'சங்கப்பிள்ளை அன்பகம்' திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

'சங்கப்பிள்ளை அன்பகம்' திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

 தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்!

‘சங்கப்பிள்ளை இல்லம்'தான் அதற்குப் பதில் - நான்காம் தலைமுறை பாரீர்!

சங்கப்பிள்ளை- வீரமணி- அன்புராஜா -அவனிகோ இளந்திரையன்!

லால்குடி, ஜூலை 17 தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள். இதோ சங்கப்பிள்ளை இல்லம்தான் அதற்குப் பதில். பெரியாருக்குப் பிறகு, சங்கப்பிள்ளைக்குப் பிறகு, அவரது மகன் வீரமணிக்குப் பிறகு, அவருடைய பிள்ளைகள் -இப்பொழுது நான்காவது தலைமுறை. இப்பொழுது 4-ஜி. 2-ஜியெல்லாம் தாண்டிப் போய் விட்டது. 2-ஜி என்றால், இரண்டாவது ஜெனரேசன். இப்பொழுது நான்காவது தலைமுறை என்று அன்பு ராஜாவும் - செல்வியும் பெருமிதத்தோடு சொன்னார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

‘‘சங்கப்பிள்ளை அன்பகம்'' 

இல்ல அறிமுக விழா!

கடந்த 8.7.2023 அன்று காலை திருச்சி - இலால்குடி வட்டம் கீழவாளாடியில் பெரியார் பெருந்தொண்டர் சங்கப்பிள்ளை அன்பகம் இல்லத்தினை திறந்து வைத்து  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிமுக உரையாற்றினார்.

அவரது அறிமுக உரை வருமாறு:

கீழவாளாடியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 47 பேர்

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அன்புத் தோழர்கள் அன்புராஜா - செல்வி ஆகியோருடைய புதிய இல்லத் திறப்பு விழா - அவருடைய தாத்தா முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இறுதி மூச்சுவரையில் தந்தை பெரியாருடைய கொள்கைக்காக தன் வாழ்நாளையே தத்தம் செய்யக்கூடிய அளவிற்கு, அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் தண்டனை பெற்று - இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர். இப்போராட்டத்தில் பங்கேற்று தண்டனை பெற்றவர் களில் கீழவாளாடியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 47 பேர். ஆகையால், இந்த இடத்திற்கு வருவதற்கு நான் எல்லை யற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

ஏனென்றால், இதுவரையில் - எந்தப் பகுதியிலும் இதுபோன்ற தொண்டர்கள் கிடைக்கமாட்டார்கள் என்ற பெருமை படைத்த பகுதி இது.

 ‘‘சங்கப்பிள்ளை அன்பகம்‘’

அப்படிப்பட்ட இந்த மண்ணில், தோழர்கள் அன்பு ராஜா - செல்வி ஆகியோருடைய புதிய இல்லத்திற்கு ‘‘சங்கப்பிள்ளை அன்பகம்'' என்று அருமையாக பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இங்கே நான் வரும்பொழுது பார்த்தேன் - ஏராளமான இளைஞர்கள் திரண்டு, இந்த இல்லத்து விழாவினை ஒரு குடும்ப விழாவாக அமைத்திருக்கிறார்கள்.

இங்கே நம்மை எல்லோரையும் வரவேற்றுப் பேசிய நம்முடைய அன்புராஜா அவர்களுடைய வாழ்விணை யர் செல்வி அவர்கள், சற்று நேரத்திற்கு முன்பு, இரத்தினச் சுருக்கமாக ஒரு கருத்தைச் சொன்னார்.

ரத்த உறவுகளைவிட 

மிகவும் முக்கியமானது

என்னவென்று சொன்னால், எங்களுக்கு உறவுகள் என்பது இருக்கிறதே - கழக வரவுகள்தான் என்பதையும், கொள்கை உறவுகள்தான் எங் களுக்கு ரத்த உறவுகளைவிட மிகவும் முக்கிய மானது - இன்றைக்குத் திரண்டிருக்கிறார்கள் - நேற்றே வந்து விட்டார்கள்'' என்றார். 

