டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமா? மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமா? மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம்

உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பதில்

சென்னை, ஜூலை 4- விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் முறையிடும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி மாநகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்கு அப்பாலும்; மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு அப்பாலும் மட்டுமே மதுபானக் கடைகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய மது பான கடைகளை மூடாமல், விதிகளுக்கு உட்பட்டு செயல் படும் மதுபானக் கடைகளை தமிழ்நாடு அரசு மூடி வருகிறது. விதி மீறல் கடைகளை தொடர்ந்து அனுமதிப்பது என்பது சட்ட விரோதமானது.

எனவே, சட்டவிரோதமாக செயல்படும் மதுபானக் கடைகளை முதலில் மூட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். சட்டத்தில் வழிவகை: இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (3.7.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுதரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘விதிகளை மீறி செயல்படும் மதுபானக் கடைகளை மூடக் கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் முறையிடும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது’’ என்றார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment