ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: பத்து வயதில் 27.6.1943இல் மேடையில் முதன்முதலாகப் பேசிய தாங்கள் 80 ஆண்டுகள் ஆன நிலையில், அதே கொள்கை உறுதியோடு 27.6.2023 அன்று அதுபோன்றதொரு மேடையில் பேசிய பொழுதில் எத்தகைய உணர்வைப் பெற்றீர்கள்?

- கி.இராமலிங்கம், செம்பியம்

பதில் 1: “இதற்கு முழு முதற் காரணமான எம் அறிவு ஆசான், அன்னையார் - இவர்கள் வைத்த நம்பிக்கைக்கு குந்தகம் வராது, அக்கொள்கையைக் காக்கும் லட்சியப் பயணத்தில், மேலும் ஈடுபாட்டுடன் கலந்து, பெரியாரை உலக மயமாக்க நம்மால் முடிந்ததை, “முடியும்வரை - என் வாழ்வு முடியும்வரை” செய்து மனநிறைவுடன் உச்சத்தில் இயக்கத்தை அமைக்கும் பணியை கழகத் தோழர்களின் ஒத்துழைப்போடு செய்ய முடியும்” என்கின்ற நம்பிக்கை உணர்வே என்னுள் மிகுந்தது!

எதையும் நான் விரும்பியதில்லை - காரணம், இதில் கிடைக்கும் மட்டற்ற மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது.

----

கேள்வி 2: கடன் அட்டை (கிரெடிட் கார்டு) வைத்திருப்பது நன்மையெனக் கருதுகிறீர்களா? தவறானது என்று கருதுகிறீர்களா?

- திவ்யபாரதி, அரும்பாக்கம்

பதில்: பயனுக்கு - அத்தியாவசியத் தேவையே! இந்தக் கணினி யுகத்தில் கடன் அட்டை தொழில்  செய்வோருக்கு அவசியம்; ஜம்பத்திற்காக வைத்திருப்பது தேவையற்றது. எனக்கு கடனும் இல்லை - அட்டையும் இல்லை. அதுபற்றி அதிகம் எனக்கு ஏதும் தெரியாது!

கேள்வி 3: ஒன்றியத்தை ஆளுகின்ற பா.ஜ.க. அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த மறுப்பது ஏன்? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள்மூலம் நெருக்குதல்கள் ஏன்?

- ச.அருட்செல்வன், பெண்ணாடம்

பதில்: ஆர்.எஸ்.எஸ். இலக்கு - கொள்கை - திட்டம் அதுதான். எனவேதான் இந்நிலை. இந்த விடையை விரித்துப் பார்த்தால் விளங்கும்.

----

கேள்வி 4: புதிதாக வாக்களிப்போரின் உரிமைகளை மதிக்கும் வண்ணம் 2024 மக்களவைக்கான பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு எந்திரங்கள் எவ்வித குறைபாடுகளோ, சந்தேகத்துக்கு இடமளிப்பதாகவோ இருக்கக் கூடாதல்லவா?

- க.ஆற்றலரசி, செஞ்சி

பதில்: உங்கள் ஆசை அது; நடைமுறை எப்படியோ - சட்டப்படி நீங்கள் சொன்ன கருத்துதான் இயக்கத்தவர்கள் கருத்து - நோக்கம்.

-----

கேள்வி 5: புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராசன், தனக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே இருக்கும் பிரச்சினை அண்ணன் - தங்கை பிரச்சினை என்கிறாரே?

- பா.முகிலன்,  சென்னை-14

பதில்: அண்ணன் - தங்கை இப்படி சண்டை போடுவார்களா - அண்ணன் பங்கை எந்த நல்ல தங்கையும் ‘அபேஸ்’ செய்ய நினைப்பாரா? தமிழிசையின் இந்த வசனம், விசனத்தைத் தருகிறது!

---- 

கேள்வி 6: அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கச் சொல்லி அ.தி.மு.க.வினர் சொல்வது ஏன்?

- லோ.விஜயலட்சுமி, வேலூர்

பதில்: ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு வந்தபோது இந்தக் கோரிக்கையை வைத்து அவர் மீது, நடவடிக்கை எடுக்க அவர்களில் எவராவது பேசியதுண்டா? இல்லையே! ஏன்? ஏன்?

----

கேள்வி 7: எதிர்க்கட்சித் தலைவர்களின் பாட்னா கூட்டம் எதிர்பார்த்த பலனைத் தருமா?

- பா.கண்மணி, தென்காசி

பதில்: பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜகவினரது நிலைதடுமாறிய பேச்சுகள், பாட்னா முதல் கூட்டமே பெரும் பூகம்பமாகி உள்ளது என்பதற்கு தக்கச் சான்று ஆகும்! வெறும் Photo Shoot - படம் எடுக்கும் காட்சிக்கா இத்தனை பேச்சும், இப்படி அலறல்களும்... புரியுமே!

------

கேள்வி 8: மணிப்பூர் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்காதது ஏன்?

- கே.கண்ணன், திருவண்ணாமலை

பதில்: மணிப்பூர் கலவரம், மக்களிடம் பா.ஜ.க.வுக்குள்ள மதிப்பு - பாசம் எவ்வளவு என்பதையும், நிருவாகத் திறமை இவர்களுக்கு உண்மையில் எவ்வளவு என்பதையும் காட்டும் அளவுகோல் ஆகும்.

------

கேள்வி 9: தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் உங்களைப் பார்க்கும்பொழுது உந்துதல் பெறுகிறார்களே, அதற்கு என்ன காரணம்?

- ப.ஆனந்த், மயிலாடுதுறை

பதில்: எனது குரல் பெரியார் குரல் - கொள்கைப் பேச்சு அவ்வளவுதான்!

------

கேள்வி 10: பைபிள், குரானை கேலி செய்து திரைப்படமெடுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதே?

- ந.நீலமேகம், சேலம்

பதில்: அலகாபாத் நீதிமன்றத்தின் நிறம் எப்படி? ஒவ்வொரு தீர்ப்பும் காவி நெடியுடன் எப்படி உள்ளது என்பதற்கு, இதுவும் ஒரு கூடுதல் சாட்சியமாகும்.


No comments:

Post a Comment