துறையூர் இளைஞர்கள் குறிப்பாக மணிவண்ணன் அவர்களுடைய தலைமையில் ஏராளமான இளைஞர் களும், இந்தப் பகுதியில் இருக்கின்ற இளைஞர்களும் இங்கே வந்திருக்கின்றார்கள்.

இங்கு நான் வந்துவிட்டுத் திரும்பும்பொழுது, ஒரு புத்துணர்ச்சியோடு திரும்பக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்ச்சி மிக அருமையாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட சிறப்பான இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து, மேடையில் என்னோடு சிறப்பிக்கின்ற லால்குடி கழக மாவட்டத் தலைவர் தே.வால்டர் அவர்களே, தலைமைக் கழக அமைப்பாளரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், இன்னமும் ஓர் இளைஞரைப்போல ஓடிக்கொண்டிருக்கக் கூடியவருமான நம்முடைய ஆல்பர்ட் அவர்களே,

திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் அவர் களே, தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர் அவர்களே, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களே, துறை யூர் மாவட்டத் தலைவர் மணிவண்ணன் அவர்களே,

இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களை இங்கே பார்க்கிறேன் - எல்லோருமே இளைஞர்களாக இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு, இன்றைக்கு முதியவர் களாகக் காட்சியளிக்கக் கூடிய வகையில் ஏராளமான தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

இப்பெருமைக்குரிய ஒரு நிகழ்வில் கலந்துகொள் கின்ற நம்முடைய அருமைத் தோழர் அன்புராஜா அவர்களுடைய தாயார் அம்மையார் அவர்களே மற்றும் அவர்களுடைய அருமைச் செல்வங்களே, ஏராளமாக வந்திருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனங்கனிந்த, உளங்கனிந்த வாழ்த்துகள், வணக்கங்கள்!

இது நம்முடைய குடும்ப விழா -  அன்புராஜா அழைத்தவுடன் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி!

கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார் அன்புராஜா

ஏனென்றால், அன்புராஜா அவர்கள் திராவிடர் கழக இளைஞராக அன்றைக்கு வந்து - அன்றையில் இருந்து இன்றுவரை கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார். அரசு ஊழியர் அவர். அதேபோன்று அவருடைய வாழ்விணையர் செல்வி அவர்களும் ஆசிரியர்.

அய்யா சங்கப்பிள்ளை அவர்களைப்பற்றி இங்கே சொல்லியிருக்கிறார். 

வைதீகர்களாக இருந்தால், இந்த மண்ணை ‘புனித' மண் என்று சொல்லியிருப்பார்கள். நமக்கு ‘புனித'தத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், கொள்கை உரமேறிய மண் இந்த மண்.

திராவிடம் என்பது 

ஆயிரங்காலத்துப் பயிர்!

இந்த மண்ணை ஒரு பிடி எடுத்துக்கொண்டுபோய், இன்னொரு இடத்தில் தெளித்தால், அந்த மண்ணுக்கு மிக முக்கியமான அர்த்தம் என்னவென்றால், ‘‘எங்களு டைய திராவிடம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் - இதை எந்தக் கொம்பனாலும் அசைக்கவோ, அழிக் கவோ, தொடவோ முடியாது என்பதற்கு அடையாளம்'' அதுதான்.

இங்கே சில குறிப்புகளை தலைமைக் கழக அமைப் பாளர் ஆல்பர்ட் கொடுத்திருக்கிறார், அதைப் படிக்கிறேன் கேளுங்கள்.

மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம்!

1 கீழவாளாடி தெருவில் மட்டும் அரசமைப்புச் சட்ட எரிப்பில் - சங்கப்பிள்ளை, சிங்காரவேலு ஆகி யோரின் தலைமையில் 47 பேர் 2 ஆண்டுகள் சிறை சென்றனர்.

