இளம் பெண்கள் கருத்தரித்தல் அதிகரிப்பு நாமக்கல் ஆட்சியர் வேதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

இளம் பெண்கள் கருத்தரித்தல் அதிகரிப்பு நாமக்கல் ஆட்சியர் வேதனை

நாமக்கல்,ஜூலை11 - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தை யொட்டி,  கருத்தரங்கம் இன்று (11.7.2023) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ச.உமா பங்கேற்று பேசுகையில் குறிப்பிட்டதாவது,

மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வேலையில்லா திண்டாட்டம், உணவுப் பற்றாக்குறை, போக்குவரத்து நெரி சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஆட்சியராக பொறுப்பேற்றேன். மாவட்டம் அனைத்து வளர்ச்சிகளையும் கொண்ட மாவட்டமாக இருக்கும் என நம்பினேன். ஆனால் மிகவும் வேதனைக் குரிய வகையில் 19 வயதிற்கு உள்பட்ட இளம் பெண்கள் ஓராண்டில் கருத்தரிப்பது அதிகப்படியாக இங்கு காணப்பட்டது. 

குறிப்பாக 542 இளம் பெண்கள்  கருத்தரித்துள்ளனர். இவர்களில் திருமணம் ஆனவர்களும் உண்டு, திருமணம் ஆகாதவர்களும் உண்டு. பெற்றோரை அழைத்து இது தொடர்பாக பேசியபோது, தற்போதைய காலம் மிகவும் மோசமாக உள்ள சூழலால் திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவித்தனர். உலகம் கைபேசிக்குள் அடங்கி இருக்கிறது. அதன் மூலம் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. 

மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி பிறர் பாராட்டும் வண்ணம் வாழ்ந்திட வேண்டும். சாதனை படைத்த கல்பனா சாவ்லாவையும், இந்திரா காந்தியையும் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் தங்களையும் மற்றவர்கள் பேச வேண்டும் என்கிற சூழலை உருவாக்கிட வேண்டும் என்றார். 

முன்னதாக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment