ஆளுநர் பதவியும் - ஆர்.என்.இரவியின் மக்கள் விரோதச் செயல்களும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

ஆளுநர் பதவியும் - ஆர்.என்.இரவியின் மக்கள் விரோதச் செயல்களும்

பேராசிரியர் மு.நாகநாதன்

இந்த அரசியல் நிகழ்வுகளை அறிஞர் காரல் மார்க்சு, “மொகலாயர்களின் பேரதிகாரம், மொகலாயப் போர்ப்படைத் தளபதிகளால் உடைக்கப்பட்டது. மொகலாயப் படைத்தலைவர்களின் செல்வாக்கு மராட்டியர்களால் உடைக்கப்பட்டது. மராட்டியர்களின் அரசியல் அதிகாரம் ஆப்கன் நாட்டினரால் உடைக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்த எல்லோரும் ஒருவருக்கொருவர் போராடிக் கொண்டிருக்கும்போது பிரித்தானியர்கள் இந்தியப் பகுதிகளில் நுழைந்து அவர்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர்” என்று அழகுறக் குறிப்பிட்டுள்ளார்.

போர்த்துக்கீசிய, டச்சு, பிரித்தானிய, பிரெஞ்சு கிழக்கிந்தியக் குழுமங்கள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தில் வணிகம் செய்யத் தொடங்கின. இந்தக் குழுமங்கள் இன்றைய இந்தியப் பகுதிகளில் வணிகம் மேற்கொள்ளும் போது இந்தியாவினுடைய நெசவாளர்கள் உற்பத்தி செய்த கைத்தறித்துணிகள், கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் அய்ரோப்பியச் சந்தைகளில், அய்ரோப்பியப் பொருட்களுக்கு இணையாகப் போட்டியிட்டன. இந்தக் கிழக்கிந்தியக் குழுமங்கள்; தலைமை ஆளுநர் (Governor-General) ஆளுநர் (Governor) என்ற பதவிகளை உருவாக்கி மெல்லமெல்ல இந்திய ஆட்சியியலிலும் ஊடுருவத் தொடங்கின. இந்தக் கிழக்கிந்தியக் குழுமங்கள் தங்கள் வணிக நிறுவனங்களை மேலாண்மை செய்வதற்காக ஆளுநர்களை நியமித்தனர். ஆனால், காலப்போக்கில் பிரித்தானிய அரசு மற்ற கிழக்கிந்தியக் குழுமங்களின் செல்வாக்கினைக் குறைத்து தங்களின் மேலாதிக்கத்தை இந்தியாவின் பல பகுதிகளில் நிறுவியது. சான்றாக, கொல்கத்தா, சென்னை; மும்பை, சூரத் போன்ற நகரங்களில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் குழுமங்கள் அரசியலையும், அரசு அதிகாரத்தையும் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தன.

