திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

 மொழி உரிமை, சம உரிமை, பகுத்தறிவுச் சிந்தனைகள், பெண்ணடிமை இல்லாத சமத்துவம் இவை அத்தனையும் இருப்பதுதான் சுயமரியாதைத் திருமணம்!

சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர்கள் சிறப்பாக 

வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

சென்னை, ஜூலை 12  மொழி உரிமை, சம உரிமை, பகுத்தறிவுச் சிந்தனைகள், பெண்ணடிமை இல்லாத சமத்துவம் இவை அத்தனையும் இருப்பதுதான் சுயமரியாதைத் திருமணம். இம்மணமுறையில் திருமணம் செய்துகொண்டவர்கள் சிறப்பாக வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்; வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்; எனவே, யாரும் அச்சப்படவேண்டிய அவசியமே இல்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

மணமக்கள் தி.சிற்றரசு - த.எழிலரசி

கடந்த 9.7.2023 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர் களின் மகன் தி.சிற்றரசு - த.எழிலரசி ஆகியோரின் மணவிழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய  

முதலமைச்சர்

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடை பெறக்கூடிய சுயமரியாதைத் திருமணமான இந்த வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து, மணமக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் அறிவுரை கூறவுள்ள, ஒப்பற்ற ‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய ஒப்பிலாத - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முதலமைச்சராக - இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய  முதலமைச்சராக இருக்கக்கூடிய எங்கள் பாசத்திற்கும், நேசத்திற்கும், அன்பிற்கும் உரிய மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் அவர்களே,

இம்மணவிழாவில் நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய தொ.மு.ச. செயலாளரும், சீரிய சுயமரியாதை வீரருமான அன்பிற்குரிய அய்யா சாக்கோட்டை மு.சண்முகம் அவர்களே,

தொகுப்புரையை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய நம் குடும்பத்துப் பெருமகனார் - தி.மு.க. செய்தித் தொடர்பாளர் அருமைச் சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

சிறப்பான வகையில், எனக்கு முன் மணமக்களை வாழ்த்தி அமர்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவருமான அன்பிற்குரிய அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், சீரிய கொள்கையாளருமான  அன்புச் சகோதரர் ஆ.இராசா அவர்களே,

திராவிட இயக்கத்தின் போர்வாள்!

கழகத்தின் முக்கிய பொறுப்பாளராக, இந்தக் கழகத்தைப் பாதுகாக்கக் கூடிய பணியில் நான் இருக் கிறேன், பாதுகாவலர்களில் ஒருவராக இருக்கிறேன் என்று பெருமையோடு ஒவ்வொரு மேடையிலும் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடிய திராவிட இயக்கத் தின் போர்வாள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பிற்கும் பாராட்டு தலுக்கும் உரிய நம்முடைய அருமைச் சகோதரர் வைகோ அவர்களே, தி.மு. கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அருமைச் சகோதரர் கோபண்ணா அவர்களே,

மற்றும் இவ்வரங்கத்தில் கூடியிருக்கக்கூடிய அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட சான்றோர் பெருமக்களே, மணமக்களின் பெற்றோர்களான அருமைப் பெரியோர்களே, நண்பர் களே, தாய்மார்களே, மன்றல்  கூடிடும் மணமக்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்மையெல்லாம்  பெருமைப்படுத்துகின்ற திராவிட இயக்க ஆய்வாளர் அய்யா திருநாவுக்கரசு!

இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, திராவிட இயக்க ஆய்வாளர், நம்மையெல்லாம்  பெருமைப்படுத்துகின்ற, அடிக்கடி நாம் பயன்படுத்து கின்ற ஓர் ஆய்வாளர் அருமை அய்யா நம்முடைய திருநாவுக்கரசு அவர்களுடைய இல்லத்து மணவிழா!

அவருடைய பிள்ளைகளுக்கெல்லாம் நம்முடைய இயக்க உணர்வோடு பெயரிட்டு, ஆரம்ப காலத்திலிருந்து இந்த இயக்கத்தில், இந்தக் கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத அளவிற்கு தீவிரமான சுயமரியாதை உணர்வு படைத்தவர்.