‘‘அரசமைப்புச் சட்ட நகலை எரித்தால் என்ன தண் டனை என்று இதுவரை சட்டம் கிடையாது. ஆகவே, புதிதாக நாங்கள் அவசர சட்டத்தைக் கொண்டு வருவோம்'' என்று டில்லி ஆட்சியாளர்கள் சொல்லி,  அந்த அவசர சட்டத்தில், எரிக்கவோ, எரிக்க முயற்சி செய்தாலோ மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்போம் என்றது.

தந்தை பெரியார் அரசமைப்புச் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை அறிவித்துவிட்டார்.

மேற்கண்ட தண்டனை அறிவிப்பு வந்தவுடன், தந்தை பெரியார் அவர்கள் கைப்பட எழுதுகிறார்,

‘‘மூன்று வருட தண்டனைக்கோ அல்லது 30 வருட தண்டனைக்கோ அல்லது தூக்குத் தண்டனைக்கோ நாங்கள் பயந்து ஒதுங்கக்கூடிய கூட்டமல்ல. எங்களு டைய கருப்புச் சட்டைத் தோழர்கள், எங்களுடைய தொண்டர்கள் - நாங்கள் அதையும் மீறி இந்தக் காரியத்தைச் செய்வோம்'' என்று எழுதினார்.

இதுபோன்ற ஒரு தலைவரின் அறிவிப்பு, அதேபோல ஓர் இயக்கம், அதை நடத்திக் காட்டிய அமைப்பு உலகத்திலேயே வேறு எங்கும் கிடையாது. உலக வரலாற்றில் எங்கேயாவது பார்த்து இருந்தால் சொல் லுங்கள், நான் திருத்திக் கொள்கிறேன். 

இந்தப் பகுதிக்கு என்ன தனிச் சிறப்பு என்றால் - குறிப்பாக கீழவாளாடி பகுதி என்பது சாதாரணமானதல்ல.

ஒரு காலத்தில், வாளாடியில் பெரிய அளவிற்கு செல்வாக்குள்ள பார்ப்பனர்கள், மிராசுதாரர்களாக இருந்தார்கள்.

எம்.கே.குப்தா

அந்தக் காலத்தில் எம்.கே.குப்தா என்பவர் இருந்தார். சுயமரியாதை மேடைகளில் மிகக் கடுமையாகப் பேசுவார். அப்போது எனக்கு 12 வயது இருக்கும்.

‘‘வாளாடியில் இருக்கக் கூடிய ஏ, காளாடிப் பார்ப்பனர்களே, உங்கள் ஜம்பம் எல்லாம் எங்களிடம் பலிக்காது; எல்லாவற்றிற்கும் தயாராகத்தான் பெரியார் தொண்டர்கள் வந்திருக்கின்றோம்'' என்று பேசினார்.

சங்கப்பிள்ளை உள்பட 47 பேருக்கு 

இரண்டாண்டு சிறைத் தண்டனை

அரசமைப்புச் சட்ட நகலை எரித்தால், மூன்று ஆண்டு தண்டனை என்று அவசர சட்டம் வந்தவுடன், இந்த வாளாடியில், ஒரு தெருவில் கீழவாளாடி தெருவில் மட்டும் பயப்படாமல், சட்டத்தின் கையகல கடுதாசியை எரித்து, சங்கப்பிள்ளை உள்பட 47 பேர் இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்றனர்.

அவர்கள் செய்தது என்ன?

சமூகத்திற்கு எதிராக ஏதாவது செய்தார்களா? இல்லையே!

இன்றைக்கு ஒரு குற்றமும் செய்யாதவர்கள் ஜெயிலுக்குப் போகிறார்கள்; குற்றம் செய்தவர்கள் எல்லாம் வெளியில் இருக்கிறார்கள்.