இந்த அரசியல் நிகழ்வுகளை அறிஞர் காரல் மார்க்சு, “மொகலாயர்களின் பேரதிகாரம், மொகலாயப் போர்ப்படைத் தளபதிகளால் உடைக்கப்பட்டது. படைத்தலைவர்களின் செல்வாக்கு மராட்டியர்களால் உடைக்கப்பட்டது. மராட்டியர்களின் அரசியல் அதிகாரம் ஆப்கன் நாட்டினரால் உடைக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்த எல்லோரும் ஒருவருக்கொருவர் போராடிக் கொண்டிருக்கும் போது பிரித்தானியர்கள் இந்தியப் பகுதிகளில் நுழைந்து அவர்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர்” என்று அழகுறக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியக் கிழக்கிந்தியக் குழும ஆட்சியில் பல தலைமை ஆளுநர்களும், ஆளுநர்களும் இந்தியப் பகுதிகளில் அடித்த வணிகக் கொள்ளையின் ஒரு பங்கை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று பெரும் சொத்துகளை வாங்கிக் குவித்தனர். சொத்துடையவர்கள்தான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட முடியும் என்ற நிலை இருந்த காலத்தில், பலர் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாறினர். வங்கத்தின் முதல் கவர்னராக இருந்த இராபர்ட் கிளைவ் மீதும், பின்பு தலைமை ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்சு ஆகியோர் மீதும் இங்கிலாந்து அரசு விசாரணையை நடத்தியது. இராபர்ட் கிளைவ் தனது கத்தியால் கழுத்தைக் அறுத்துக் கொண்டு தனது 49ஆம் வயதில் மரணமடைந்தார். வாரன் ஹேஸ்டிங்க விசாரணையின் போது 1789ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் புகழ் பெற்ற அறிஞர் எட்மன்ட் பெர்க் - ஹேஸ்டிங்சுக்குத் தண்டனைக் கொடுக்க வேண்டும். என்று வாதிட்டார். எட்மன்ட் பெர்க்கின் நாடாளுமன்ற உரையில், ”மிகத் தவறான குற்றச் செயல்களையும், நடவடிக்கைகளையும் வாரன் ஹேஸ்டிங்சு செய்துள்ளார் என்று குற்றம் சுமத்துகிறேன். நாடாளுமன்றம் அவர் மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்ததாகக் குற்றம் சுமத்துகிறேன். நாட்டின் மதிப்பைக் களங்கப்படுத்தியதற்காக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைவரின் சார்பாக அவர் மீது குற்றம் சுமத்துகிறேன். இந்திய மக்களின் சுதந்திரம், உரிமைகள், சட்டங்களைப் பாழாக்கியதற்காகவும் அவர்களுடைய சொத்துக்களை அழித்ததற்காகவும், வீணாக்கியதற்காகவும், இந்திய மக்களின் சார்பில் அவர் மீது குற்றம் சுமத்துகிறேன். நிலைத்து நிற்கின்ற நீதி சட்ட நெறிகளை மீறியதற்காக அவர் மீது குற்றம் சுமத்துகிறேன். எல்லாத் தன்மைகளிலும் மிகமிக கொடுஞ்செயல்களை நிறைவேற்றி, வடுக்களை ஏற்படுத்தி அடக்குமுறைகளை ஏவி, மக்களைத் துன்புறுத்தியதற்காக மானுட நீதியின் பெயரால் அவர் மீது குற்றம் சுமத்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.

தலைமை ஆளுநர்களும், ஆளுநர்களும் எவ்வித தீய செயல்களின் வடிவமாகச் செயல்பட்டார்கள் என்பதற்கு இந்திய வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. சான்றாக, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1755ஆம் ஆண்டு பிகாட் (Pigot) ஆளுநராகப் பொறுப்பேற்றார். அக்காலக் கட்டத்தில் பிரெஞ்சுப் படை கோட்டையைக் கைப்பற்ற போரிட்ட போது அதைத் தடுத்து நிறுத்தியவர் பிகாட். கிழக்கிந்தியக் குழுமத்தின் பல இலட்சம் கோடி ரூபாய் பணத்தை ஊழல் செய்து இங்கிலாந்தில் சொத்துகள் வாங்கினார். இதன் தொடர்பாகச் சென்னையில் கிழக்கிந்தியக் குழும உறுப்பினர்கள் விசாரணை நடத்தி பிகாட்டைக் கைது செய்து கோட்டையில் சிறைபிடித்தனர். தண்டனைக்கு எதிராக பிகாட் இங்கிலாந்து நாட்டில் மேல் முறையீடு செய்தார். இவருக்கு விடுதலை வழங்கிய செய்தி வரும் முன்பே சென்னையில் மரணமடைந்தார். இத்தகைய பின்னணிகளைக் கொண்ட ஆளுநர் பதவியை இந்தியா விடுதலைப் பெற்ற பிறகும் தொடர்வது இந்திய விடுதலைப் போராளிகளையும், விடுதலை உணர்வையும் கேவலப்படுத்துவதாகும். தலைமை ஆளுநர் பதவியை மட்டும் 1950 அரசமைப்புச் சட்டம் நீக்கி, குடியரசுத் தலைவர் என்று அறிவித்தது. ஆனால் ஆளுநர் பதவி மட்டும். இன்றளவும் தொடர்கிறது.

