‘ஹிந்து மதம்' என்ற சனாதன வேத முறைப்படி உள்ள ஹிந்து சட்டத்தில் ‘ஒரே சீர்மை' எல்லா பிரிவினர்களுக்கும் உண்டா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 6, 2023

‘ஹிந்து மதம்' என்ற சனாதன வேத முறைப்படி உள்ள ஹிந்து சட்டத்தில் ‘ஒரே சீர்மை' எல்லா பிரிவினர்களுக்கும் உண்டா?

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள்கூட அ.தி.மு.க. போன்றவை எதிர்ப்பதை கவனத்தில் கொள்க!

பொது சிவில் சட்டம்: மறுபரிசீலனை செய்க!

ஹிந்து மதம் என்ற சனாதன வேத முறைப்படி உள்ள ஹிந்து சட்டத்தில் ஒரே சீர்மை எல்லா பிரிவினர்களுக்கும் உண்டா? பொது சிவில் சட்டத்தை நாடாளுமன்ற நிலைக் குழுவிலேயே தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் பல மாநில கட்சிகளும் எதிர்த்துள்ளன. பா.ஜ.க. கூட்டணி கட்சிகள்கூட அ.தி.மு.க. போன்றவை எதிர்ப்பதை கவனத்தில் கொள்ள வேண்டாமா? யோசித்து மறுபரி சீலனை செய்க என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அவசரக் கோலத்தை அள்ளித் தெளிக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி!

‘கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை' என்ற ஒரு கிராமப்புற பழமொழிக்கொப்ப, நாட்டில் மக்களை வாட்டக்கூடிய விலைவாசி உயர்வு, இளைஞர் களுக்கு வேலை கிட்டாத வேதனை, இல்லத்தரசிகளுக்கு எரிவாயு (கேஸ்) விலை உயர்வு, கிராமப்புற வேலை வாய்ப்புக்கான போதிய (100நாள் வேலைத் திட்டம்) நிதிக் குறைப்பு - மணிப்பூர் மாநிலத்தில் பற்றி எரியும் தீயை அணைக்க அதிதீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாது வாரக் கணக்கில் நீள்வதுபற்றி வாய் திறக்கவோ, ஆறுதல் கூறவோ செல்லாத உயர் ஆளுமை (பிரதமர்) - இப்படிப்பட்ட அவலங்களுக்கிடையே அவசர அவசர மாக நாட்டிற்கு ஒரே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி அவசரக் கோலத்தை அள்ளித் தெளிக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி!

இந்தப் பொது சிவில் சட்டம் அமலாக்குவதுபடி நாடு முழுவதும் ஒரே சீர்மையான (Uniform Civil Code) சட்டம் தேவை என்று வாதாடுகிறார் - சட்ட ஆணை யத்திற்குத் தாக்கீது (Direction) தருகிறார் பிரதமர் மோடி!

‘ஒரே ஜாதி என்று சட்டம் இயற்றுவீர்களா?' என்று நாம் கேட்கும் கேள்விக்குப் பதில் இல்லையே!

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் இப்படி எல்லா வற்றிற்கும் ‘ஒரே ஒரே' கோஷம் போடும் அவர்களைப் பார்த்து ‘ஒரே ஜாதி என்று சட்டம் இயற்றுவீர்களா?' என்று நாம் தொடர்ந்து எழுப்பி வரும் ‘ஒரே கேள்விக்கு' ஏனோ இன்னமும் பதில் கூறாமல், ‘ஒரே மவுனம்' நிலவுகிறது?

இந்த ‘சீர்மை' (Uniformity)  என்பது பன்மொழிகள், பல கலாச்சாரங்கள், பன் மதங்கள், பல் வகையான தட்பவெட்பங்கள் நிலவும் 140 கோடி மக்கள் வாழும் பரந்த நாட்டில், இது சாத்தியமா? விரும்பத்தக்கதா? ஏற்கத்தக்கதா? என்பதை நாட்டின் நல் அறிஞர்கள் அன்று முதல் இன்றுவரை கேள்வியாகக் கேட்டு, கூறும் அறிவுரை பா.ஜ.க.வின் ‘கேளாக் காதில் ஊதிய சங்காக' ஆகிவிட்ட பரிதாபம்தான் மிச்சம்!

அறிஞர் அண்ணா - பிரதமர் ஜவகர்லால் நேரு!

முன்பு மாநிலங்களவையில் பேசும்போது, அறிஞர் அண்ணா அருமையாக ஒரு கருத்தை முன்வைத்தார்,‘Unity is different from Uniformity' ‘நாட்டின் ஒற்றுமை என்பது வேறு; நாட்டின் ஒரே சீர்மை என்பது வேறு' என்று!

அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு பலமுறை இதுபற்றிக் கூறும்போது, ‘Unity in diversity'  ‘பன்முகத் தன்மையில் ஒற்றுமை' என்ற தேவையான - மறுக்க முடியாத கருத்தியலை முன்வைத்தார்!

அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இப்போது 

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி - பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆட்சி இதில் அவசரம் காட்டுவது ஏன்?

மூன்று தேர்தல் வாக்குறுதி 

(1) காஷ்மீர் தனி அந்தஸ்து 370 சட்டம் நீக்குதல்

(2) இராமன் கோவில் கட்டுதல்

(3) பொது சிவில் சட்டம் 

என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி, ஹிந்தி மாநில வடபுலத்துத் தேர்தல்களில் வாக்கு அறுவடை செய்யவா? அல்லது கொழுந்துவிட்டு எரியும் பல்வேறு மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளைத் திசை திருப்பவா?

எதிர்ப்புக்குரல் பா.ஜ.க. கட்சியில்கூட கிளம்பியுள்ளதால்...

நாடு முழுவதும் ஒரே சட்டம் என்று கூறும்போது, தொடக்கத்திலேயே அது செய்ய முடியாத ஒன்று - நடைமுறை சாத்தியமற்றது என்று ஒப்புக்கொள்வதைப் போல, பழங்குடி மக்கள், வட கிழக்குப் பகுதி மற்ற பகுதி மக்களின் எதிர்ப்புக்குரல் பா.ஜ.க. கட்சியில்கூட கிளம்பியுள்ளதால், அவர்களுக்கு இது பொருந்தாது என்று கூறுவதே, இதன் முக்கிய வாதத்தை முதலிலேயே முறியடித்துவிட்டதே, இல்லையா?

எந்த ஒரு சட்டமும் சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு எதிராக என்ற உள்நோக்கத்தோடு கொண்டு வந்து நிறைவேற்றிடத்தான் துடியாய்த் துடிக்கிறது பா.ஜ.க. என் பதை விவரம் அறிந்த அத்துணை பேரும் அறிவார்கள்.

நோபல் பரிசாளரான அமர்த்தியாசென்

நோபல் பரிசாளரான அமர்த்தியாசென் இதுபற்றி ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், ‘‘இது ஹிந்துராஷ் ராவுடன் முடிச்சுப் போட்டு இணைக்கப்படுகிற முயற்சிக்கான முன்னோடித் திட்டம்'' என்று தெளிவாகப் பதில் அளித்துள்ளார்!

சட்டக் கமிஷனின் பரிந்துரை இது என்று ஒரு வாதம் கூறப்படுமேயானால், அது ஏற்கத்தகுந்ததா?

விளக்கம் தர ஒன்றிய அரசோ, பிரதமரோ முன்வந்துள்ளார்களா?

இதற்கு முந்தைய 21 ஆவது (2018) சட்டக் கமிஷன், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சவுகான் தலைமை யில், பொது அரசமைப்புச் சட்டம் நிறைவேற்ற தேவையில்லை என்று அழுத்தந் திருத்தமான கருத்தை பரிந்துரைத்துள்ளது. அடுத்து வந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, அதை நிறைவேற்றவேண்டும் என்று கூறுகிறார் என்றால், இடைவெளியிலான சில ஆண்டுகளில், நாட்டின் நிலைகளில் ஏதாவது தலைகீழ் புரட்சி, பூகம்பம் ஏற்பட்டுவிட்டதா? என்ற கேள்வி பல வட்டாரங்களிலிருந்து கிளம்பியுள்ளதே அதற்குரிய விளக்கம் தர ஒன்றிய அரசோ, பிரதமரோ முன் வந்துள்ளார்களா?

பல பா.ஜ.க. முதலமைச்சர்கள், கட்சியினர் கூட (வடகிழக்கு மற்றும் பழங்குடியின ஆதரவாளர்கள் கூறுவதால்) விதிவிலக்கு தருவதற்கு ஒப்புதல் உள்ளதால், இது ‘ஒரே சட்டம்' ஆக முடியுமா?

ஹிந்து சட்டத்தில் ஒரே சீர்மை 

எல்லா பிரிவினர்களுக்கும் உண்டா?

ஹிந்து மதம் என்ற சனாதன வேத முறைப்படி உள்ள ஹிந்து சட்டத்தில் ஒரே சீர்மை எல்லா பிரிவினர்களுக்கும் உண்டா?

அதில் உள்ள ‘சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கொரு நீதி - சாத்திரம் சொல்லிடு மாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்' என்று பாடிய பார்ப்பன பாரதியின் கருத்துப்படி, ‘ஹிந்துலா'வின் பல ஜாதி, பல கோத்திர, திருமண சடங்கு சம்பிரதாய, சொத்துப் பிரிவினைகளை அகற்றி அனைத்து மதம், அனைத்து ஜாதி, அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் (Uniform Criminal Law) என்று சீர்மையான மெக்காலே செய்த ஒரே கிரிமினல் குற்றச்சட்டம்போல் இதனைச் செய்வோம் என்று கூற முன்வருவார்களா? என்கிற கேள்விக்குப் பதில் அளிக்கட்டும்; பிறகு பொதுசிவில் சட்ட அமல்பற்றிப் பேசட்டும்!

மறுபரிசீலனை செய்க!

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள்கூட அ.தி.மு.க. போன் றவை எதிர்ப்பதை கவனத்தில் கொள்ள வேண்டாமா? யோசித்து மறுபரிசீலனை செய்க!

நாடாளுமன்ற நிலைக் குழுவிலேயே தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும்  பல மாநில கட்சிகளும் எதிர்த்துள்ளன என்பதும் சுட்டிக்காட்டத் தகுந்தது.

எனவே, இதை கைவிடுங்கள்; இன்றேல் கடும் விலையை வரும் 2024 இல் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. தரவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிடும்.!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

6.7.2023


No comments:

Post a Comment