அட, ஆபாசமே, உன் பெயர்தான் பா.ஜ.க.வா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

அட, ஆபாசமே, உன் பெயர்தான் பா.ஜ.க.வா?

பிஜேபி தலைவர் கிரித் சோமையா எம்.பி., மும்பையின் பிரபல பெண் தொழிலபதிபர் என்று கருதப்படும் இளம் பெண்ணோடு ஆபாசமான நிலையில் உள்ள 3 நிமிட காணொலி, மராட்டிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.  அதில் அந்த இளம்பெண் அழுதுகொண்டு தன்னை 'விட்டுவிடு' எனக் கதறுகிறார்; ஆனால் அவரோ 'சரி உன் வீட்டிற்கு சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறையை அனுப்புகிறேன். அவர்களிடம் இப்படி அழுதால் ஒன்றும் நடக்காது' என்று மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்கிறார். இந்தக் காட்சிப்பதிவு வெளிவந்த பிறகு மும்பையில் கொட்டும் மழையிலும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளன. சிவசேனா உத்தவ்தாக்கரே கட்சியினர் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சிவசேனா உத்தவ்தாக்கரே பிரிவு கட்சியின் தலைவர் அப்பாதாஸ் தான்வே கூறியதாவது: "எங்களிடம் 50க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீரோடு தங்களை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கிரிட் சோமையா பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளனர்.

மேலும் கிரிட் சோமையாவின் பாலியல் வன்கொடுமை தொடர்பான 8 மணி நேர காட்சிப் பதிவுகள் எங்களிடம் உள்ளன. நம்பகத்தன்மையைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டால் அதை சமர்ப்பிப்போம், தன்னை நம்பி வந்த பெண் அதிகாரிகளை, பெண் தொழிலதிபர்களை இவ்வாறு அமலாக்கத் துறை பெயரைச்சொல்லி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மிகவும் கீழ்த்தரமான, வெட்கம் கெட்ட, மானங்கெட்ட விபரீத செயலாகும். இதை பாஜகவினர் மட்டுமே செய்வார்கள்" என்று அவர் கூறினார்

மேலும் கிரிட் சோமையா  எம்.பி., மற்றும் ஆளும் பிஜேபி மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கத்தின்மீது  காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஷ் அகாடி கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அமைதிகாக்கும் மோடி மற்றும்  தேவேந்திரபட்னவிஸ் - பெண்கள் மீது அவர்கள் காட்டும் அக்கறை என்பது போலித்தனமானது என்றும் காட்சிப் பதிவுகளில் கூறியுள்ளனர்.

 பாதிக்கப்பட்ட பெண்களில் 35 பெண்கள் குறித்த காட்சிப் பதிவுகள் ஒரு மாராட்டிய செய்தி நிறுவனத்திடம் உள்ளதாகவும் அது வெளியானால் மகாராட்டிராவில் பாஜகவிற்குப் பெரும் அவப் பெயரும் மானக்கேடும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. (காட்சிப் பதிவை வெளியிட்ட மராட்டிய மாநில தனியார் தொலைக்காட்சி அலை வரிசை பழி வாங்கும் நோக்கில் முடக்கப்பட்டுள்ளதாம்)

கிரிட் சோமையா "அமலாக்கத்துறை, சிபிஅய் போன்றவற்றுக்கு  உத்தரவிடும் முக்கிய பதவியில் நான் இருக்கிறேன்; எனது ஆசைக்கு இணங்காவிட்டால் அமலாக்கத்துறை அடுத்த நிமிடமே உங்கள் அலுவலகம் இல்லம் உள்ளிட்ட பல இடங்களை முடக்கி சோதனை யிடும், இதனால் உங்களுக்குப் பெரிய இழப்பு மற்றும் தொழில் நெருக்கடி ஏற்படும். நீண்ட காலம் வழக்கு, சிறை என்று செல்லவேண்டி இருக்கும்