உயர் ஆய்வுகளின் தளமாக, அறிவின் உச்சமாக விளங்கும் பல்கலைக் கழகங்களின் தலைவராக ஆளுநர் வேந்தர் என்ற பெயரில் தொடர்வது குடியரசு அரசியல் நெறிகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான போது, 1935இல் பிரித்தானிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் அப்படியே இணைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்திய அரசமைப்புச் சட்ட அறிஞர் ‘ஏ.ஜி. நூரானி அவர்கள் “அரசமைப்புச் சட்டமும், குடிமக்களின் உரிமையும்” (Constitutional Questions and Citizens Rights by A.G.Noorani, Oxford Press) என்ற நூலில் ஆளுநரைப் பற்றிப் பல அரிய கருத்துகளை விளக்கியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரங்களைப் போன்றுதான் மாநில ஆளுநர்களுக்கும் சட்டப்படி உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நடைமுறையில் தேசியக் கட்சிகள் ஆளுநரை நியமனம் செய்வதிலும், நீக்குவதிலும் அருவருக்கத்தக்க நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றன என்பதற்கு இந்தியாவில் நடந்துள்ள ஆளுநர் தொடர்பான சர்ச்சைகள் மெய்ப்பித்து வருகின்றன. நீதிநாயகம் சந்துரு, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து நாளேட்டில் எழுதிய ஒரு கட்டுரையில் “எந்தவிதத் தகுதியும் கோரப்படாத ஒரே பதவி மாநில ஆளுநர் பதவிதான் என்று குறிப்பிட்டுள்ளார். 35 வயதிற்கு மேற்பட்ட எல்லா குடிமக்களும் ஆளுநர் பதவிக்குத் தகுதி பெறுகிறார்கள். 120 கோடி மக்கள் தொகையில் 70 கோடி, பேர் அந்தப் பதவிக்குத் தகுதியானவர்களே என்றும் சுட்டியுள்ளார். பேருந்து, மகிழுந்து ஓட்டுநர்களை, அரசு தேர்வு செய்யும் போது ஓட்டுநர் உரிமச் சான்று, கல்வித்தகுதி, நல்ல உடல்நலம் உள்ளவர் என்ற மருத்துவச் சான்றிதழ் போன்றவற்றை ஆய்வு செய்த பிறகுதான் பணியமர்த்துகிறது. ஆனால், ஆளுநர் பதவிக்கு மட்டும் எவ்விதத தகுதியும் தேவையில்லை என்பது ஆளுநர் பதவியை இழிவுபடுத்தும் செயலல்லவா?” இத்தகைய அறிஞர்களின் கருத்துகள் இன்று ஆளுநராக உள்ள ஆர்.என்.இரவியின் செயல்களால் மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

ஆளுநர் இரவி தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு நாகாலாந்து மாநில ஆளுநராக பாஜக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். நாகாலாந்து மாநிலத்தில் பிரிவினைக் கோருகின்ற நாகாலிம் அமைப்பு தனி இராணுவப் படையோடு செயல்பட்டு வருகிறது. இந்திய ஒற்றுமைக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது.

அசாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, சிக்கிம் ஆகிய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் சீனா, பர்மா, பங்களா தேசம், பூட்டான் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளன. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த மாநில மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி ஒன்றிய அரசு பல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வடகிழக்கு மாநிலங்களுக்கிடையே பல உள்நாட்டு எல்லைப் பிரச்சினைகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. இச்சூழலில்தான் 2004இல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஒன்றிய அரசும், அதற்குப் பிறகு பிரதமரான நரேந்திர மோடியின் காலக்கட்டத்திலும் தொடர்ந்து நாகாலாந்து பிரிவினைக் கோரும் கட்சிகளோடு உடன்பாடு காணப் பல நிபுணர்களை அமைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சூழலில், 2019இல் ஆளுநராகப் பதவியேற்ற ஆர்.என்.இரவி, நாகாலாந்திலும் முரண்பாடான பல கருத்து வேறுபாடுகளை உருவாக்கும் உரைகளை நிகழ்த்தினார். வரலாற்று ரீதியில் பல தவறான கருத்துகளை முன்மொழிந்தார்.

