மலேசியாவில் தமிழர் தலைவர் முழக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

மலேசியாவில் தமிழர் தலைவர் முழக்கம்!

மலேசிய தலைநகரமான கோலாலம்பூரில்  11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கடந்த 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழ்ப் பேராளர்கள், ஆய்வறிஞர்கள், தலைவர்கள் பங்கேற்ற சிறப்பு - இம்மாநாட்டிற்கு உண்டு. மலேசியப் பிரதமர் டத்தோ சிறீஅன்வர் இப்ராகிம் மற்றும் அமைச்சர்கள் பங்கு கொண்டு சிறப்பு செய்தனர்.

மாநாட்டைத் தொடங்கி வைத்ததுடன், தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒரு மில்லியன் வெள்ளியும், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு இரண்டு மில்லியன் வெள்ளியும், மலேசிய பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் துறைக்கு 2 மில்லியன் வெள்ளியும் பிரதமர் அறிவித்ததன் மூலம் மலேசிய அரசு தமிழ் மொழிக்கு ஆக்கப் பூர்வமாக அன்புக்கரம் நீட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

முதல் நாள் (21.7.2023) மாலை மாநாட்டின் நிறைவுரையை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நிகழ்த்தினார்.

"வளர்ச்சி நோக்கில் தமிழ்" எனும் பொருளில் 38 மணித் துளிகள் அவர் ஆற்றிய உரை உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தமிழ் ஆர்வலர்களுக்கு அரும் விருந்தாக அறிவுப்படைப்பாக அமைந் திருந்தது.

வெற்றுப் புகழாரத்தை சூட்டாமல், தமிழ்மொழி காலத்துக்கேற்ற வகையில் அறிவியல் மொழியாக வளர்ச்சி பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக ஆசிரியர் அவர்களின் உரை அமைந்திருந்தது.

சமயத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்களுள் ஒருவர், நமது தலைவர் ஆசிரியரிடம் கூறியதை, தனது உரையில் சுட்டிக்காட்டிய ஆசிரியர் அவர்கள் - சமயத்துக்கு ஏற்றாற்போலப் பேசுவது தந்தை பெரியார் வழி வந்தவர்களுக்கு ஏற்புடையதாகாது என்பதை நாகரிகமாக சுட்டிக் காட்டிய ஆசிரியர் அவர்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பழைய புராணங்களைக் கட்டிக் கொண்டு அழுவது? என்ற வினாவையும் எழுப்பத் தவறவில்லை.

தந்தை பெரியார் 1936ஆம் ஆண்டிலேயே கூறிய கருத்தினை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்த மானதாகும்.

"முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலகப் பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும்  கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்" (குடிஅரசு 26.1.1936) என்று கழிவிரக்கத்தோடு தந்தை பெரியார் கூறியதைக் கவனிக்க வேண்டும்.

87 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் கூறியதை அவர்தம் கொள்கை வாரிசான ஆசிரியர் அவர்கள் சரியான இடத்தில் (உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்) சரியான நேரத்தில் பொருத்தமாகக் கூறியிருப்பது எத்தகைய நேர்த்தி  - நேர்த்தியிலும் நேர்த்தி!

முதலை உண்ட பாலகனை மீட்டதும், எலும்பைப் பெண்ணுரு வாக்கியதும், மூடியிருந்த கதவைத் திறக்கச் செய்ததும்தான் தெய்வத் தமிழ் என்பது எல்லாம் எள்ளி நகையாடத் தக்கதன்றோ!

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி விட்டார் தந்தை பெரியார் என்று இன்றளவும் பேசக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உண்மையிலேயே தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டு செய்தவர் தந்தை பெரியார்தான் - தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப் படுத்தி மாபெரும் புரட்சி செய்தவர் தந்தை பெரியார் தானே!

தந்தை பெரியார் தான் நடத்திய 'குடிஅரசு' 'விடுதலை', 'பகுத்தறிவு', 'உண்மை' என்று இதழ்களுக்கெல்லாம் எத்தகைய பெயரைச் சூட்டினார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். குழந்தை களுக்கெல்லாம் நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டியவரும் அவரே!

அவர் கவலை எல்லாம், ஆங்கிலம் போல தமிழ் வளர்ந்த மொழியாக வேண்டும் என்பதுதான்.

இதுகுறித்து தந்தை பெரியார் கருத்தை அறிய வேண்டும்.

"தமிழ்மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தை பல முறை சொல்லியிருக்கிறேன்.

ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும் தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பில்லை" ('விடுதலை' 1.12.1970 பக்கம் 2) என்று மனந்திறந்து கூறியதை மாச்சரியமில்லாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாநாட்டில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் 1918ஆம் ஆண்டு மார்ச்சு 30,31 ஆகிய நாட்களில் தஞ்சை. திருச்சி பார்ப்பனரல்லாதார் மாநாட்டிலேயே தமிழ் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் நினைவூட்டினார்.

தமிழன் கட்டிய கோயில்களில் தமிழுக்கு இடம் இல்லையே - அதைப்பற்றி சிந்திக்க வேண்டாமா? என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் எழுப்பிய வினா மொழி உணர்வையும், தன்மான உணர் வையும், இனவுணர்வையும் தட்டி எழுப்பக் கூடியதாகும்.

சமஸ்கிருதம் தெய்வ மொழி என்றும், தமிழ் நீஷப் பாஷை என்றும் கூறுவோருக்கு நல்ல சூடும் கொடுத்தார். எங்கு சென்றாலும் தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை என்பது முத்தாய்ப்பானதாக முத்திரை பதிப்பதாகவே இருக்கும். கோலாலம்பூர்  உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் அதுவாகவே இருந்தது.

No comments:

Post a Comment