 அது உங்களுக்குச் சரியாக இருக்குமா அல்லது என்னோடு சில மணி நேரம் செலவழிப்பது சரியாக இருக்குமா?" என்று கிட்டத்தட்ட அனைத்துப் பெண்களிடமுமே மிரட்டிப் பணியவைத்துள்ளார்

இந்தக் காட்சிப் பதிவுகள் செவ்வாயன்று சட்டப் பேரவைத் துணைத் தலைவர் நீலம் கோர்ஹேவிடம்  மகாவிகாஷ் அகாடி கூட்டணி சார்பில் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

 இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ இந்த ஆட்சியில் பெண்கள் முக்கியமாக தொழிலதிபர்களாக போராடி முன்னுக்குவந்த இளம்பெண்கள் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட் டுள்ளனர். இந்த வெட்கக் கேட்டில் கிரிட் சோமையா இசட் பிரிவு பாதுகாப்புப் பெற்றுள்ளாராம். அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பு மிகுந்த ஒரு நபரின் மோசடித்தனத்தை துணிச்சலோடு வெளிக்கொண்டு வந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக நாங்கள் துணை நிற்போம்; உண்மையை வெளிக்கொண்டு வந்த அந்த பெண்ணிற்கு நாங்கள் தலை வணங்குகிறோம்! பாலியல் வன்கொடுமை மட்டுமல்ல, மிரட்டி கோடிக்கணக்கில் பணமும் பறிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.

சிவசேனா உத்தவ்தாக்கரே  செய்தித் தொடர்பாளர் சுஷ்மா அந்தரே கூறுகையில், "இது மிகவும் கேவலமான ஒரு செயலாகும் கிரிட் சோமையா நீண்ட நெடுங்காலமாக அரசியலில் இருந்துள்ளார். ஏற்கெனவே அவர் மீது ரியல் எஸ்டேட் முதலாளிகளை மிரட்டி பணம் அபகரித்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அவர் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அந்த வழக்குகள் அப்படியே கிட்டப்பில் போடப்பட்டுள்ளன. 

அவர் மீது சுமார் 40 பெண்கள் புகார் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.  புகார் அளித்த இந்தப் பெண்களின் அடையாளம் மறைக்கப்படுவது முக்கியம். ஒரு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆனால் ஆளும் அரசாங்கம் அவ்வாறு செய்யுமா என்பதில் எனக்கு பலமான சந்தேகம் உள்ளது” என்று மதிப்புமிகு சுஷ்மா அந்தரே கூறினார்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலே, 2014 முதல், பாஜக - குறிப்பாக மதிப்புமிகு சோமையா - ஒன்றிய அதிகார அமைப்புகளைப்  பயன்படுத்தி அரசியல் எதிரிகளை மிரட்டி வருவதாகக் கூறினார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் யஷோமதி தாக்கூர் கூறுகையில், "காட்சிப்பதிவு ஆளும் கூட்டணியின் "உண்மையான முகத்தை" அம்பலப் படுத்தியுள்ளது. கிரித் சோமையா  தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற  மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களையே மிரட்டி பாலியல்வன்கொடுமை செய்துள்ளார். அதுவும் சட்டப் பேரவைத் துணைத் தலைவரிடம் கொடுத்த ஆவணத்தில் உள்ளது”என்று அவர் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மகாராட்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார். இதில் அவரது கட்சியின் பெண் தலைவர்கள் பெயர் இருப்பதால் குழு ஒன்றை அமைத்துள்ளேன் என்று கூறினார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பூஷண்சிங் என்ற பேர் வழி மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்; பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தியும் கைது நடவடிக்கை இதுவரை இல்லை. பிஜேபியைச் சேர்ந்தவர்கள் என்றால் எந்தவிதமான காட்டு விலங்காண்டித்தனமான ஆபாசமான காரியங்களிலும் ஈடுபடலாம் என்பது எழுதப்படாத சட்டமா?

அட ஆபாசமே, உன் பெயர்தான் பா.ஜ.க.வா? 

No comments:

Post a Comment