நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

நூல் அரங்கம்

பொ.நாகராஜன் 

பெரியாரிய ஆய்வாளர்

நூல்: “டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 

வாழ்க்கை வரலாறு”

ஆசிரியர்: தனஞ்சய் கீர்  

- தமிழில் க.முகிலன் 

வெளியீடு: மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி

முதல் பதிப்பு 1992

பக்கங்கள் 896

விலை: ரூ 950/-

மராட்டிய அறிஞர் தனஞ்சய் கீர் எழுதிய அம்பேத்கரின் வரலாறு அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலேயே 1954இல் ஆங்கிலத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.

அம்பேத்கர் மறைவுக்குப் பின்னர் மேலும் பல பகுதிகளை இணைத்து 1971ஆம் ஆண்டு புதிய வெளியீடாக வந்தது!

அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த வரலாற்று நூலை தமிழ் வாசகர்களுக்காக மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி க. முகிலன் அவர்களின் தமிழாக்கத்தில் மிக நேர்த்தியான நூலாக 1992இல் வெளியிட்டது!

புரட்சியாளர் அம்பேத்கரின் அதிகாரபூர்வமான வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள இந்த நூல் தான் முதல் தேர்வாக அமைந்துள்ளது. இந்த நூலை முழுவதும் படித்தறிந்தால் அம்பேத்கரின் வரலாற்றை மட்டுமல்ல இந்தியாவின் வரலாற்றையும் ஒரு சேர அறிந்து கொள்ளலாம்! 

அம்பேத்கரின் புரட்சிகரமான வரலாற்று நிகழ்வுகளிலிருந்து வாசகர்கள் தங்கள் நினைவில் நிறுத்திக் கொள்வதற்காக சில முக்கியமான தகவல்களை இந்த நூல் அறிமுகவுரையில் வழங்குகின்றேன் :

மகாராட்டிராவில் இந்து தாழ்த்தப்பட்ட ஜாதி ( மகார் ) பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பதினான்காவது குழந்தையாக ஏப்ரல் 14ஆம் தேதி 1891ஆம் ஆண்டு பிறந்து, இந்திய அரசமைப்பு சட்டத்தை எழுதுகின்ற வல்லமை பெற்று,  இந்திய அரசியலில் ஒரு மாபெரும் புரட்சியாளராக விளங்கியவர் தான் - பீம் ராவ் அம்பேத்கர் !

அவர் படித்த உயர் நிலைப் பள்ளியின் பார்ப்பன ஆசிரியர் தனது குடும்ப பெயரான ‘ அம்பேத்கர் ‘ என்பதை பீமராவ் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததால், அவருடைய  குடும்ப பெயரான ‘ அம்பவடே ‘ என்பதை மாற்றி தனது குடும்ப பெயரான ‘ அம்பேத்கர் ‘ என்று பள்ளி பதிவேடுகளில் மாற்றினார் ! அன்றிலிருந்து அவர் பீம் ராவ் அம்பேத்கர் ஆனார் ! 

அம்பேத்கர் தீண்டப்படாத ஜாதியை சேர்ந்தவர் என்ற காரணத்தால் பள்ளிகளிலும், பொது இடங்களிலும், கல்லூரிகளிலும் பட்ட அவமானங்களும் இன்னல்களும் ஏராளம். அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு தன்னை ஒரு சிறந்த கல்வியாளராக கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி  உச்சத்தை அடைந்தார் !

மேற்படிப்புக்காக அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு பயின்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்றார் ! புத்தகங்களை மிகவும் நேசித்தார் ! புத்தகங்களை மணிக்கணக்கில் வாசித்தார் ! பின்பு இங்கிலாந்துக்கு சென்றார். வாழ்நாள் முழுவதும் படிப்பதையே பேரின்பமாக கொண்டிருந்தார் . பம்பாய்க்கு திரும்பி வந்த பின் கல்லூரியில் பேராசிரியர் ஆனார் !

தான் எவ்வளவு பெரிய படிப்பை படித்து முடித்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தன்னை ஒரு தீண்டப்படாதவனாகவே இந்த சமுதாயம் நடத்துவதை நன்கு உணர்ந்தார். தீண்டப்படாத  மக்களின் உரிமைகளைப் பேச ஆரம்பித்தார். 

இதே வேளையில் தான் 1925இல் வைக்கத்தில் நடைபெற்ற, பெரியார் தீவிரமாக பங்கேற்ற - தெருக்களில் தீண்டப்படாதவர்கள் நடப்பதற்கான உரிமைப் போராட்டம் வெற்றிகரமாக நடந்ததை அறிந்தார் ! அதன்  விளைவாக அம்பேத்கருக்கு ஒரு புதிய உத்வேகம் பிறந்தது !

மகாராட்டிராவில் கொலாபா மாவட்டத்தில் மகத் என்ற ஊரில், 1927 மார்ச் 19, 20 தேதிகளில் நடைபெற்ற தீண்டப்படாத மக்கள் மாநாட்டை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தார். இறுதி நாள் நிகழ்வாக, மகத்திலுள்ள தீண்டப்படாத மக்களை அனுமதிக்காத - சவுதார் குளத்திற்கு மாநாட்டில் கலந்து கொண்ட மக்களை ஊர்வலமாக திரட்டி சென்றார்! 

அம்பேத்கர் சவுதார் குளத்தில் இறங்கி தண்ணீரை எடுத்துப் பருகினார்! ஜெய் பீம் என்ற முழக்கம் எங்கும் பரவியது! அன்று முதலாக, பெரியாரின் வைக்கம் போராட்டம் போல அம்பேத்கரின் மகத் போராட்டமும் வரலாற்றில் பொறிக்கப்பட்டது!

அம்பேத்கர் தனது தீண்டப்படாத மக்களிடையே ஆவேசமாக உரையாற்றினார் . 

“பணிவாக வேண்டுதல் மூலமாகவோ, உரிமைகளைப் பறித்தவர்களின் மனம் நெகிழ வேண்டும் எனக் கோருவதாலோ நாம் இழந்த உரிமைகளை என்றும் பெற முடியாது. இடையறாத போராட்டங்களின் மூலம் தான் உரிமைகளைப் பெற முடியும்! 

ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள்! சிங்கங்களை அல்ல!" ...என கர்ஜித்தார்!

அம்பேத்கர் பார்ப்பனர்களை கடுமையாக சாடினார்! 

“வேதங்களைப் படிக்கும் அல்லது பக்கத்தில் நின்று கேட்கும் சூத்திரர்களின் காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்ற வேண்டும் என்று மனுநீதி சொல்கிறது! அந்த மனுநீதியை கொளுத்த வேண்டும்!" என்று ஆத்திரமுடன் பேசினார். அதன்படியே டிசம்பர் 25ஆம் தேதி 1927ஆம் ஆண்டு மகத்தில் மனுநீதியைக் கொளுத்தினார்!

தீண்டப்படாத மக்களின் இழிவை ஜாதி இந்துக்கள் நீக்காவிட்டால் இந்து மதத்தை விட்டு விலகி வேறொரு மதத்தில் சேர வேண்டியிருக்கும் என மே 29 - 1929இல் எச்சரிக்கை விடுத்தார்! 

மத மாற்றம் பற்றி அம்பேத்கர் தன் நிலைப்பாட்டை 13.10.1935 அன்று இவ்வாறு மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தினார்,

“என் போதாத காலம் நான் இந்துத் தீண்டப்படாதவனாக பிறந்து விட்டேன்! ஆனால் இந்து மதத்தின் மரியாதைக் கெட்ட, இழிவு படுத்தும் சூழ்நிலையின் கீழ் நான் வாழ மறுப்பது என்பது என் சக்திக்கு உட்பட்டதே ஆகும். ஆகவே நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் என்று உங்களிடம் உறுதி கூறுகின்றேன்!" 

அம்பேத்கரின் புகழ் பெற்ற வழிகாட்டு முழக்கம் -  நாக்பூரில் ஜூலை 18ஆம் நாள் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய தீண்டப்படாத மாநாட்டின் சிறப்புரையின் போது அம்பேத்கரால் முழங்கப்பட்டது . அவை :

கற்பி! போராடு! ஒன்றுசேர்!

இன்று ஹிந்துத்துவா சக்திகள் கீதையை தலைக்கு மேல் வைத்து கொண்டாடுவதின் காரணம் அறிய வேண்டுமா ? 

அம்பேத்கர் சொன்னதைக் கேளுங்கள்: “வேதங்களின் கருத்துக்களை தூக்கிப் பிடிப்பதையும், பார்ப்பனியத்தை உச்ச நிலைக்கு உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட அரசியல் நூல் தான் - கீதை!" ...இதை விட தெளிவான விளக்கம் தேவையா? 

சுதந்திர இந்தியாவில் 1947இல் நேருவின் அமைச்சரவையில் இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சராக பணியாற்றினார். புதிதாக பிறந்த இந்தியாவுக்கான அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவரானார்! 

இந்து சட்ட திருத்த மசோதா காரணமாக அமைச்சர் பதவியி லிருந்து விலகினார். 1952இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் அம்பேத்கர் தோல்வியுற்றார். பின்பு அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெற தொடர்ந்து போராடினார்! 

பிறவி இழிவாம் தீண்டப்படாத ஜாதி என்ற சகதியிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதே சரியான தீர்வு என முடிவெடுத்தார். நாக்பூரில் அக்டோபர் 14ஆம் நாள் 1956ஆம் ஆண்டு, மூன்று லட்சம் தொண்டர்களுடன் புத்த மதத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்! 

தான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றினார் ! 

பல ஆண்டுகளாக அவரது உடல் நலன் குறைய ஆரம்பித்தது. அதை உணர்ந்து கொண்டதால் மத மாற்றம் செய்து கொள்வதில் குறியாக இருந்து நிறைவேற்றினார். அவரது இறுதிக் காலம் நெருங்கியது. டில்லியிலிருந்த அவரது இல்லத்தில் டிசம்பர் 6ஆம் நாள் 1956ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்! புரட்சி தீபம் அணைந்தது! 

புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் பங்கெடுப்புகள், பூனா ஒப்பந்தம், வட்ட மேசை மாநாடுகள், பாகிஸ்தான் பிரிவினை பற்றி, காந்தியாருடன் உறவு, அரசமைப்பு சட்ட குழு விவாதங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள அவரது முழு வாழ்க்கை வரலாற்றையும் படித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது . 

அம்பேத்கரின் வாழ்க்கைப் போராட்டத்தையும், போராட்ட வாழ்க்கையையும் முழுவதுமாக படிக்க இயலாதவர்களுக்கு இந்த அறிமுகவுரை ஒரு சிறிய உதவியாக அமையும் எனக் கருதியே இந்தப் பதிவு!

No comments:

Post a Comment