நம்முடைய சூத்திரப் பட்டம், நம்முடைய பஞ்சமர் பட்டம், நம்முடைய பறையர் பட்டம், நம்முடைய சக்கிலியர் பட்டம், நம்முடைய இழிவுப் பட்டம் ஒழிவதற்காக, நம்மைத் தொடாதே என்று சொன்னக் கொடுமை - நம்மைப் படிக்காதே என்று சொன்ன கொடுமையை ஒழிப்பதற்காகத்தான் - அவற்றைக் கண்டித்துத்தான் தந்தை பெரியார் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியை முன்னிலைப்படுத்தினார். அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொன்னதும் அதனுடைய தொடர்ச்சிதான் - அதில் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கின்றோம்.

இந்த வாளாடியில் இருந்துதான் 47 பேர் இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்றனர். இதனைப் படிக்கும் பொழுதே  எனக்கு மயிர்க்கூச்செறிவது போன்று இருக் கிறது.

2. வேலூர் சிறையில் ஆளுநர், சிறுவன் புல்கானி பெரியசாமியிடம் (16 வயது) ‘விடுதலை செய்கிறேன்’ எனக் கூறியதற்கு மறுத்து சிறையில் உள்ளே இருந்தார். (அந்த நினைவுக் கம்பத்தில்தான் தமிழர் தலைவர் 8.7.2023 அன்று கொடி ஏற்றினார்).

அசாமில் இருந்து வந்தவர் இந்த ஆளுநர். வேலூர் சிறையில் இருக்கும் கீழவாளாடி பெரியசாமி மகன், இளைஞராக இருப்பவரிடம் கேட்டார், ‘‘இவ்வளவு சின்ன வயதினனாக இருக்கிறாயே, நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்கிறார் அந்த ஆளுநர்.

எங்கள் தலைவர் பெரியார் மறுபடியும் கொளுத்தச் சொன்னால், மீண்டும் கொளுத்துவேன்!

‘‘அரசமைப்புச் சட்ட நகலை எரித்து வந்தேன்; அதற்காக எனக்கு இரண்டாண்டு தண்டனை கொடுத்திருக்கிறார்கள்'' என்றார் அந்தச் சிறுவன்.

‘‘உன்னை மன்னித்து நான் விடுதலை செய்கி றேன்; நீ வெளியே செல்லலாம். ஏனென்றால், உன்னுடைய எதிர்காலம் கருதித்தான் இதை செய்கிறேன். இனிமேல் இதுபோன்ற தவறை செய்யமாட்டாய் அல்லவா?'' என்று கேட்கிறார்.

உடனே வாளாடி பெரியசாமி அவர்கள் ஆளுநரிடம், ‘‘என்னை விடுதலை செய்கிறீர்கள், அதற்கு நன்றி சொல்கிறேன். ஆனால், எங்கள் தலைவர் பெரியார் மறுபடியும் கொளுத்தச் சொன்னால், மீண்டும் கொளுத்திவிட்டு, இதே சிறைச்சாலைக்கு வருவேன்'' என்றார்.

சிறைச்சாலையில் யாரும் இதைச் சொல்லிக் கொடுத்து அந்த 16 வயது இளைஞன் சொல்லவில்லை.

அந்த நினைவுக் கம்பத்தில்தான் நான் இன்றைக்கு மறுபடியும் கொடியேற்றி விட்டு  வந்தேன். 2007 ஆம் ஆண்டு அந்த நினைவுக் கம்பம் அமைக்கப்பட்டது. இன்றைக்கு மறுபடியும் அந்தக் கம்பத்தில் கொடியேற்றி இருக்கிறோம்.

தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்.

இதோ இந்த இல்லம்தான் அதற்குப் பதில்.

நான்காவது தலைமுறை

பெரியாருக்குப் பிறகு, சங்கப்பிள்ளைக்குப் பிறகு, அவரது மகன் வீரமணிக்குப் பிறகு, அவருடைய பிள்ளைகள் -இப்பொழுது நான்காவது தலைமுறை.