அதன் காரணமாகத்தான் மணமகனுக்குப் பெயரே சிற்றரசு. சிற்றரசு என்று சொல்லக்கூடிய பெயர் பழைய தோழர்களுக்கெல்லாம் தெரியும்.  அதேபோல, மண மகளைப் பொருத்து தொழிற்சங்கத்திலிருந்து  வந்த ஒரு நல்ல இணைப்பு. தொழிற்சங்கத் தலைவர் வி.எம்.ஆர். சபாபதி அவர்களின் நினைவைப் போற்றக் கூடிய அளவிற்கு மலர்ந்துள்ள தொ.மு.ச.வினுடைய உறவு என்பது கொள்கை உறவு - அதனோடு சேர்ந்து குடும்ப உறவையும் நாம் இப்போது பெற்றிருக்கின்றோம்.

ரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்டது 

கொள்கை உறவு!

இது ஒரு நல்ல குடும்ப விழா. நம்முடைய குடும்பம் என்பது அது ரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்டு, இறுதி யாக, உறுதியாக இருக்கிற கொள்கை உறவு சிறப்போடு நடைபெறுகின்ற குடும்ப விழா.

அப்படிப்பட்ட இந்தக் குடும்பத்தில்தான் நல்ல பெயர் மணமகனுக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது மணவிழாக்களுக்குச் சென்றால், அங்கே தமிழ்ப் பெயர்களைத் துருவித் துருவி தேடவேண்டி இருக்கிறது.

சுயமரியாதை இயக்கம் எப்படி வளர்ந்தது  என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய சி.பி.சின்னராஜாவாக வேலூரில் இருந்தவர்தான் சி.பி.சிற்றரசு. தாளமுத்து நடராசன் கட்டடம் என்று பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்குப் பெயர் வைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அதேபோன்று உரிய வகையில், அன்னை மணியம் மையார் அவர்கள் பெயரையும், சி.பி.சிற்றரசு பெயரை யும் உரிய இடங்களுக்குச் சூட்டினார்.

நம்முடைய திருநாவுக்கரசு அவர்களும் அதே உணர்வோடு தன்னுடைய மகனுக்கு சிற்றரசு என்று பெயர் வைத்திருக்கிறார். தமிழ்ப் பெயர்களை, இந்த இயக்கத்திற்குப் பாடுபட்டவர்களின் பெயர்களை நம்மு டைய இயக்கத் தோழர்கள் மகிழ்ச்சியோடு வைத்தார்கள்.

நீங்கள் எந்த மாநிலத்திற்கு சிற்றரசு?

சி.பி.சிற்றரசு அவர்கள் துடிப்போடு, அந்தக் காலத்தில் எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்தவர்; சாதாரணமாக அல்ல, எதிர்நீச்சல் அடித்தவர். மேடையில் உரையாற்றும் பொழுது, கேள்விகள் குறுக்கே வந்து விழும்;  கலவரம் செய்வார்கள். ஒருமுறை மேடையில் சிற்றரசு உரை யாற்றிக் கொண்டிருந்தபொழுது, ஒருவர் எழுந்து ‘‘சிற்றரசு, சிற்றரசு என்று சொல்கிறீர்களே, நீங்கள் எந்த மாநிலத்திற்குச் சிற்றரசு?'' என்று ஆவேசமாகக் கேள்வி கேட்டார்.

மணமகன் சிற்றரசு அவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம் - தெரிந்திருந்தால் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி!

சுயமரியாதை இயக்கத்தில் தந்தை பெரியார் அவர் களானாலும், அண்ணா அவர்களானாலும், கலைஞர் அவர்களானாலும், இந்த இயக்கத்தில் பெரியார் கொள்கையால் வளர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், தர்க்கமும், குதர்க்கமும் ஒருசேர வந்தாலும், அதனைத் தோற்க வைக்கக்கூடிய அளவிற்கு அவர்கள் பக்குவப் பட்டவர்கள்.

அப்படிப்பட்ட நேரத்தில், உடனடியாக பதில் சொன் னார் சிற்றரசு, ‘‘உங்கள் சக்கரவர்த்தி இராஜகோபாலாச் சாரியார் போன்று; நானும் சிற்றரசு'' என்று.

ஏனென்றால், இராஜாஜி அவர்களின் பெயருக்கு முன்னால் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் என்று சொல்வார்கள்.

சக்கரவர்த்திகள் இருந்தால், சிற்றரசுகள் இருப்பார்கள் என்ற பொருளில் பளிச்சென்று பதிலளித்தார்.

