குடிசைகளைக் கோபுரமாக்கிய கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

குடிசைகளைக் கோபுரமாக்கிய கலைஞர்

பாணன்

1967இல் திமுக வெற்றி பெற்றதும் கலைஞர் தன் ஆதரவாளர்களுடன் அண்ணாவை பார்க்க வருகிறார். அண்ணா அருகில் இருந்தவரிடம் சொல்கிறார் கருணாநிதி போலீஸ் மந்திரி கேட்பார் பாருன்னு, அதைப்போலவே கலைஞர் போலீஸ் மந்திரி கேட்டார். திமுக தலைவர்களிலேயே அதிக சிறைவாசம் சிறை அடக்குமுறைகளை சந்தித்தவர் கலைஞர்.

அண்ணா அவர்கள் காவல்துறையை தன்னிடமே வைத்துக் கொண்டு கலைஞரை பொதுப்பணித்துறை மந்திரியாக்குகிறார். அண்ணா மறைவிற்குப் பின் 44வயதில் முதல்வரான கலைஞர் காவல்துறையை தன்னிடமே வைத்துக் கொண்டார். அடக்குமுறையை சந்தித்த கலைஞர் காவல்துறையை பழி வாங்குவதை விடுத்து காவலர் நலவாரியம் அமைத்தார்.

காவல்நிலையம் அருகே காவலர் குடியிருப்பை அமைத்தார். காவலர்களுக்கு இருந்த அரைக்கால் டவுசரை முழு உடையாக மாற்றினார். காவலர் சீருடை ஆணையத்தை அமைத்தார். காவல்துறையினரின் சம்பள வேறுபாட்டை களைந்து சம்பள உயர்வு அளித்தார். காவல்துறையை நவீனப் படுத்தினார் கலைஞர்.

 குடிசைகளைக் கோபுரமாக்கிய கலைஞர்

முதல் முதலாக இந்தியாவில் பாகிஸ்தான் இந்தியா பிரிவினைக்கு பிறகு டில்லி நகரில் தற்காலிக டெண்ட் குடியிருப்புகள் உருவாகியது. அதாவது லாகூர் வழியாக ரயிலில் வந்தவர்கள், ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே கிடைத்த பொருட்களைக் கொண்டு குடியிருப்புகளை உருவாக்கிக்கொண்டனர். 

 கவனிக்க இது ஏழைகள் வசிக்கும் குடிசை வீடுகள் அல்ல, 1948, 1949ஆம் ஆண்டுகளில் இந்த நடைமுறை நாட்டின் முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே உருவாகியது. 

 மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் வேலை தேடிச் சென்ற மக்கள் தற்காலிக டெண்ட் போட்டு வசிக்கத் துவங்கினர். பின்னர் அவர்களே தகரம் மற்றும் மரக்கட்டைகளைக் கொண்டு குடியிருப்புகளை உருவாக்கி வசித்தனர். 

இதில் டில்லி, கொல்கத்தா, மும்பையில் உருவான குடிசைப் பகுதிகளில் தாராவி மிகப் பெரியதாக உருவாகியது ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதி என்று பெயரெடுத்து - இன்றும் அப்படியேதான் உள்ளது. 

கொல்கத்தாவின் ஹவுரா குடிசைப் பகுதி இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. பழைய டில்லி (புரானா டில்லி)யிலும் மிகப் பெரிய குடிசைப் பகுதி உள்ளது.

1987இல் கமல் நடித்த நாயகன் படத்தில் தமிழர்கள் முதலாக மும்பை தாராவி என்னும் குடிசைப் பகுதியைக் கண்டனர். சிறிய அறையில் ஒட்டுமொத்த குடும்பமே வசிக்கும். இந்த குடியிருப்பைக் கண்ட ரயில்வே துறை ரயிலில் படுக்கை வசதிகளை உருவாக்கியது. 

இதே பகுதியை 1995இல் வெளிவந்த ரஜினி நடித்த பாட்ஷா படத்திலும் காட்டுவார்கள். அதே தாராவி அப்படியே இருந்தது.  1999இல் வெளிவந்த விஜய் நடித்த நெஞ்சினிலே படத்திலும்  காட்டினார்கள். அதே தாராவி அப்படியே இருந்தது. 2018இல் வெளிவந்த ரஜினி நடித்த காலா படத்திலும் பார்த்தோம். அதே தாராவி அப்படியே இருந்தது.

ஆனால், தமிழ் சினிமாவில் சென்னை குடிசைப் பகுதிகளை கடைசியாக 1970க்கு முன் வந்த  படங்களில் பார்த்ததுதான். அதன் பிறகு வந்த படங்களில் குடிசைப் பகுதியைக் காட்டவேண்டும் என்றால் அய்தராபாத் செல்வார்கள். அல்லது தமிழ்நாட்டிலேயே செட் போட்டு படம் எடுப்பார்கள்.

 எங்கே போனது தமிழ்நாட்டில் மட்டும் இந்த குடிசைகள் என்று கேட்போருக்கு, 1970ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களின் சீரான சமூகநீதிச் சிந்தனையின் காரணமாக  தொடங்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம்தான் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.

சென்னையிலுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கொண்ட குடியிருப்புகளைக் கட்டிக்கொடுப்பதுதான் இந்த வாரியத்தின் முதன்மையான நோக்கம். சென்னையில் மட்டும் செயல்பட்டுவந்த இந்தத் திட்டம் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலுள்ள பெருநகரங்கள் தொடங்கி பேரூராட்சி வரை என்று அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

வெறும் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றிக் கொடுப்பது மட்டும் இந்த வாரியத்தின் நோக்கம் கிடையாது. அங்கு வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு, நல்ல வாழ்வியல் சூழல், நல்ல குடிநீர், மின்சாரம் தொடங்கி அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கச் செய்வதும்தான். இந்த வாரியத்தின் மூலம் இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 

மற்ற மாநிலத்தலைவர்களுக்கு வாராத இந்த சிந்தனை ஏன் கலைஞருக்கு வந்தது என்றால் அவர் பெரியாரின் பாட சாலையில் பயின்ற சமூக நீதிக் கல்வியின் பயனால் தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த நற்திட்டம். அதனால் இன்று தமிழ்நாட்டில் பெருநகரங்களில் குடிசைப்பகுதிகளே இல்லாத நிலை ஏற்பட்டது.

No comments:

Post a Comment