கோலாலம்பூர் மலேசிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

கோலாலம்பூர் மலேசிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் உரை

 பெரியார் இயக்கத்தில் இளைய தலைமுறையினரையும் 

ஈடுபடுத்தி சிறப்பாகச் செயல்படுவீர்!

கோலாலம்பூர், ஜூலை 25 பவள விழா ஆண்டினைக் கடந்துள்ள மலேசியா திராவிடர் கழகத்தின் 77ஆம் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவாக மலேசியா வாழ் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஊக்கம் தரும் உரையினை ஆற்றினார்.

மலேசியா திராவிடர் கழகத்தின் 77ஆம் பொதுக் குழுக் கூட்டம் கோலாலம்பூர் மாநகரின் புகித் பின்டாங் பகுதி சங்கத் புகித் பின்டாங் சாலையில் உள்ள ஸ்டே வித் பின்டாங் விடுதி அரங்கில் 23.7.2023 அன்று மாலையில் நடைபெற்றது. பொதுக் குழுவின் நிறைவுரையினை தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றினார்.

தமிழர் தலைவருக்கு வரவேற்பு

பொதுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிட வருகை தந்த தமிழர் தலைவரை, மலேசியா திராவிடர் கழகத்தின் தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை, பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் மற்றும் பிற பொறுப்பாளர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். பொதுக் குழு நடைபெற்ற அரங்கில் தமிழர் தலைவர் நுழைந்ததும் அமர்ந்திருந்த 150க்கும் மேற்பட்ட தோழர்களும் அவர்தம் குடும்பத்தினரும் எழுந்து நின்று உற்சாகமாக வரவேற்றனர். மேடையில் அமருவதற்கு முன்பு தமிழர் தலைவர் - வந்திருந்த தோழர்கள் பக்கம் சென்று ஒவ்வொருவரையும் நலம் விசாரித்து, பழைய நாள் செய்திகளை - அவர்களுடனான பழைய சந்திப்புகளை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டார். பொதுக் குழுக் கூட்டம் தமிழர் தலைவர் வருகையால் குடும்ப விழாவாக மாறிப் போனது. மேடையில் அமர்ந்த பின் தமிழர் தலைவருக்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தலைவரும் பொதுச் செயலாளரும் சால்வை அணிவித்து சிறப்பித்தனர். பின்னர் ஒவ்வொரு மாநிலக் கிளையின் தலைவர்களும், தோழர்களும் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.

டத்தோ ச.த. அண்ணாமலைக்கு பாராட்டு - சிறப்பு

பொறுப்பாளர்களின் உரைக்குப் பின்னர் தமிழர் தலைவர் உரையாற்றிடும் பொழுது, மலேசிய திராவிடர் கழகத்தின் வரலாற்றில் அதன் பொறுப்பாளர்களில் ஒருவராகிய அதன் தலைவருக்கு - ச.த. அண்ணாமலை அவர்களுக்கு மலேசிய அரசாங்கம் "டத்தோ" பட்டம் அளித்தது வரலாற்றுப் பெருமைக்குரியது எனக் கூறி டத்தோ ச.த. அண்ணாமலை அவர்களை பாராட்டி சால்வை அணிவித்து தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

நிறைவுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தந்தை பெரியார் 1929இல் முதன் முதலாக  வந்த வெளிநாடு மலேசியாதான் என்பதைக் குறிப்பிட்டு அப்பொழுது மலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தமிழ் தொழிலாளர்களைச் சந்தித்து "சம்பாதிப்பதை சிக்கனப்படுத்தி செலவழியுங்கள் - பிள்ளைகளைப் படிக்க வைத்திடுங்கள்" என்று கூறியதை அப்படியே கடைப்பிடித்தனர் அந்தத் தலைமுறை மலேசியா வாழ் தமிழர்கள். 1954-இல் தந்தை பெரியார் அடுத்த முறை வந்த பொழுது தமிழர்களுக்கு தான் வழங்கிய அறிவுரையின் தாக்கத்தை நேரடியாகக் கண்டார். தமிழ்ப் பிள்ளைகள் படித்து நல்ல நிலைமையில் இருந்தனர். குறைந்து கொண்டு வந்த தமிழ்ப் பள்ளிகளின்  எண்ணிக்கை (நடத்திடுவது மலேசியா அரசு) தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மலேசியா நாட்டிற்கு வந்ததால் உயர்ந்து வரத் தொடங்கியது. இதுபற்றிய புள்ளி விவரங்களை மலேசிய அரசின் இன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவக்குமார் அவர்கள் கோலாலம்பூரில் நடைபெற்ற 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அரங்கிலேயே பிரகடனப்படுத்தினார்.

தந்தை பெரியாரின் அறிவுரையால் வளர்ந்த தமிழ்ச் சமூகம் இன்று மேலும் உயர்ந்துள்ள நிலையினைக் காண முடிகிறது. ஆனால் தந்தை பெரியாரின் கொள்கை வழி நடக்கின்றார்களா? என்ற வினாவிற்கு விடை மகிழ்ச்சியாக இல்லை. மலேசியா திராவிடர் கழகத்தின் மூத்த தோழர்கள், தங்களது குடும்பத்து இளைய தலைமுறையினரை இயக்கத்தில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்வும், பொருளாதார நிலையும் மேம்படுத்திட முனைந்திட வேண்டும். அடுத்த முறை சந்திக்கும் பொழுது இளைஞர்களை, மகளிரை ஏராளம் பார்க்க வேண்டும். அத்தகைய  வேண்டுகோளை வைத்திட விரும்புகிறோம் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கூறினார். (தமிழர் தலைவரின் முழுப் பேச்சு பின்னர் வெளிவரும்).

சிறப்பு அழைப்பாளர்கள் ரெ.சு. முத்தையா - நாகபஞ்சு ஆகியோருக்குப் பாராட்டு

பொதுக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற மலேசியா மனிதநேய திராவிடர் கழகத்தின் மதியுரைஞர் மானமிகு ரெ.சு. முத்தையா மற்றும் தலைவர் மானமிகு நாகபஞ்சு அவர்களுக்கு தமிழர் தலைவர் பட்டாடை அணிவித்து அவர்தம் செயல்பாடுகளைப் பாராட்டிச் சிறப்புச் செய்தார்.

பெரியார் பன்னாட்டமைப்பு, மலேசியா கிளை யின் தலைவர் மு. கோவிந்தசாமி அவர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.

பொதுக் குழுவில் மலேசியா திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம், துணைத் தலைவர் பாரதி, துணைச் செயலாளர் நாகேந்திரன் மற்றும் மாநிலத் தலைவர் குணாளன் ஆகியோரும் தமிழர் தலைவருடன் சென்றிருந்த திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோரும் உரையாற்றினர்.

கூட்டம் நிறைவடைந்த பின்னரும் வந்திருந்த தோழர்கள் அனைவரும் தமிழர் தலைவருடன் ஒளிப்படம் எடுத்துக் கொள்ள முனைப்பாக இருந்து மகிழ்ச்சி அடைந்தனர். பொதுவாக அனைவரது விருப்பத்தினையும், நிறைவேற்றி மலேசிய திராவிடர் கழகத் தோழர்களிடமிருந்து - கொள்கை உறவுகளிடமிருந்து தமிழர் தலைவர் விடை பெற்றுக் கிளம்பினார்.

No comments:

Post a Comment