இப்பொழுது 4ஜி - 2ஜியெல்லாம் தாண்டிப் போய்விட்டது. 2ஜி என்றால், இரண்டாவது ஜெனரேசன். இப்பொழுது நான்காவது தலைமுறை என்று அன்புராஜாவும் - செல்வியும் பெருமிதத்தோடு சொன் னார்கள். 12 ஆம் வகுப்பு படிக்கிறார் இந்தப் பிள்ளை.

தலைமுறை தலைமுறையாக இருக்கக்கூடிய இந்த இயக்கம்தான் - இந்தக் கொள்கைதான். மக்களை வாழ வைக்கக்கூடிய இயக்கம்.

3. தட்டப்பாறை சிறையில் இவ்வூர் சிறுவர்கள் பெரியசாமி, பேச்சிமுத்து, பிரான்சிஸ் மற்றும் மணக்கால் இலெட்சுமணன் ஆகியோர் (13 வயதினர்) இருந்தனர்.

அரசமைப்புச் சட்ட நகல் எரிப்பில் 13 வயதினரும் சிறை சென்றிருக்கிறார்கள். தட்டப்பாறையில் பெரியசாமி இறந்தபொழுது, அய்யா - அம்மாவோடு நானும் அவரு டைய உடலை அடக்கம் செய்வதற்குச் சென்றேன்.

4. தட்டப்பாறை சிறையில் தோழர் பெரியசாமி 22.12.1958 இல் மறைந்தபொழுது, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் நேரில் சென்று அடக்கம் செய்தனர்.

5. தட்டப்பாறை சிறையில் இறந்த தோழர் பெரியசாமிக்கு கீழவாளாடி முகப்பில், தந்தை பெரியார் 24.1.1961 இல் நினைவுத் தூண் திறந்துவைத்தார்.

6. இலால்குடி (கழக) மாவட்டத்தில் மட்டும் சட்ட எரிப்பில் சிறை சென்றவர்கள் 277 பேர். இதில் திருமணம் ஆகாதவர்கள் 160 பேர். 16 வயதிற்குள் உள்ளவர்கள் 4 பேர்.

கொள்கை வீரர்களைக் 

கொடுத்த மண்!

இதுபோன்று வேறு எந்த இயக்கத்திலாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு கொள்கை வீரர்களைக் கொடுத்த மண் இந்த மண் - இந்த பூமி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். 

7. தற்போது இம்மாவட்டத்திலேயே உயிருடன் இருப்பவர்கள் கீழவாளாடியில் ப.கணேசன், அங்கமுத்து, கோவிந்தன், மைக்கேல், பிலவேந்திரன், திருமங்கலத்தில் மருதை, மேகநாதன் மற்றும் இடையாற்றுமங்கலம் முத்துசெழியன் ஆக 8 பேர் மட்டும்தான்.

இவர்கள் நீண்ட நாள் உடல்நலத்தோடு வாழ வேண்டும்.

8. அன்புராஜா - செல்வி இணையர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட பட்டதாரிகள். அன்புராஜாவின் தாத்தா சங்கப்பிள்ளை, அவரது தந்தையார் இவ்வூர் செயலாளராக இருந்து மறைந்த ச.வீரமணி. இவர் 3ஆவது தலைமுறை.

சங்கப்பிள்ளை அவர்கள் ஜாதி ஒழிப்புப் போராட் டத்தில் பங்கேற்றவர். பேரன் அதைப் பேச்சாக மட்டும் இல்லாமல், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்.

இவரின் பிள்ளைகள் அவனிக்கோ இளந்திரையன், அறிவுச்சுடர் ஆகியோரும் வல்லம் பழகுமுகாமில் கற்றவர்கள். மேலும் குற்றாலம் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்கள்.

(தொடரும்)


No comments:

Post a Comment