நாகாலாந்து மாநில மக்களைப் பிரிக்கும் நோக்கத்தில் இரவியின் பேச்சுகள் அமைந்ததை நாகாலாந்து மாணவர் அமைப்பு  (Che naga Students’ FederatiHn (NSF) கடுமையான முறையில் நாவடக்கம் இல்லாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகிறார் இரவி என்ற விமர்சனத்தை எழுத்துப்பூர்வமாக அளித்தது. நாகா அமைதி உடன்பாடு தொடர்பான செயல்களில் இருந்து இரவி நீக்கப்பட வேண்டும். மேலும், நாகாலாந்து அமைதிப் பேச்சினைச் சீர்குலைக்கிறார் இரவி என்ற குற்றச்சாட்டையும் வைத்தது. இதன் காரணமாக, இரவி தமிழ்நாட்டின் ஆளுநராக 2021 செப்டம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டிற்கு வந்த பிறகும் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவே இல்லை ஆளுநர் இரவி. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழ்நாட்டு அரசைக் கலந்தாலோசிக்காமல் சங் பரிவார ஆதரவாளர்களை நியமனம் செய்து வருகிறார். சான்றாக, திருவள்ளுவர் பல்கலைக்கழக நியமனம். துணைவேந்தராக 2022இல் செய்யப்பட்டவர் கிள்ளிக்குளம் தோட்டக்கலைக் கல்லூரி முதல்வராக இருந்தவர். ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு வலியுறுத்துகிற கல்வித் தகுதிகளைப் பெற்ற பல பேராசிரியர்கள் துணைவேந்தர் பட்டியலில் இடம் பெற்று இருந்தும், தன்னிச்சையாக அவரை ஆளுநர் நியமித்தார்.

இராஜிவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 32 ஆண்டுகள் சிறையிலிருந்த பேரறிவாளன். ஆளுநர் இரவியின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம், சட்டத்திற்கு மேல் எந்த ஒரு தனி மனிதரும் கிடையாது. ஆளுநர் கூட்டாட்சி இயலுக்கு எதிராக மாநில அமைச்சரவை அளித்த பரிந்துரையை மீறிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது அவர் அரசமைப்புச் சட்டத்தின் 161 பிரிவைப் பின்பற்றாமல் செயல்பட்டார் என்று. கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பிறகும் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 21 சட்ட முன்வரைவுகளைக் கையொப்பமிடாமல் நிறுத்தி வைத்தார்.

தமிழ்நாட்டுச் சட்டமன்றம் நிறைவேற்றிய மருத்துவ நுழைவுத் தேர்வு நீக்கச் சட்ட முன்வரைவை, ஆளுநர் இரவி ஒன்றிய அரசிற்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தித் தமிழ்நாட்டு அரசிற்குத் திருப்பி அனுப்பினார். சனாதனம் தான் அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டி என்று கூறினார். ஜனசங்கத்தைச் சேர்ந்த தீனதயாள் உபாத்யாவை மறந்து காரல் மார்க்சு, ரூசோ, ஆப்ரகாம் லிங்கன் ஆகியோரைக் காலனி ஆதிக்கச் சிந்தனையில் வந்த அறிஞர்கள் போற்றுகிறார்கள் ‘என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியினரும் இக்கருத்திற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்நிகழ்வுகளுக்குப் பிறகும் தமிழ்நாட்டு அரசால் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமலே தனது அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருப்பதனால் அச்சட்ட முன்வரைவுகள் இறந்து விட்டதாகப் பொருள் கொள்ள வேண்டும். என்று கூறினார். இவர் ஆளுநர் இரவியா? ஆர். எஸ்.எஸ்.இரவியா’ என்ற வினா எழுகிறது. 

2023 ஆண்டு பேரவைக்கூட்டத்தில் தனது உரையை வாசிக்கும் போது, ஆளுநர் தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, சட்டமன்ற கூட்ட நாளன்று உரை வடிவை மாற்றிச் சில பெயர்களை, கருத்துகளைத் தவிர்த்துவிட்டு உரை நிகழ்த்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது அரசமைப்புச் சட்டத்திற்கும், சட்டமன்ற மரபிற்கும் எதிரானது என்று சுட்டிக்காட்டிய பிறகு, சட்டமன்றக் கூட்ட நிகழ்வு முடிவற்கு முன்பே நாட்டுப்பண் இசைப்பதற்கு முன்பே வெளியேறினார்.

