமிழகத்தின் சரித்திரம் அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.

ஏழை - பணக்காரர் வித்தியாசம் இருக்கக் கூடாது என்று பள்ளிகளில் சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவரும் இவரே. விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த பள்ளியில் பிடி அரிசித் திட்டம் இருந்ததைப் பெருந்தலைவர் அறிவார். அந்தச் சிறுவயது தாக்கமே, பெருந்தலைவர் முதலமைச்சரான பிறகு மதிய உணவுத் திட்டமாக மலர்ந்தது.

இந்தத் திட்டம் 1956-1957 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது. மாநிலம் முழுவதும் சில தனியார் பள்ளிகளிலும், மாநகராட்சிப் பள்ளி களிலும் தனியார் உதவியுடன் நடைபெற்றாலும் இதை மாநில அளவில் விரிவுபடுத்தி அரசினுடைய பங்களிப்பைச் செய்து - தன்னார்வ அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய கல்விக் குழுமங்களை உருவாக்கி - பள்ளியில் படிக்கும் பாலகர்களுக்கு, பசித்த வயிறுக்குச் சோறு போட்டவர் பெருந்தலைவர்.

தமிழகத்தின் நிதி வருமானம் மிகக்குறைவாக இருந்த நேரத்தில், 1957-1958இல் பயன்பெற்ற பள்ளிகள் 8,270, செலவு 6.93 லட்சம் ரூபாய், பயனாளிகள் 2.29 லட்சம். அதுவே 1962-1963இல் தமிழகத்தில் இருந்த 28,005 பள்ளிகளில், 27,256 பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அமலில் இருந்தது. 12.6 லட்சம் குழந்தைகள் இதனால் பயனடைந்தனர். அன்றைய வருவாய்த்துறைச் செயலாளர் ஆட்சேபனை செய்தும் கூட, பெருந்தலைவர் காமராஜரால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

கான்ட்ராக்ட் முறையில் மதிய உணவைத் தராமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஆசிரியர்களும் பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடலாம் என்று விதிசெய்து, கூடுதல் சாப்பாட்டுச் செலவும் நியாயமானது என்று அறிவித்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் வேண்டுகோளை ஏற்று 1957-1958க்கு முன்பே இந்தத் திட்டத்திற்குப் பல தனியார்களும் தானாகவே உதவிசெய்தார்கள் என்பதும் உண்மை., 1957-1958இல் மாநில அரசு திட்டமாக -  அரசின் நிதி பங்களிப்போடு அமல்படுத்தப்பட்டது என்பதை விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் பழைய வரலாற்றுப் பகுதிகளைப் படித்து தெளிவு பெறவேண்டும்.”

சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறுகிற பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோக கன்சிங் அரசு இன்றைக்கு இந்தியா முழுவதும் பள்ளிக் குழந்தைகளுக்கு (10 கோடிக்கும் மேற்பட்ட) மதிய உணவுத் திட்டத்தை அமலாக்கிச் செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த நேரத்தில் நான் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறேன்.

“கோடி புண்ணியம் ஒர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற பாரதியாரின் வரிகளை, முதலமைச்சராக இருந்து தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றியவர் பெருந்தலைவர் காமராஜர்.

மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் இத்திட்டத்தைச் சத்துணவாக மாற்றி விரிவுபடுத்தினார். அதற்கு பின்பு வந்த கலைஞர் அவர்கள் இத்திட்டத்தை மேலும் மெருகேற்றி, பள்ளிக் குழந்தைகள் சத்தாக இருப்பதற்குக் கூடுதல் முட்டை, வாழைப்பழம் போன்றவைகளை வழங்கி விரிவுபடுத்தினார். இதை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

தங்களுடைய அறியாமையை வெளிக்காட்ட இந்தத் தேசத்தின் மாட்சிமை மிகுந்த தலைவர்களை இந்த அமைச்சர்கள் கொச்சைப்படுத்தாமல் இருப்பது நல்லது.

தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி வைத்த மதிய உணவுத் திட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. சிறப்பான திட்டங்களை யார் செய்தாலும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் எங்களுக்கு உண்டு.’

(கர்மவீரர் காமராஜர் நூற்றாண்டு மலரில் 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் 

பி.எஸ்.ஞானதேசிகன் எழுதிய கட்டுரையிலிருந்து) 

No comments:

Post a Comment