ஒரு பெரிய ஆளுமையாக, அறப்போராயுதமாக, அரசியல் ஆயுதமாக எங்கள் முதலமைச்சர்!

அப்படியெல்லாம் பதிலளித்து வளர்ந்துதான் சுயமரியா தைத் திருமணமாக மலர்ந்த இந்தத் திருமண முறையின் அடிப்படையில், எளிமையான முறையில்,  ஆற்றல் வாய்ந்த ஆளுமையாக, இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஆளுமையாக, இன்னுங் கேட்டால், மோடி போன்றவர்கள் எல்லாம் அலறியடித்துக்கொண்டு, அவர்கள் மத்திய பிரதேசத்திற்குப் போனாலும், தி.மு.க.வைப் பற்றி பேசக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு ஒரு பெரிய ஆளுமையாக, அறப்போராயுதமாக, பேராயுதமாக, அரசியல் ஆயுதமாக இருக்கக்கூடிய எங்கள் முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இம் மணவிழா சிறப்பாக நடந்திருக்கிறது.

இதுவே ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு இப்படி நடந்திருக்குமா? இவ்வளவு மகிழ்ச்சியாக மணமக்கள் அமர்ந்திருப்பார்களா? புகையும், புகைச்சலும், கண் களைக் கசக்கிக் கொண்டு மணமக்கள் இருக்கக்கூடிய காட்சிகள்தான் இருந்திருக்கும். அப்படியில்லாமல் இன்றைக்கு எளிமையான முறையில் இவ்விழா நடக்கிறது.

இம்மணமுறையை புகுத்தியவர் அறிவாசான் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

இம்மணமுறைக்கு சட்ட வடிவம் இல்லாமல் இருந்தது; செல்லாது என்ற நிலை இருந்தது. ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே செய்த பணி, ‘‘தந்தை பெரியாருக்கு, இந்த அமைச் சரவையே காணிக்கை'' என்று அறிவித்தது மட்டுமல் லாமல், சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்டம் வடிவம் கொடுத்தார்.

இப்பொழுது சமூகமும் ஏற்றுக்கொண்டு விட்டது; சட்டமும் ஏற்றுக்கொண்டு விட்டது. உலகத்தில் உள்ள பற்பல நாடுகளில் ‘சுயமரியாதைத் திருமண முறை' வேகமாகப் பரவியிருக்கிறது. பல நாடுகளில் நாங்களே சென்று பல சுயமரியாதை மணவிழாக்களை நடத்தி வைத்திருக்கின்றோம். அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு - இங்கே மணமக்களாக இருக்கக்கூடிய அன்புச் செல் வங்கள் சிற்றரசு -  எழிலரசி ஆகியோருக்குக் கிடைத் துள்ளது. 

‘‘ஒருமனதாயினர் தோழி - திருமண மக்கள் நன்கு வாழி! என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.

எனவே, நீங்கள் உற்ற நண்பர்களாக வாழுங்கள்; சம உரிமை படைத்தவர்களாக வாழுங்கள். 

மொழி உரிமை, சம உரிமை, பகுத்தறிவுச் சிந்த னைகள், பெண்ணடிமை இல்லாத சமத்துவம் இவை அத்தனையும் இருப்பதுதான் சுயமரியாதைத் திருமணம்.

யாரும் அச்சப்படவேண்டிய அவசியமே இல்லை!

இம்மணமுறையில் திருமணம் செய்துகொண்ட வர்கள் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்; எனவே, யாரும் அச்சப்படவேண்டிய அவசியமே இல்லை.

அதேநேரத்தில், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை வையுங்கள்; அதுதான் மிக முக்கிய மானது.

தமிழன் இல்லத்து மணவிழா - தமிழ் மொழியில், தமிழ் முறையில் நடைபெறவேண்டும்!

எனவேதான், தமிழில் பெயர் வைக்கவேண்டும்; தமிழன் இல்லத்து மணவிழா, தமிழ் மொழியில், தமிழ் முறையில் நடைபெறவேண்டும்.

மணமக்களே நீங்கள் எல்லா வகையிலும் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து, எளிமை, பகுத்தறிவு, தன் னாற்றல், தமிழார்வத்தோடு வாழ்ந்து, எடுத்துக்காட்டாக வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

வாழ்க மணமக்கள்!

வாழ்க பெரியார்!

வளர்க திராவிடம்!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.


No comments:

Post a Comment