இணையவழி சூதாட்ட அவசரத் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநர் இரவி, அது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவாக அனுப்பப்பட்ட போது ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினார். இது இரவியின் அறியாமையா? அல்லது ஆணவப்போக்கா? என்று பலர் கண்டனம் தெரிவித்தனர். இத்தகையச் சூழலுக்குப் பிறகுதான் ஆளுநர் இரவியின் தொடர் மக்கள் விரோத அடாத செயல்களைக் கண்டித்துத் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இந்தத் தீர்மானம் காலையில் நிறைவேறியவுடன் மாலையில் இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், மற்ற சட்டமுன்வரைவுகள் அப்படியே ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மேலும், இந்திய ஆட்சிப் பணியில் தேர்வுப் பெற்றவர்கள். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், துணைவேந்தர்கள், கல்வியாளர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடும் நிகழ்வுகளும், கருத்தரங்கங்களும் தமிழ்நாட்டு அரசின் செலவில் நடைபெறுகிறது. இக்கூட்டங்களிலும் தொடர்ந்து சனாதன, மதவாதக் கருத்துகளைப் போற்றும் கருத்துகள் ஆளுநர் இரவியால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன், ஆளுநர் மாளிகைக்காகச் செலவிடப்படும் தொகை ஆண்டு தோறும் ரூ.50 இலட்சம் அதிகரித்து அளிக்கப்படுகிறது. அதில் ஆளுநரின் சிறப்பு நிதி என்ற தலைப்பில் ஒதுக்கப்பட்ட ரூ.18.38 கோடியில் ரூ.11.32 கோடிக்கு முறையான காட்டப்படவில்லை. இச்செலவு நிதியியல் கணக்குக் நெறிகளுக்கு எதிரானது என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆனால் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் சில இலட்ச ரூபாய் மட்டுமே சிறப்பு நிதி ஒதுக்கீடாக ஆளுநருக்கு வழங்கப்படுகிறது என்பதையும் சுட்டியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஆளுதருக்கு. மாதம் தோறும் சில இலட்சங்கள் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதைத் தவிர கோடி ரூபாய் சிறப்பு நிதி தேவைதானா? என்ற கேள்வியும் எழுகிறது. மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் தவிக்கும் சூழலில், ஆளுநருக்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு தொடர வேண்டுமா? ஆளுநருக்குப் பல நூறு ஏக்கர் நிலத்தில் குடியிருப்பு தேவையா? குளுகுளு உதகையில் ஆளுநருக்கு இன்னொரு மாளிகையா?

“கும்பி எரியுது, குடல் கருகுது,

கோலேந்திகளே உங்களுக்குக்

 குளுகுளு ஊட்டி ஒரு கேடா?”

என்று 1958இல் அறிஞர் அண்ணா எழுப்பிய கேள்விக்கு விடை காண வேண்டாமா?

1755ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் குழுமத்தின் ஆளுநராகப் பணியாற்றிய பிகாட் மீது அக்குழுமத்தின் உறுப்பினர்கள் ஆளுநர் நிதி முறைகேடு செய்தார் என்ற காரணத்திற்காக பிகாட்டைக் கைது செய்து இன்றைய சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைப் பகுதியில் சிறை வைத்தனர். ஆனால் இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, ஒரு குடியரசு நாட்டில், நிதி முறைகேடு செய்பவரைக் குறிப்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கும் எதிராகச் செயல்படும் ஆளுநர் இரவியை ஒன்றிய அரசு பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வளத்தை, வருமானத்தைச் சுரண்டியவர்கள்தான் கிழக்கிந்தியக் குழுமங்களின் ஆளுநர்கள். அந்தக் கொள்ளையடித்த பணத்தை மோசடி செய்தவர்களின் சின்னமாகத்தான் ஆளுநர் பதவி இருந்தது என்பதை வரலாற்றுப் பதிவுகளில் இருந்து நாம் அறிய முடிகிறது. விடுதலைப் பெற்ற இந்தியாவிலும், அரசமைப்புச் சட்ட வழியில், மக்களாட்சி முறை தொடரும் இக்காலத்திலும் ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் நிதி, பாலியல் உட்படப் பல குற்றச்சாட்டுகளில் சிக்குவதும் அவர்கள் பதவியில் தொடர்வதும் வெட்கக் கேடானது.

1986, 1993, 1996, 2002, 2009, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் பல பாலியல், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆளுநர்களை காங்கிரசு, பாஜக ஆட்சிகளில் ஒன்றிய அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. ஆனால், ஆளுநர் இரவியை இன்று வ்ரை பதவி நீக்கம் செய்யாமல் இருப்பது கூட்டாட்சியியல், அரசமைப்புச் சட்டம் ஆகிய நெறிகளுக்கும், மக்களாட்சி மாண்புகளுக்கும் எதிராகவே பிரதமர் நரேந்திர மோடியின் அரசு செயல்படுகிறது என்பதைத்தானே உணர்த்துகிறது.

நன்றி: ‘காக்கைச் சிறகினிலே’ (மே 2023)


No comments:

Post a Comment